40 ஆண்டுகளுக்கு தென்னிந்திய திரை உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஊர்வசி பிறந்தநாள்!
நாற்பது ஆண்டுகளுக்கு மேலான தென்னிந்திய திரைப்பட உலகில் இப்போதும் பிசியாக தொடர்ந்து நடித்து வரும் ஊர்வசி இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாள் வாழ்த்துகள் ஊர்வசி மேடம்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இன்றும் பிரபலமாக இருக்கும் நடிகை ஊர்வசி அவர்களின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
1967 ஜனவரி 25 ல் கேரள மாநிலத்தில் நாடக நடிகர்களான வி.பி.நாயர், விஜயலட்சுமியின் மகளாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் கவிதா ரஞ்சனி என பெயரிட்டனர்.
ஆரம்ப கால கல்வி
திருவனந்தபுரம் கோட்டை மகளிர் பள்ளியில் நான்காம் வகுப்பு முடிந்த பிறகு குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்கிறது. கோடம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்க விடாமல் திரைப்பட துறை இழுத்து விட்டது. 1977 ல் விதாரன மொட்டுக்கள் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
தமிழில் 1983 ஜூலை 22 ல் வெளியான வெற்றிப்படம் "முந்தானை முடிச்சு " மூலம் இவரை நாயகியாக சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் திரைப்பட உலகம் வரவேற்றது. இந்த படத்தில் இவர் நுழைந்ததே சுவாரஸ்யமான விசயம். இந்த படத்தில் வரும் பரிமளம் என்ற நாயகி வேடத்தில் நடிக்க முதலில் அழைத்தது இவரின் சகோதரி கலாரஞ்சனியைத்தான். அவருக்கு துணையாக வந்த இவர் துடுக்காக அக்காவுக்கு தந்த வசனங்களை படித்து போட்டோசூட் நடக்கும் இடத்தில் அழிச்சாட்டியம் செய்ய பாக்யராஜ் கண்டித்து அமைதியாக்கினார்.
அக்கா கலா திணற இயக்குநர் இவரை அழைத்து பாவாடை தாவணியில் டெஸ்ட் சூட் முடித்து நடிக்க வைக்க நாயகியாக மாறினார். முதல் படத்திலேயே மிகவும் வெயிட்டான ரோல். குறும்புத்தனமான முகம் நம்மை கலங்கவும் வைத்தது. சிரிக்கவும் வைத்தது. முதல்படத்திலேயே அத்தனை முகபாவங்களையும் காட்ட பரிமளம் உதவினாள். தாய்மார்களின் செல்ல பிள்ளை ஆகிப்போனார் கவிதா ரஞ்சனி என்ற ஊர்வசி. அந்த கதாபாத்திரம் பரிமளத்துக்கு இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன் மனைவி சிறப்பாக குரல் கொடுத்து ஊர்வசி நடிப்பை இயல்பாக்கினார்.
இவர் மளையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை 1998 ல் திருமணம் செய்தார். ஒரு மகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக 2008 ல் விவாகரத்து பெற்றார்.
பின்னர் 2013 ல் சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இவரின் சகோதர சகோதரிகள் அனைவரும் திரைத்துறையில் நடிகர்களாக உள்ளனர். 1979 ல் கதிர் மண்டபம்,1980 ல் திக்விஜயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 1984 ல் எதிர் பூக்கள் என்ற மளையாள படத்தில் முதல்முறையாக நாயகி ஆனார். தென்னிந்திய மொழிகள் தவிர்த்து இந்தியிலும் 600 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.
இவர் தேசிய விருது, பல மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் பெற்றிருக்கிறார். அதேபோல் டப்பிங் குரல் தருபவராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் இயங்குகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் மிகவும் பெரிய வெற்றி பெற்றது. உலகநாயகன் கமல்ஹாசனால் வெகுவாக பாராட்டப்பட்டவர்.
அதே சமயம் பெண்களை கண்ணியமாக காட்சிப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து தன் துறை சார்ந்த விமர்சனங்களை அவ்வப்போது வெளிப்படையாக எடுத்து வைப்பவர். காள மாடு ஒன்னு கறவை மாடு பாடலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். பின்னாளில் கவிஞர் வாலி அதை சரிக்கட்டவே ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி பாலிசி பாடலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகில் உள்ள அனைத்து முன்னனி நடிகர், நடிகையருடனும் இயக்குநர்களுடனும் பணி புரிந்து நீண்ட அனுபவம் உள்ளவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலான தென்னிந்திய திரைப்பட உலகில் இப்போதும் பிசியாக தொடர்ந்து நடித்து வரும் ஊர்வசி இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாள் வாழ்த்துகள் ஊர்வசி மேடம்.
டாபிக்ஸ்