11 Years of Aravan: நடுக்கல் வழிபாடு… தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அரவான்!
தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, திருட்டை தொழிலாக கொண்ட சமூகம், நடுக்கல் வழிபாடு என ஆதிதமிழர்களின் வாழ்க்கை முறையை கண்முன்னே கொண்ட தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அரவான் படம் உள்ளது.
தமிழ் சினிமாவில் நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளியான படங்களில் முக்கியமானதாக வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி, பசுபதி பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகி கவனத்தை ஈர்த்த படமான அரவான் உள்ளது. பண்டைய தமிழர்களிடையே நடுக்கல் வழிபாடானது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த முறையாகவே இருந்து வந்தது.
ஊர் மக்களுக்காகவும், அவர்களின் நன்மைக்காகவும் தனது உயிரை பலி கொடுக்கும் நபர்கள் அந்த ஊராரால் தெய்வமாக வழிபாடு செய்யப்பட்டார். சைவம், வைணவம் போன்ற சமயங்களில் உள்ள கடவுளர்களின் வழிபாடுகளுக்கு முன்னர் தமிழர்கள் மத்தியில் இதுபோன்று ஊர் நலனுக்காக உயிரை மாய்த்துக்கொண்ட மனிதர்கள் கடவுளுக்கு இணையாக பாவித்து வணங்கப்பட்டார்கள். அவ்வாறு தனது உயிரை பலி கொடுப்பவர்கள் அரவான் என்று அழைக்கப்படுகிறார்கள். இதிகாச கதைகளில் அரவான் பற்றிய பல்வேறு கதைகள் உண்டு.
சினிமாக்களில் ஹீரோக்களை காட்டிலும் வில்லன்களை ஹீரோவாக கொண்டாடும் ட்ரெண்ட் தற்போது அதிகரித்துள்ள நிலையில், ஹீரோக்கள் பலரே வில்லத்தனம் மிக்க கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் பண்டைய தமிழர்களில் திருட்டு தொழிலை வாழ்க்கையாக கொண்ட ஒரு சமூகத்தை பற்றி கூறும் விதமாக இந்த அரவான் படத்தின் கதையம்சம் அமைந்திருக்கும். பிரபல எழுத்தாளரும், மதுரை மாநிலங்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் என்ற நாவலில் உள்ள ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் அமைந்திருந்தது.
மன்னர் காலத்துக்கு பிறகு பாளையத்துக்காரர்கள் ஆட்சி முறையில் வாழ்ந்து வந்து தமிழ் சமூகம், அவர்களின் தெய்வ வழிபாடு, நம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் எடுத்துரைக்கும் விதமாக காட்சிகளோடு, இயக்குநர் வசந்தபாலனின் கற்பனையும் சேர்ந்து இந்தப் படம் உருவானது. எத்தனையே வரலாற்ற படங்கள் வெளிவந்திருந்தாலும், அரவான் படத்துக்கு தனித்துவம் உண்டு என்று சொல்லும் விதமாக படத்தின் மேக்கிங் இருந்தது.
திருட்டை தொழிலாக வைத்திருக்கும் கிராமத்தினர், காவலை தொழிலாக கொண்டிருக்கும் கிராமத்தினர் என இரு துருவங்களாக இருக்கும் கதைக்களம் அதன் பின்னணியில் பல்வேறு டுவிஸ்டுகள், கிளைக்கதைகளுடன் கூடிய திரைக்கதையும், காட்சியமைப்பும் ரசிகர்களை அரவான் படத்தை கவர வைத்தது.
படத்தின் முதல் பாதி, திருட்டை தொழிலாக கொண்டிருக்கும் பசுபதியின் கூட்டத்தில் ஆதி சேர்ந்துகொண்டு திருட்டில் ஈடுபடுவது என செல்லும் கதை, இரண்டாம் பாதியில் ஆதி யார்? அவரது பின்னணி? என்ன என்று கதை விரியும். இதில் பாளையக்காரர்களின் சூழ்ச்சியால் ஆதிக்கு உயிருக்கு நிகழும் ஆபத்து, அதிலிருந்து அவர் தப்பிப்பபது என பரபரக்கும் விதமாக செல்லும் திரைக்கதை, இறுதியில் ஆதி கொலை செய்யப்பட்டு அரவானாக மாறும் விதமாக கணத்த கிளைமாக்ஸில் படம் முடிவடையும்.
படத்தின் வசனங்கள், தமிழர்களின் வாழ்க்கை முறையை கண்முன்னே நிறுத்தும் விதமாக அமைக்கப்பட்ட தற்போதைய நவநாகரிங்களின் எச்சங்கள் கண்ணில் படாத செட்கள், ஆடைவடிவமைப்பு என ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளித்தன.
சுமார் 500 பக்கங்களுக்கு மேல் உள்ள காவல் கோட்டம் நாவலின் 10 பக்கத்தின் சுருக்கம்தான் அரவான் படமாக உருவாக்கப்பட்டிருந்தது என்றாலும், அதன் திரைக்கதையின் ஆழம் பார்வையாளர்களை 18ஆம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்லும் விதமாகவே இருந்தது. 2012ஆம் ஆண்டில் இதேநாளில் வெளியான அரவான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் தலை தப்பியது. அத்துடன் படம் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியது.
இதனால் தமிழ் சினிமாவில் வெளியான வரலாற்று படங்களில் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்த படமாக அரவான் அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதுடன், பின்னனி இசையும் பேசப்பட்டது.
இந்த படத்துக்காக ஆதி, பசுபதி உள்பட இதர நடிகர்கள் வெளிப்படுத்திய உழைப்பு பாராட்டுகளை பெற்றாலும் விருது போன்ற அங்கீகாரத்தை பெறாமல் போனது துர்தர்ஷவசமாகவே அமைந்தது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்தப் படம் பெரிய அளவில் கொண்டாடப்படாமல் அன்பே சிவம், ஆயிரத்தில் ஒருவன் வரிசையில் இணைந்த தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளது.
டாபிக்ஸ்