TM Soundarrajan Memorial Day: தமிழ் சினிமாவின் சிம்ம குரலோன்! எம்ஜிஆர், சிவாஜிக்கு தனது குரலால் வெற்றி திலகமிட்டவர்
TM Soundarrajan Memorial Day: சிம்ம குரலோன் என்று அழைக்கப்பட்டவர் மறைந்த பாடகர் டிஎம்எஸ் டி.எம். செளந்தரராஜன். சுமார் 6 தசாப்தங்கள் சினிமாவில் பாடகராக இருந்து, ஏராளமான ஹீரோக்களின் வெற்றிக்கு பாடல்களின் பின்னணி குரலாக ஒலித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜிக்கு தனது குரலால் வெற்றி திலகமிட்டவராகவும் உள்ளார்.

மதுரை மண்ணில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தவரான டிஎம்எஸ் சினிமா பாடல்கள், ஆன்மிகம், கர்நாடக சங்கீதம், என மொத்தம் 10,138 பாடல்களை பாடியுள்ளார். இவர் 3,162 திரைப்படங்களில் திரை இசை பாடல்களை பாடியிருக்கிறார்.
நடிப்பின் மீது ஆர்வம்
டிஎம்எஸ்க்கு நடிப்பின் மீது தான் ஆர்வம் இருந்துள்ளது. சிறு வயதில் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்த அவர், முறையாக இசையும் பயின்றார். மதுரையில் இயங்கி வந்த பல சினிமா கம்பெனிகளில் டிஎம்எஸ் நடிக்க வாய்ப்பு கேட்டிருந்த போதிலும், கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. நன்றாக பாடல் பாடிய அவருக்கு கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் பாடல் பாட வாய்ப்பு அளித்தது. அந்தப் படத்தில்தான் டிஎம்எஸ் தனது முதல் பாடலை பாடினார். இதில் இடம்பிடித்த ராதே நீ என்னை விட்டு ஓடாதடி என்ற புகழ்பெற்ற பாடல் உள்பட 5 பாடல்களை பாடினார். 1946இல் உருவான இந்த படம் 1950இல் தான் வெளிவந்தது
எம்ஜிஆர் - சிவாஜி வெற்றிக்கு காரணமாக இருந்த டிஎம்எஸ்
எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் தங்களது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தது ஒரு புறம் என்றாலும், அவர்களை பாடல் மூலம் மக்களின் மனங்களில் குடிபுக வைத்ததில் முக்கிய பங்கு டிஎம்எஸ்க்கு உண்டு.
குறிப்பாக எம்ஜிஆர், அரசியலில் தனியொரு அரிதாரம் பூச காரணமாக டிஎம்எஸ் அவருக்காக பாடிய உணர்ச்சி, கிளர்ச்சி ஏற்படுத்தும் பாடல்கள் இருந்துள்ளன. அதேபோல் சிவாஜியின் நடிப்பை இயல்பாக வெளிக்காட்டியதில் டிஎம்எஸ் பாடிய பாங்கும் முக்கிய பங்காற்றியது.
அந்த காலகட்டத்தில் ஹீரோவாக இருந்த ஜெமிணி கணேசன் தொடங்கி ரவிச்சந்திரன் வரையில் டிஎம்எஸ் குரலுக்கு வாய் அசைக்காத நடிகர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல ஹிட் பாடல்களை பாடியவராக உள்ளார்.
நடிகர்களின் குரலுக்கு ஏற்ப குரலை மாற்றி பாடுவதில் வல்லவரான டிஎம்எஸ், எம்ஜிஆர் உரத்த எனர்ஜி மிகுந்த குரலிலும், சிவாஜிக்கு மென்மையான குரலிலும் மாறுபடுத்தி பாடி தனியொரு பாணி கடைப்பிடித்தார்.
தமிழ் உச்சரிப்பில் தெளிவு
டிஎம்எஸ் குரல் வளத்துக்கு ஏற்ப தெளிவான தமிழ் உச்சரிப்பும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவே இருந்தது. பாடல் வரிகளை தெளிவாகவும், இசையின் ராகத்துடன் ஒன்றி பாடி கேட்பவர்களை முணுமுணுக்க வைக்கும் வித்தைக்காரராக இருந்துள்ளார்.
இவர் சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல், சுமார் 2,500 பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார். 1955 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை புகழின் உச்சத்தில் இருந்தார் டி.எம்.எஸ்.
முதல் மற்றும் கடைசி பாடல்
1946ம் ஆண்டு 24 வயதில் தனது முதல் பாடலைப் பாடினார். கடைசி பாடலை 88 வயதாக இருக்கும்போது பாடினார். திரையில் இவர் பாடிய முதல் பாடல் எம்.ஜி.ஆருக்காக ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தான் என்று கூறப்படுகிறது.
கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடலை இளம் பாடகர்களுடன் இணைந்து பாடினார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி. செளராஸ்ட்ரா மொழிகளிலும் இவர் பாடல் பாடியுள்ளார்.
கலா ரத்னம், சிங்கக் குரலோன், கான ரத்னம், அருள் இசை சித்தர், சாதனை சக்ரவர்த்தி, பாரதிய இசைக்கனல், கான குரலோன், பாடகர் திலகம், இசை சக்ரவர்த்தி போன்றவையெல்லாம் டிஎம்எஸ்க்கு ரசிகர்களால் வைத்த பெயர்கள்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்நாள் சாதனையாளர் விருது, முதல்வர் ஜெயலலிதா அங்கீகார விருது, எம்ஜிஆர் கோல்டு மெடல், பெல்ஜியத்தின் கவுரவ டாக்டர் பட்டம், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரை அங்கீகார விருது, தமிழக முதல்வர் மு. கருணாநிதி விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்திய அரசு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு டி.எம்.எஸ்.-ஐ கவுரப்படுத்தியுள்ளது. மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை கடந்த 2003ம் ஆண்டு இவருக்கு வழங்கி பெருமைப்படுத்தியது.
நெற்றியில் பட்டை, அதன் மீது வட்டமாக குங்குமம் அணிந்து தெய்வீகத் தோற்றத்துடன் இருப்பவர் டிஎம்எஸ். சென்னையில் மந்தைவெளி பகுதியில் இறுதி வரை வாழ்ந்து வந்த டிஎம்எஸ் 2013ம் ஆண்டு மே 25ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத காந்த குரலை கொண்டவரான டிஎம்எஸ் நினைவுநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்