HBD Sowkar Janaki: காமெடி, சோகம் இரண்டிலும் கலக்கிய காவியத் தலைவி.. நடிகை 'ஜானகி', 'செளகார் ஜானகியாக' மாறியது எப்படி?
1950களில் துவங்கிய செளகார் ஜானகியின் திரைப்பயணம், சிறிய இடைவெளிக்குப் பிறகு, கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவான `தம்பி’ படத்திலும் நடித்துள்ளார். வயது மற்றும் மொழி எல்லைகளைத் தாண்டி சினிமாவில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.
காமெடி, சோகம், மிடுக்கான நடை என பல்வேறு கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்து திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை செளகார் ஜானகி. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினி காந்த், கமல் ஹாசன் என உச்ச நட்சத்திரங்களுடன் திரைப்பயணத்தை பகிர்ந்துகொண்டவர். வயது மற்றும் மொழி எல்லைகளைத் தாண்டி சினிமாவில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.
பிறப்பு
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று பிறந்தார். வெங்கோஜிராவ் மற்றும் சச்சிதேவி தம்பதியருக்கு மகளாக பிறந்த இவரது இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி. ஆரம்ப கல்வியை சென்னை சாராத வித்யாலயாவில் முடித்தார்.
ரேடியோவில் அறிமுகம்
தனது 15-வது வயதிலேயே சென்னை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றினார். இவரது குரலை கேட்ட பிரபல சினிமா தயாரிப்பாளர் 'குணசுந்தரி கதா' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அணுகினார். அப்போது அவரது குடும்பத்தார் மறுத்து ஜானகிக்கு, உறவுக்காரப் பையனுடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
முதல் படமே என்டிஆருடன்..
இளம் வயதிலேயே திருமணம் முடிந்து, 18 வயதில் குடும்ப சூழலால் திரைத்துறைக்கு வந்தார். பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் தயாரிப்பில் முதல் படத்தில் நடித்தார். அதில், நாயகன் யார் தெரியுமா? ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். அவர் நாயகனாக நடித்த 'சவுக்கார்' படத்தின் நாயகி இந்த ஜானகி தான். 1950ல் அந்த படம் வெளியானபோது, வி.என்.ஜானகி (எம்ஜிஆரின் மனைவி)யும் ஹீரோயினாக இருந்ததால் பெயர் வித்தியாசத்துக்காக 'சவுக்கார்' படத்தின் பெயரையும் இணைத்து இவர் செளகார் ஜானகி ஆகி விட்டார்.
தேடி தேடி வந்த வாய்ப்புகள்
தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் என முன்னணி நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. அற்புத நடிப்பாற்றல், அபாரமாக வசனம் பேசும் திறன் என பல பரிமாணங்களில் வலம் வந்தார். 'பாக்கியலட்சுமி', 'படிக்காத மேதை', 'பாலும் பழமும்' என பீம்சிங்கின் பல வெற்றிப் படங்களில் முத்திரை பதித்தார். 'பார் மகளே பார்', 'புதிய பறவை', 'நீர்க்குமிழி', 'பாமா விஜயம்', 'எதிர் நீச்சல்', 'இரு கோடுகள்', 'தில்லுமுல்லு' உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தன. தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 380-க் கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொடரும் திரைப்பயணம்
1950களில் துவங்கிய செளகார் ஜானகியின் திரைப்பயணம், சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2014ல் வெளியான 'வானவராயன் வல்லவராயன்' கடந்து, சந்தானம் நடிப்பில் 2020 வெளியான 'பிஸ்கோத்' படம் கடந்தும் தொடர்கிறது. கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவான `தம்பி’ படத்திலும் நடித்துள்ளார். வயது மற்றும் மொழி எல்லைகளைத் தாண்டி சினிமாவில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.
பத்ம ஸ்ரீ விருது
தென்னிந்தியத் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகையாக விளங்கிய பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் கலை சேவையை பாராட்டும் வகையில் பத்ம ஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
தனது வயதுக்கேற்ற பாத்திரங்களை யார் கொடுத்தாலும் இப்பவும் நடிக்க தயார் என்கிறார். ஆறு தலைமுறை கண்டவர். 75 ஆண்டு திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர் என பன்முக திறமை கொண்ட ஜானகி இன்று (டிசம்பர் 12) தனது 94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தென்னிந்திய திரையுலகின் பொக்கிஷம் செளகார் ஜானகிக்கு இந்துஸ்தான் தமிழ் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
டாபிக்ஸ்