Idichapuli Selvaraj: தமிழ் சினிமா கணக்குப்பிள்ளை கேரக்டர்.. வெகுளி சிரிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Idichapuli Selvaraj: தமிழ் சினிமா கணக்குப்பிள்ளை கேரக்டர்.. வெகுளி சிரிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர்

Idichapuli Selvaraj: தமிழ் சினிமா கணக்குப்பிள்ளை கேரக்டர்.. வெகுளி சிரிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 30, 2025 06:00 AM IST

Idichapuli Selvaraj Memorial Day: சிரிக்காமலோ அல்லது வெகுளித்தனமான சிரிப்பாலோ அனைவரையும் சிரிக்க வைத்த நடிகராக திகழ்ந்தார். பல இயக்குநர்களின் ஆஸ்தான நடிகராக திகழ்ந்த இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் கணக்குப்பிள்ளை, வேலைக்காரன் கதாபாத்திரங்களில் தோன்றி நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.

 தமிழ் சினிமா கணக்குப்பிள்ளை கேரக்டர்.. வெகுளி சிரிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர்
தமிழ் சினிமா கணக்குப்பிள்ளை கேரக்டர்.. வெகுளி சிரிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர்

எம்ஜிஆரின் தீவிர ரசிகர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவரான இவர், 1960 காலகட்டத்தில் எம்ஜிஆர் படங்களாலும். அவரது நடிப்பாலும் ஈர்கப்பட்டு திரைத்துறைக்கு வந்தவராக உள்ளார். எம்ஜிஆர் கிளாசிக் ஹிட் படமான ஆயிரத்தின் ஒருவன் படத்தில் சிறு வேடத்தில் நடித்த இவர், பின்னர் மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மறுபடியும் எம்ஜிஆர் படமான ஒளிவிளக்கு படத்தில் நடித்தார்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்ததாலோ என்னவோ மற்ற நடிகர்களின் படங்களின் நடிக்க வரும் வாய்ப்புகளை இவர் ஏற்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து எம்ஜிஆரின் ராமன் தேடிய சீதை, பட்டிக்காட்டு பொன்னையா, நினைத்ததை முடிப்பவன், உழைக்கும் கரங்கள் என நடித்து முத்திரை பதித்தார்.

இதையடுத்து எம்ஜிஆர் அதிமுக கட்சியை தொடங்கி சினிமா நடிப்பதில் இருந்து குறைத்து கொண்ட நிலையில் தான் அவர் இல்லாத மற்ற ஹீரக்களின் படங்களில் தலை காட்ட தொடங்கியுள்ளார்.

காமெடியில் கலக்கிய இடிச்சபுளி செல்வராஜ்

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எம்ஜிஆர் படங்களில் மட்டும் நடித்து வந்த இவர், அவரது உதவி இயக்குநராகவும் இருந்துள்ளார். எம்ஜிஆருக்கு பின்னர் இவர் நடித்த ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என சொல்லப்படுகிறது. அவரது தர்ம யுத்தம் படத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்கிய, அதன்பின் ரஜினி படங்களில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். இவர் தொடர்ந்து காமெடி, குணச்சித்திர வேடங்களில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தினார். சோலோ காமெடியனாக இல்லாவிட்டாலும் மற்ற நடிகர்களுடன் இவர் வெளிப்படுத்திய காமெடிய மக்களை ரசிக்க வைக்கும் விதமாக இருந்தது. குட்டையான தோற்றம் கொண்டவராக இருக்கும் இடிச்சபுளி செல்வராஜ் டயலாக் டெலிவரி, பாடிலாங்குவேஜ், குறிப்பாக வித்தியாசமான, குறும்புத்தனமான முகபாவணைகளை ரசிகர்களை சிரிக்க வைப்பவராக இருந்துள்ளார்.

கவுண்டமணி காம்போ

ஏராளமான துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இடிச்சபுளி செல்வராஜ், 1980களின் இறுதியிலும், 90களின் தொடக்க காலத்தில் கவுண்டமணி காம்போவுடன் செய்து லூட்டி ரசிகர்களால் மறக்க முடியாதவையாக இருக்கின்றன. சிரிக்காமலும் அல்லது வெகு தனமான சிரிப்புடன் காமெடி செய்வதில் வல்லவராக இருந்துள்ளார்.

சின்ன வாத்தியார் படத்தில் காது கேளாதவராக வரும் இடிச்சபுளி செல்வராஜுடன் கவுண்டமணி நடத்தும் உரையாடல் எப்போதும் சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருக்கும். அதேபோல் பெரிய மருது, ஜெய்ஹிந்த், நான் பெத்த மகனே, தேடினேன் வந்தது என இந்த காமெடி காம்போ வயிற்றை புண்ணாக்கும் விதமாக சிரிக்க வைத்திருப்பார்கள்.

இயக்குநர்களின் ஆஸ்தான நடிகர்

பல இயக்குநர்களின் கம்பெனி ஆர்டிஸ்ட் போல் அவர்களின் படங்களில் தவாறாமல் இடம்பிடிக்கும் ஆஸ்தான நடிகராகவும் இருந்துள்ளார் இடிச்சபுளி செல்வராஜ். அந்த வகையில் ஆர். சுந்தரராஜன், கே.எஸ். ரவிக்குமார் படங்களில் ஏதேனும் கதாபாத்திரத்தில் தோன்றுபவராக இருந்துள்ளார். கே.எஸ். ரவிக்குமாரின் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகராக உள்ளார்.

பெரும்பாலான படங்களில் கணக்குபிள்ளை, விசுவாசமான வேலைக்காரன் கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக நடித்த அனைவரின் படத்திலும் தலை காட்டியுள்ளார். மறைந்த காமெடி நடிகர் பாண்டுவின் அண்ணனான இவர் அஜித்தின் வரலாறு படத்தில் அவரது வீட்டின் வேலைக்காரனாக வந்திருப்பார்.

இதன் பின்னர் சில படங்களில் நடித்த இடிச்சபுளி செல்வராஜ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் காலமானார். ஜனவரி 30ஆம் தேதி, 2012இல் உயிரிழக்கும்போது அவருக்கு வயது 72 . திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு விதமான கதாபாத்திரங்களால் மக்களை மகிழ்வித்த கலைஞனாக இருந்து வந்த இடிச்சப்புளி செல்வராஜ் 13வது நினைவு நாள் இன்று.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.