"என்ன அண்ணாமலை".. மண்வாசனை மாறாத கலைஞன்.. நடிப்பை உயிர் மூச்சாக சிந்தித்த சகலகலா நடிகர் வினு சக்கரவர்த்தி
நடிப்பை மட்டுமே உயிர் மூச்சாக சிந்தித்த சகலகலா நடிகராக திகழ்ந்த வினு சக்கரவர்த்தி 35 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 1000 திரைப்படங்களுக்கு மேல் நடிக்க கலைஞர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தோன்றி தனது சகலகலா நடிப்பால் ரசிகர்கள் கவர்ந்திழுந்தவர் நடிகர் வினு சக்கரவர்த்தி. 1979 முதல் 2014 வரை 35 ஆண்டுகளுக்கு மேல் ஆயிரத்துக்கும் மேல் படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்த கலைஞனாக திகழ்ந்தார்.
வினு சக்கரவத்தியின் கலைப்பயணம்
சிறு வயதில் இருந்த படிப்பை காட்டிலும் நடிப்பில் ஆர்வமுடன் இருந்ததால், சொந்த ஊரில் நடக்கும் தெருக்கூத்துகளை ஒன்று விடாமல் பார்த்து வருபவராக இருந்துள்ளார். அப்பாவின் எதிர்ப்புகளை மீறு கூத்து கலைஞர்களிடம் நடிப்பை கற்று 8 வயதிலேயே மேடைய ஏறி நடிகராகியுள்ளார்.
இதைக்கண்ட அவரது தந்தை மகனின் எதிர்காலத்தை நினைத்து பத்து வயதில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தார். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார் வினு சக்கரவர்த்தி. படித்த காலகட்டத்தில் மேடை நாடகங்களில் விடாமல் தனது நடிப்பை தாகத்தை தீர்த்து கொண்ட இவர், ஆரம்பத்தில் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக சேர்ந்தார்.
அந்த பணி பிடிக்காமல் போக ரிசைன் செய்து விட்டு பின்னர் ரயில்வேயில் துணை ஆய்வாளராக சேர்ந்து மைசூரில் இடமாற்றம் செய்யப்பட்டார். அங்குதான் அவரது கலைப்பயணத்தை தொடருவதற்கான வாய்ப்பு அமைந்தது. கன்னட சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர் புட்டன்னா கனகல் உடனான சந்திப்பு வினுவின் தீராத ஆசையாக திகழ்ந்த சினிமாவுக்கு அவரை அழைத்து செல்ல காரணமாக அமைந்தது.
ரயில்வேதுறையில் பணியாற்றியபோது நாடகங்கள் எழுதி இயக்கி, நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த இவர், புட்டன்னா கனகல் உதவியாளராக இணைந்து துணை திரைக்கதாசிரியர் ஆனார். கன்னடத்தில் அவருடன் இணைந்து சில படங்களில் திரைக்கதை பணிகளில் ஈடுபட்டார். அப்போது புட்டன்னா கனகலிடம் பணியாற்றிய மற்றொரு தமிழராக இருந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
தமிழில் அறிமுகம்
கன்னடத்தில் வினு சக்கரவர்த்தி முதல் முறையாக பணியாற்றிய பரசங்கட கெண்டெதிம்மா தமிழ் ரீமேக்காக திருப்பூர் மணி என்ற தயாரிப்பாளர் பெற்றார். அவர்தான் வினு சக்கரவர்த்தியை தமிழுக்கு அழைத்து வந்தார்.
பரசங்கட கெண்டெதிம்மா படத்தை தமிழில் நடிகர் சிவக்குமார் 100வது படமாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற பெயரில் உருவாக்கினார்கள். இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியதுடன், முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்தார்.
அப்போது தொடங்கிய இவரது நடிப்பு பயணம் ரஜினி, கமல், அஜித், விஜய் என அடுத்தடுத்த தலைமுறை வரை தொடர்ந்தது. கிராமத்து பின்னணி அப்பா, ஊர் பெரியவர், வில்லன், குணச்சித்திரம் என அனைத்து வகை கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வினு சக்கரவர்த்தி, சிட்டி கதைகளுக்கு தான் பொருத்தமானவர் என்பதை நிருபிக்கும் விதமாக போலீஸ், அரசியல்வாதி, காமெடி என பன்முக கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சிலுக்கை கண்டெடுத்த கலைஞன்
வண்டிச்சக்கரம் என்ற படத்துக்கு திரைக்கதை எழுதிய இவர், ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் விஜயலட்சுமி என்ற பெண்ணை கண்டார். இந்த படத்தில் சாராயக்காரி வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என அவரை தேர்வு செய்து நடிக்க வைத்தார். ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா கலைஞர்களும் யார்ரா இந்த பெண் என மெய்சிலிர்ந்து ரசித்த சில்க் ஸ்மிதா தான்.
தி டர்ட்டி பிக்ஸர் படத்தில் சில்க் ஸ்மிதா சித்தரித்த விதத்தை பெரிய அளவில் விமர்சித்தவராக இருந்து வினு சக்கரவர்த்தி, சில்க் அடுத்த ஜென்மத்தில் தனது மகளாக பிறக்க வேண்டும் என மனதார பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சகலகலா நடிகர்
எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் தனது தேர்ந்த நடிப்பால் முத்திரை பதிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகவும் கவர்ந்த நடிகராக திகழ்ந்த வினு சக்கரவர்த்தி, அவருடன் இணைந்து 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதை வென்றவர், தமிழ், மலையாளம், தெலுங்கு என 1000 படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமைக்குரியவராக திகழ்கிறார் வினு சக்கரவர்த்தி.
தனித்துவமான கரகரத்த குரல், "ஆங்ங்" என்கிற இவரது உச்சரிப்பை மெமிக்ரி கலைஞர்களின் செல்லப்பிள்ளை ஆக்கியதோடு, புதிதாக குரல் மாற்றி பேசும் ஆர்வத்தையும் தூண்டியது. அத்துடன் இவரது சில பிரபலமான வசனங்கள் இன்றைய டிஜிட்டல் தலைமுறையினருக்கு மீம் மெட்டீரியலாக மாறியது. அண்ணாமலை படத்தில் இவர் பேசும் என்ன அண்ணாமலை வசனத்தின் மீம்ஸ் அதிகமாக சமூக வலைத்தலங்களில் உலா வருவதை பார்த்திருக்கலாம். அரசு அதிகாரியாக வாழ்க்கை பயணத்தை தொடங்கி நடிப்பு, கலை மீதான தீராக காதலால் தமிழ் சினிமாவின் சகலகலா நடிகராக ஜொலித்த வினு சக்கரவர்த்தி 79வது பிறந்தநாள் இன்று.
டாபிக்ஸ்