சென்னை 28 -ல் பிடித்த அஜித்தின் வலது கரம்; வளர்ந்த பின்னர் கமிட்மெண்டை காரணம் காட்டிய வெங்கட் பிரபு- உறவு உடைந்த காரணம்
சென்னை 28 படத்தில் இருந்து அஜித் வெங்கட் பிரபு - விற்கு அஜித் கொடுத்த ஆதரவை அவரே பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அஜித் வெங்கட் பிரபு கூட்டணி மீண்டும் சேராததற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.
சென்னை 28 -யில் பிடித்த கரம்
இது தொடர்பாக ப்ரோவோக் யூடியூப் சேனலுக்கு பேசிய வெங்கட் பிரபு, ‘சென்னை 28 படத்தைப் பார்த்த அஜித் சாருக்கு, அந்தப்படம் மிகவும் பிடித்து விட்டது. இதனையடுத்து, அப்போதே அவருடன் நான் படம் செய்வதற்காக, அவர் என்னை ஒரு தயாரிப்பாளரிடம் அனுப்பினார்; ஆனால், அந்த தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய ஸ்டாரை நான் வைத்து, எடுத்து விடுவேனா என்ற சந்தேகம் இருந்தது; அதனால் அப்போது அந்த படம் நடக்கவில்லை. ஆனால் அஜித் சார் என் மீது வைத்த நம்பிக்கையை விடவே இல்லை.
சரோஜா படம் வெளியான பின்னரும், அவர் நான் அவருடன் படம் செய்வதற்கு இன்னொரு தயாரிப்பாளரிடம் அனுப்பினார். ஆனால் அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை; இதனையடுத்து தான் நாங்கள் மங்காத்தா திரைப்படத்தில் இணைந்தோம். அந்தப்படத்திற்கு பிறகு நானும் அவரும் இணைவதற்கு பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் என்னுடைய கமிட்மெண்டில் கொஞ்சம் பிசியாக இருந்தேன். அதனால் அவருடன் என்னால் படம் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, அவர் என் மீது கோபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடன் நான் படம் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். அழைப்புக்காக காத்திருக்கிறேன்’ என்று பேசினார்.
அஜித்துடன் மங்காத்தா திரைப்படத்தில் வெங்கட் பிரபு இணைந்தார். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது; அஜித்குமாருக்கும் அந்தப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முழுக்க, முழுக்க வில்லனாக அஜித் குமார் மங்காத்தா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்தப்படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் இணைவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தக்கூட்டணி இணையவே இல்லை. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அஜித் வெங்கட் பிரபு மீது கோபமாக இருப்பதாகவும், அதன் காரணமாகவே வெங்கட் பிரபுவை தன் அருகில் நெருங்கவிட வில்லை என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், அதனை அவரே விளக்கி இருக்கிறார்.
சினிமா பயணம்
இசைஞானி இளையராஜா சகோதரரும், பாடலாசிரியர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முக கலைஞராக தமிழ் சினிமாவில் வலம் வந்த கங்கை அமரன் மூத்த மகனான வெங்கட் பிரபு, தனது தந்தையை போல் கலை உலகில் தனது திறமையை நிருபிக்க விரும்பினார்.
சினிமாவில் ஹீரோவாக தனது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என சில முயற்சிகள் எடுத்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தில், ஜி, சிவகாசி, தம்பி, உன்னைச் சரணடைந்தேன், ஜி போன்ற சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.
மலேசியாவில் இசை ஆல்பம் இயக்கிய இவருக்கு சினிமா இயக்கம் மீது ஆர்வம் தொற்றிக்கொள்ள, 2007ஆம் ஆண்டு 11 புதுமுகங்களை வைத்து கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து இயக்கிய சென்னை 600028 மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது. இந்த படம் வெளியான ஆண்டில் தான் இந்தியா முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரை தோனி தலைமையில் வென்றது. எதார்த்த காமெடியுடன் அமைந்திருந்த அந்த படத்தின் பார்முலா கெட்டியாக பிடித்து கொண்ட அவர், அதன் பிறகு தனது எல்லா படங்களிலும் அதை அப்ளை செய்து வெற்றிகரமாக இயக்குநராக உருவெடுத்தார்.
வெங்கட் பிரபு படங்கள்
ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ் என எந்த ஜானரில் படம் வெங்கட் பிரபு இயக்கினாலும் அதில் மையமாக காமெடியை வைத்திருப்பார். இதேபோல் அவரது படங்களில் மற்றொரு அம்சமாக கிரிக்கெட் விளையாட்டும் ஏதாவதொரு வகையில் இடம்பிடித்திருக்கும். இவரது இரண்டாவது படமாக நகைச்சுவை கலந்த த்ரில்லர் பாணியில் உருவான சரோஜா பாக்ஸ் ஆபிஸில் கல்லாகட்டியது. அதன் பின்னர் இவர் இயக்கியா ரெமாண்டிக் காமெடி கோவா சராசரி வெற்றியை பெற்றது.
டாப் நடிகரான அஜித்தின், 50வது படம் என்கிற மைல்கல் படமான மங்காத்தா தனது கிரிப்பிங்கான திரைக்கதை மூலமும் இயக்கிய வெங்கட் பிரபு மாபெரும் வெற்றியை கொடுத்தார். அதன்பின், இவர் கார்த்தியை வைத்து இயக்கிய பிரியாணி, சூர்யாவை வைத்து இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி ஆகியவை சுமாரான வெற்றியைப் பெற்றன.
மீண்டும் சென்னை 600028 மூலம் கம்பேக்
அடுத்தடுத்து இரண்டு படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் அவ்வளவுதான் வெங்கட் பிரபு. அவரது ட்ரெண்ட் காலாவதியாகிவிட்டது என பேசப்பட்ட நேரத்தில் தனக்கு முகவரி கொடுத்த சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகம் மூலம் கம்பேக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தார்.
தொடர்ந்து மன்மத லீலை என்ற ஏ சர்ட்டிபிக்கேட் படத்தையும், தெலுங்கும் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி அட்டர் பிளாப் கொடுத்த நிலையில், தளபதி விஜய்யை வைத்து தி கோட் படத்தை உருவாக்கி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக்கொடுக்க காரணமான இயக்குநரானார்.
டாபிக்ஸ்