Veenai S.Balachander: தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக்.. த்ரில்லர் நாயகன்.. இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம் மானசீக குரு
Veenai S.Balachander Birthday: தமிழ் சினிமாவின் ஹிட்ச்காக் என போற்றும் விதமாக வித்தியாசமான த்ரில்லர் கதைகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் வீணை எஸ். பாலசந்தர். தமிழில் பாடல் இல்லாமல் வெளியான முதல் படத்தை இயக்கிய இயக்குநராக திகழ்கிறார்.

அடிப்படையில் வீணை இசை கலைஞரான எஸ். பாலசந்தர், தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தோடு வலம் வந்தார். வித்தியாசமான கதை, திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியதோடு, மேக்கிங்கில் புதுமை காட்டி ரசிகர்களை கவர்ந்த இவர், மறைந்த இயக்குநர் மகேந்திரன், முன்னணி இயக்குநர் மணிரத்னம் போன்ற பல்வேறு திரைப்பிரபலங்களுக்கே இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார்.
சிறுவயதிலேயே இசையிலும், நடிப்பிலும் முத்திரை
எஸ். பாலசந்தரின் தந்தை வழக்கறிஞராக இருந்தாலும் இசை மீது தந்தைக்கு இருந்த நாட்டம் இவரிடமும் ஒட்டிக்கொள்ள 7 வயிதிலேயே மேடை ஏறி இசை உலகில் புகழ் பெற்றார். 1932இல் சாந்தாராம் இயக்கத்தில் வெளஇயான சீதா கல்யாணம் படத்தில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக கூட்டத்தில் ஒருவனாக வந்தாலும் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்தில் இவரது தந்தை, அக்கா என குடும்பத்தினர் அனைவரும் நடித்திருப்பார்கள்.
12 வயசுல சிதார் கருவி வாசிச்சு தனிக்கச்சேரி நடத்தும் அளவில் திறன் பெற்ற எஸ். பாலசந்தர், அதன் பிறகு வீணை வாசிக்க பயிற்சி பெற்று வீணை கலைஞர் ஆனார். பாரம்பரியம் மிக்க கர்நாடக இசையை விட இந்துஸ்தானி, மேற்கத்திய இசையில் புலமை பெற்றவராக இருந்தார்.
