Vadivelu: பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்..சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவாகும் கேங்கர்ஸ்! கிங் ஆஃப் காமெடி பேக்
பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படமான கேங்கர்ஸ் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கிங் ஆஃப் காமெடி பேக் என குறிப்பிட்டு இந்த போஸ்டரை நடிகை குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்து வரும் சுந்தர் சி, ஹீரோவாகவும் பல படங்களில் தோன்றி நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தான் இயக்கும் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநராக இருந்து வரும் சுந்தர் சி, தமிழில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா, நாம் இருவர் நமக்கு இருவர், உனக்காக எல்லாம் உனக்காக, கிரி, கலகலப்பு என கிளாசிக் காமெடி படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஹாரர் த்ரில்லர் காமெடி படமான அரண்மனை 4, ரசிகர்களை கவர்ந்த வரவேற்பை பெற்றது.
சுந்தர் சி - வடிவேலு கூட்டணி
சுந்தர் சி தற்போது கேங்கர்ஸ் என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 14 ஆண்டுகள் கழித்து, சுந்தர் சி - வடிவேலு கூட்டணி அமைத்துள்ளார்கள்.
இதையடுத்து நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு ட்ரீட் அளிக்கும் விதமாக கேங்கர்ஸ் பட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சுந்தர் சி மனைவியும், நடிகையுமான குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் போஸ்டரை பகிர்ந்து, "காமெடி அரசர்கள் மீண்டும் அரியணை ஏறியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
கேங்கர்ஸ் சிங்காரம்
இந்த படத்தில் சுந்தர் சி கதாநாயகனாகவும், வடிவேலு கேங்கர்ஸ் சிங்காரம் என்ற கதாபாத்திரத்திலும் தோன்றவுள்ளார்கள். இவர்களுடன் நடிகை கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், அருள்தாஸ் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.
கேங்கர்ஸ் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சுந்தர் சி படத்தில் வடிவேலு கேரக்டர்கள்
கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் 2010இல் வெளியான நகரம் மறுபக்கம் படத்தில் வடிவேலு நடித்திருந்தார். இதில் ஸ்டைலை பாண்டியாக அவர் செய்த லூட்டி மறக்க முடியாக காமெடியாக அமைந்தன.
இந்த படத்துக்கு முன்னர் சுந்தர் சி இயக்கிய ரெண்டு படத்தில் கிரிகாலன், லண்டன் படத்தில் அட்வகேட் வெடிமுத்து, கிரி படத்தில் வீரபாகு, வின்னர் படத்தில் கைப்புள்ள போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
அத்துடன் சுந்தர் சி ஹீரோவாக அறிமுகமான தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கேரக்டரில் தோன்றி காமெடியில் அலப்பறை செய்திருப்பார். வடிவேலு இந்த நாய் சேகர் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானது.
தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சி - வடிவேலு கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
வடிவேலுவின் மாரிசன்
வடிவேலு நடிப்பில் மாரிசன் என்ற மற்றொரு படமும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கியிருந்தார்.
மாரிசன் படத்துக்கு படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு வடிவேலுவும், ஃபஹத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/