Sirkazhi Govindarajan: மனம் கவரும் பக்தி, சினிமா பாடல்கள்.. நவரச உணர்வுகளை காந்த குரலால் ஈரக்க வைத்த இசை கலைஞன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sirkazhi Govindarajan: மனம் கவரும் பக்தி, சினிமா பாடல்கள்.. நவரச உணர்வுகளை காந்த குரலால் ஈரக்க வைத்த இசை கலைஞன்

Sirkazhi Govindarajan: மனம் கவரும் பக்தி, சினிமா பாடல்கள்.. நவரச உணர்வுகளை காந்த குரலால் ஈரக்க வைத்த இசை கலைஞன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2025 06:00 AM IST

Sirkazhi Govindarajan: பக்தி, சினிமா பாடல்களின் மூலம் நவரச உணர்வுகளை காந்த குரலால் ஈரக்க வைத்த இசை கலைஞனாக திகழ்ந்தவர் சீர்காழி கோவிந்தராஜன். தமிழ் மக்களின் மனதை கவர்ந்த இசைக்கலைஞர்களின் முக்கியமானவராக இருந்து வருகிறார்.

 மனம் கவரும் பக்தி, சினிமா பாடல்கள்.. நவரச உணர்வுகளை காந்த குரலால் ஈரக்க வைத்த இசை கலைஞன்
மனம் கவரும் பக்தி, சினிமா பாடல்கள்.. நவரச உணர்வுகளை காந்த குரலால் ஈரக்க வைத்த இசை கலைஞன்

சிறு வயதில் ஒட்டிக்கொண்ட இசை ஆர்வம்

சீர்காழியில் சிவசிதம்பரம் - அவையாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சீர்காழி கோவிந்த ராஜனுக்கு சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. தனது தந்தை நடத்திய ராமாயண இசை நாடகத்தில் பாடல்கள் பாடி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹீரோக்களான தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் பாடல்களை ஒரு முறை கேட்டாலே அப்படியே அவர்களை போல் பாடுவதில் வல்லமை பெற்றவராக இருந்தார். இவர் தனது முதல் பாடலை தனது எட்டு வயதில் திரிபுரசுந்தரி கோயிலில் பாடினார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து துணை நடிகராகவும் நடிப்பில் கலக்கி வந்த இவருக்கு, இசையமைப்பாளர் ராமநாதனுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரின் ஆலோசனை படி இசை ஆர்வம் மிகுதியால் சென்னை இசைக்கல்லூரியில் கல்வி பயின்றார். இதையடுத்து 1949இல் இசை மணி பட்டம் பெற்ற இவர், சுவாமிநாத பிள்ளையிடம் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றார். அவரை தனது குருவாக பாவித்து, அவரின் ஆலோசனைபடி இசையில் மேற்கொண்டு படித்து சங்கீதவித்வான் பட்டமும் பெற்றார்.

குருநாதர் காட்டிய வழி

இசையை போல் நடிப்பு மீது ஆர்வம் இருந்த சீர்காழி கோவிந்தராஜன் தேவி நாடகசபா, பாய்ஸ் நாடக கம்பெனிகளில் பணியாற்றி சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நடிப்பு, இசை என இவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்க 20வது வயதில் சினிமாவில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. மேடைகளில் கர்நாடக இசை பாடல்களை பாடி வந்த இவர் சினிமாக்களில் பாடல் பாடம் ஆரம்பத்தில் தயக்கம் ஏற்பட, தனது குருவான சுவாமிநாத பிள்ளையை சரணடைந்தார். அப்போது அவர் சினிமா பாடல்கள் மூலமும் பல நல்ல கருத்துகளை கூறலாம் என குரு உற்சாகப்படுத்த, சினிமா பாடல்களை பாட தொடங்கினார்.

அப்படித்தான் பக்தி பாடல்களின் பாடகராக இருந்து வந்த இவர், குருநாதர் காட்டிய வழியை பின்பற்றி சினிமா பாடகராக உருவெடுத்தார். இவரது காந்த குரல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த மிகவும் பிரபலமானது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் பாடல்களை பாடினார். எம்ஜிஆர், ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், என்டிஆர் போன்ற முன்னணி ஹீரோக்களின் பின்னணி குரலாக ஒலித்து ரசிகர்களை கவர்ந்தார். ஹீரோக்கள் மட்டுமல்லாமல் நாகேஷ், ஆர். எஸ். மனோகர், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் போன்ற காமெடி, வில்லன் நடிகர்களுக்கு தனது அற்புத குரலால் பாடல் பாடியுள்ளார்.

அதேபோல் அந்த காலகட்டத்தில் இசையமைப்பாளராக, பாடகர்களாக இருந்த பெரும்பாலோனரோடு இணைந்து பாடல் பாடிய பெருமையை பெற்றார். அனைத்து மொழிகளிலும் சேர்த்து 900க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் சீர்காழி கோவிந்தராஜன் விநாயகர், முருகர் பக்தி பாடல்களும், இஸ்லாமிய பக்தி பாடல்களும் பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

குறிப்பாக விநாயகர் பற்றிய பாடல்களான விநாயகனே வினை தீர்ப்பவனே, கனபதியே வருவாய், அறுபடை வீடு கொண்ட திரு முருகா, திருச்செந்தூரில் கடலோரத்தில் போன்ற பாடல்கள் இவரது குரலில் தான் ஒலிக்கும் பாடலாக உள்ளது.

விருதுகளின் மன்னன்

நடிப்பிலும் ஆர்வம் மிக்கவராக இருந்த சீர்காழி கோவிந்தராஜன் கந்தன் கருணை, அகத்தியர், திருமலை தென்குமரி, தசாவதாரம் போன்ற பல பக்தி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

1964இல் வெளிவந்த கர்ணன் படத்தின் மொத்த கதையையும் சொல்லும் விதமாக அமைந்த கண்ணதாசன் வரிகளில் அமைந்த "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" என்ற பாடலை உருக்கமாக பாடி மயக்கியிருப்பார் சீர்காழியார். விநாயகர், முருகன் பக்தி பாடல்களை அதிக அளவில் பாடியுள்ள இவர் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.

இசை அரசு, இசை கடல், கலைமாமணி, இன்னிசை வேந்தன், இசை திலகம், தமிழ் இசை மன்னர், இசை பேரறிஞர் என பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருந்து வரும் சீர்காழி கோவிந்தராஜனுக்கு 1983இல் பத்மஶ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. அதிமுக கட்சியின் சிக்னேச்சர் பாடலாக ஒலிக்கும் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெறும் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் பாடலை சீர்காழியார் தான் தனது அற்புத குரலில் பாடியிருப்பார்.

பக்தி, வீரம், கம்பீரம், காதல், தத்துவம், துயரம், மகிழ்ச்சி, சோகம், ஆச்சர்யம் என நவரச உணர்வுகளையும் நமக்குள் தனது குரலால் கடத்தி தலைமுறை கடந்தும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் அற்புத பாடகராக இருந்து வரும் சீர்காழி கோவிந்த ராஜன் 92வது பிறந்தநாள் இன்று.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.