Vadivukkarasi: ‘தேவர் வீட்டு பொம்பள மாதிரி இருக்கேன்னு' - பழிவாங்கிய பாரதிராஜா;சிவாஜி செய்த சம்பவம் -வடிவுக்கரசி பேட்டி!
இந்த பொம்பள தான் கருப்பா என்னுடைய நிறத்தில் இருக்கிறது என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆகையால் என்னை அழைத்து வரச் சொல்லி டெஸ்ட் ஷூட் செய்தார்கள்..படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது நான் சிவாஜிக்கு கதாநாயகியாக நடிக்க வரவில்லை என்பது!
அம்மா, சகோதரி, வில்லி என பலதரப்பட்ட குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வடிவுக்கரசி. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா, சீரியல் என தன்னுடைய வாழ்க்கை பயணத்தை உழைப்பு என்ற படகால் நகர்த்தி வரும் இவர் பாரதிராஜா தன்னிடம் பிடுங்கிய வாய்ப்பை பற்றியும், சிவாஜியுடன் தான் நடித்த அனுபவம் பற்றியும் மனம் திறக்கிறார்.
‘வா கண்ணா வா’ என்ற படத்தில் சிவாஜி சாருடன் நான் நடித்தேன். அவர் ஏழு மணி கால்சீட் என்றால் ஆறு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். அவருக்கு போட்டியாக நான் இருக்க வேண்டும் என்பதற்காக நானும் வேகமாக வந்து மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு சீக்கிரமாக வருவேன்.
இப்போது உள்ளது போல அப்போது கேரவன் போன்றவையெல்லாம் கிடையாது. சிவாஜி மேக்கப் போட்டுவிட்டு வெளியே வந்தார் என்றால் அவருக்கு காட்சிகள் இல்லையென்றாலும் படப்பிடிப்பு தளத்திலேயே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது எனக்கு நடக்கவே தெரியாது.
இதை பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி என்னை அழைத்து வரச் சொன்னார். நானும் சென்றேன். அப்போது அவர், நீ நடப்பது நடையா..ஒரு பொம்பள மாதிரி நடக்க தெரியாதா உனக்கு.. நீ பொம்பள தானே... முதலில் நடக்க பழகு, பின்னர் நடி என்றார்.. மேலும் ஒரு கோடு கிழித்து தலையின் மேல் ஒரு எடையை வைத்துக் கொண்டு அதில் நடந்து பழகு எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்.
எனக்கு டான்ஸ் ஆடவே வராது. அந்த சமயத்தில் அந்தப் படத்திற்காக டான்ஸ் மாஸ்டர் எனக்கு பரதநாட்டியம் சொல்லி தந்தார். அவரிடம் தயவு செய்து இதெல்லாம் வேண்டாம் எளிமையாக ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த சிவாஜி டான்ஸ் மாஸ்டரிடம் நான் சொன்னதை கேட்டு என்னை உடனடியாக ஆட வேண்டும் என்றார்.
நான் வேண்டவே வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை டான்ஸ் மாஸ்டரை ஆடச் சொல்லி அதே போல என்னையும் ஆடச் சொன்னார். அப்போதும் எனக்கு ஆடவரவில்லை. நன்றாக திட்டினார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் நான் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக சென்றேன் என்பதால் என்னுடைய கேரக்டரில் சில்க் ஸ்மிதாவை நடிக்க வைத்து எடுத்து விட்டார்கள். அதில் தியாகராஜன் நடித்த கதாபாத்திரத்தில் சந்திரசேகர் நடிப்பதாக இருந்தது.
அதன் பின்னர் தான் பாரதிராஜா இயக்கத்தில் ‘முதல் மரியாதை’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. பாரதிராஜா அலுவலகத்தில் இருந்தவர்கள் சிவாஜி சாருக்கு கதாநாயகியாக வடிவுக்கரசியா? என்று எனக்கு எதிராக பேசினார்கள். எனக்கு பதிலாக நடிகை ஸ்ரீவித்யாவின் நடிக்க வைக்கலாம் என்று பேச்சு போய்க் கொண்டிருந்தது. அதற்கு பாரதிராஜா சார், ஸ்ரீவித்யா ஒரு பிராமணர். ஆகையால் அவரை தேவர் வீட்டு பெண் என்று யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார்.
மேலும் இந்த பொம்பளதான் கருப்பா என்னுடைய நிறத்தில் இருக்கிறது சொன்னார். ஆகையால் என்னை அழைத்து வரச் சொல்லி டெஸ்ட் ஷூட்செய்தார்கள். படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது நான் சிவாஜிக்கு கதாநாயகியாக நடிக்க வரவில்லை என்பது.. எனக்கு அழுகை வர ஆரம்பித்துவிட்டது. ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் தாமதமாக வந்ததால் அதற்காக பாரதிராஜா இப்படி என்னை பழி வாங்குகிறார் என்று சொல்லி கடுமையாக திட்டினேன்
படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாயிற்று, நடித்துக்கொடுத்து விட்டுதான் செல்ல முடியும் என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழி இல்லாமல் நடித்தேன். ஆனால் அதில் நடித்த ஒவ்வொரு ஃப்ரேமிலும் பாரதிராஜா சார் மீது உள்ள கோபத்தை வெளிக்காட்டி தான் நடித்தேன்” என்றார்.
நன்றி தமிழ் இந்து!