Vanangaan Review : ‘விட்டதை பிடித்தாரா பாலா? தொட்டதில் ஜெயித்தாரா அருண் விஜய்?’ வணங்கான் விமர்சனம்!
‘வழக்கம் போல, பாலாவுக்கான வன்முறை படம் முழுக்க பரவிக்கிடக்கிறது. அவ்வபோது வந்து விழும் அவரிக்கே உரித்தான ராவான கவுண்டர்கள் தியேட்டரை சிரிக்க வைக்கிறது; ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமான மொழியில் நடிக்க வைத்திருப்பது கவனம் ஈர்த்து இருக்கிறது’

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கெரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார்.
இதனையடுத்து அவர் அருண்விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து இருக்கிறார். இந்தப் படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
க்ரைமில் தொடங்கும் கதை
காது கேளாத வாய் பேச முடியாத ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டி (அருண் விஜய்) வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள சிலர், அங்கிருக்கும் கண் தெரியாத பெண்பிள்ளைகள் குளிப்பதை பார்த்துவிட, அவர்களில் இருவரை கொடூரமாக கொன்று காவல்நிலையத்திலும் ஆஜராகி விடுகிறார் கோட்டி! அதன் பின்னர் என்ன ஆனது? அவன் என்ன காரணத்திற்காக அந்த கொலையை செய்தான் என்று நீதிமன்றமும், காவல்துறையும் துருவி, துருவி கேட்கிறது. அதற்கு கோட்டி பதில் சொன்னானா இல்லையா என்பது தான் படத்தின் கதை!