எள்ளி நகையாடிய நெட்டிசன் கூட்டம்; நான் உங்களுக்கு ‘பாலா மாமா’ வா?; வர்மா வசைகளுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் பாலா
வர்மா படத்தின் போது பாலாவை சோசியல் மீடியாவில் ‘ பாலா மாமா’ என்று கிண்டலடித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பாலா பதிலடி கொடுத்திருக்கிறார்.
வர்மா படத்திற்கு எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் பாலா பதிலடி கொடுத்திருக்கிறார்.
பெரிதாக பாதிக்காது
இது குறித்து பாலா பேசும் போது, ‘என்னைப் பற்றிய விமர்சனங்களை நான் பெரிதாக கண்டு கொள்வதில்லை; அதற்காக சோசியல் மீடியாவை பார்க்கவே மாட்டேன் என்று கூற மாட்டேன். நிச்சயமாக அதில் இருக்கும் கமெண்டுகளை பார்ப்பேன். ஆனால், அது எதுவும் என்னை பெரிதாக பாதிக்காது.
என்னை நான் மாற்றிக்கொள்ள
என்னுடைய படத்தின் ட்ரெய்லரோ, டீசரோ வெளியாகும் போது, அதற்கு நிச்சயமாக கமெண்டுகள் வரும். நான் கேட்பது, டீசருக்கு தவறான கமெண்ட்கள் எவ்வளவு வந்திருக்கிறது, எப்படி வந்து இருக்கிறது என்பதைத்தான். அது என்னை நான் மாற்றிக்கொள்ள உதவும். அதைக் கேட்டு கண்டுகொள்ளாமல் விடுவது என்பது வேறு. ஆனால், மொத்தமாகவே அதனை உதாசீனப்படுத்தக் கூடாது. அதனைக்கேட்டு தெரிந்து கொண்டு, அதன் பின்னர் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்.
நான் கேட்க மாட்டேன்
பொதுவாக யார் எதைச் சொல்லியும், நான் எதையும் மாற்றிக் கொண்டதில்லை நான் என் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறேன். என்னிடம் யார் வந்தும் இதை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறியதும் கிடையாது. சொல்வதற்கும் யாரும் எனக்கில்லை. அப்படி என்னிடம் வந்து யார் சொன்னாலும் நான் அதைக் கேட்கப் போவதில்லை நான் என் போக்கில் தான் செல்வேன்.’ என்று பேசினார்.
என்ன மோதல்?
சினிமாவில், மிக நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருந்த விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது. இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பாலா. அதன் பின்னர் பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பிற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் பாலாவும் விக்ரமும் இணையவில்லை.
இதற்கிடையே தன்னுடைய மகனான துருவ் விக்ரமை பாலாதான் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான வர்மா படத்தை பாலாவை வைத்து எடுக்க வைத்தார் விக்ரம். ஆனால், விக்ரமுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் படம் திருப்தி தராத காரணத்தால், அந்தப்படம் திரையரங்கில் வெளிவில்லை.
அதன் பின்னர் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநரான சந்திப் ரெட்டி வங்காவின் உதவி இயக்குநரை வைத்து மீண்டும் ஆதித்யா வர்மா என்ற பெயரில் அந்த படம் படமாக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையே பாலா இயக்கிய வர்மா திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அந்தப்படத்திற்கு பாலா கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக சோசியல் மீடியாவில் பாலாவை ‘ பாலா மாமா’ என்று கூறி கிண்டலடித்தனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்