Y. G. Mahendran: பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல்.. தமிழ் சினிமாவின் பவர்புஃல் பிரபலம்.. ட்ரெண்டிங் நடிகர், பன்முக கலைஞன்
HBD Y. G. Mahendran: பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் தற்போது வரை தமிழ் சினிமாவில் ஐந்து தசாப்தங்களை கடந்த ட்ரெண்டிங் நடிகர், பன்முக கலைஞனாக இருப்பவர் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன். இவர் தனது பவள விழாவாக 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் பவர்புஃல் பிரபலமாக இருந்து வருகிறார்.
நாடக நடிகர், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர், பாடகர், இயக்குநர் என பன்முக கலைஞராக வலம் வருபவர் ஒய்.ஜி. மகேந்திரன். 1970களில் இருந்து தற்போது வரை ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக பல தலைமுறை ஹீரோக்களோடு இணைந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவராக உள்ளார். ஒய்.ஜி. மகேந்திரனும், அவரது குடும்ப உறவினர்கள் பலரும் சினிமாக்களில் பல்வேறு துறைகளில் கலை சேவை ஆற்றி வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், இசையைப்பாளர் அனிருத் உள்பட பல்வேறு பிரபலங்கள் ஒய்.ஜி. மகேந்திரன் உறவினர்கள் ஆவார்கள். அந்த தமிழ் வகையில் சினிமாவில் ஏராளமான நடிகர்களை உறவினர்களாக கொண்டிருக்கும் இவர் பவர்புஃல் பிரபலமாக திகழ்கிறார்.
கலைப்பயணம்
1952இல் சென்னை மாநகர் மெட்ராஸ் ஆக இருந்தபோது நகரின் முதல் நாடக ட்ரூப்பான யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் என்ற நாடக குழுவை நிறுவியவர்
ஒய்.ஜி. பார்த்தசாரதி. இவரது மகன் தான் ஒய்.ஜி. மகேந்திரன். ஒய்ஜிபி என்ற அழைக்கப்பட்ட ஒய்.ஜி. பார்த்தசாரதியின் நாடககுழுவில் இருந்து தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ஜொலித்த நாகேஷ் உள்பட பலரும் நடிகர்கள் ஆனார்கள்.
நாடக குடும்பத்தில் பிறந்த ஒய்.ஜி. மகேந்திரனுக்கு இயல்பாகவே நாடகத்தின் மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. பள்ளி, கல்லூரி நாள்களில் நாடகங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் படிப்பு முடிந்தவுடன் டீன் ஏஜ்ஜில் தனது தந்தையின் நாடக குழுவின் இணைந்து தனது கலைப்பயணத்தை தொடங்கினார். சில நாடகங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த நடிகராக பேசப்பட்டார்.
ஐந்து தசாப்தங்கள் பல ஹீரோக்களின் காமெடியன்
மேடை நாடகங்களில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வந்த ஒய்.ஜி. மகேந்திரன், மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கிய நவகிரகம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வசனங்களை மூக்கு வழியே உச்சரிக்கும் கண்டறிந்து அதன் மூலம் பிரபலமானார். இவர் நடித்த காலகட்டத்தில் காமெடியில் கலக்கி வந்த சோ. ராமசாமிக்கு போட்டியாக காமெடி வேடங்களில் கலக்கினார். ரஜினிகாந்த். கமல்ஹாசன் தொடங்கி அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித்குமார், விஜய், சிம்பு, தனுஷ் வரை ஐந்து தசாப்தங்களாக சினிமாக்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான தலைமை செயலகம், ஐந்தாம் வேதம் போன்ற வெப்சீரிஸ்களில் நடித்திருந்தார்.
பன்முக கலைஞன்
நடிகராக, நாடக கலைஞராக மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டாக இரு நிலவுகள் என்ற படத்தில் கமல்ஹாசனுக்கு டப்பிங் பேசியுள்ளார். இதுதவிர மேலும் சில படங்களில் டப்பிங் கலைஞராக பேசியிருக்கும் ஒய்.ஜி. மகேந்திரன், இயக்குநராக உறவுக்கு கை கொடுப்போம், கதை கதையாம் காரணமாம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான ஒய்.ஜி. மகேந்திரன் அவரை பற்றியும், அவரது நடிப்பை பற்றியும் பல்வேறு மேடைகளில் சிலாகித்து பேசுபவராக இருந்துள்ளார். சமீபத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் அரசியல்வாதியாக ஒய்.ஜி. மகேந்திரன் நடிப்பு வெகுவாக பாராட்டை பெற்றது. அதேபோல் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்திலும் பெண் குணத்தை வெளிப்படுத்தும் ஆணாக காமெடியில் கலக்கியிருப்பார்.
கரகரத்த குரலுடன் காட்சிக்கு ஏற்ற பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, எதார்த்தமாக காமெடியை வெளிப்படுத்தும் வல்லவராக இருந்து வருகிறார் ஒய்.ஜி. மகேந்திரன். தமிழில் பிளாக் அண்ட் ஒயிட் கால சினிமா முதல் தற்போதைய லேட்டஸ்ட் தொழிநுட்பம் வரை பார்த்த கலைஞனாகவும், ட்ரெண்டிங் நடிகராகவும் வலம் வரும் ஒய்.ஜி. மகேந்திரன் 75வது பிறந்தநாள் இன்று.
டாபிக்ஸ்