23 years of Unnai Kodu Ennai Taruven: வித்யாசமான கதைக்களம் இருந்தும் அஜித்துக்கு கை கொடுக்காத உன்னைக்கொடு என்னைத்தருவேன்
அவள் வருவாளாவில் தொடங்கிய அஜித் - சிம்ரன் ஹிட் ஃபார்முலாவில் சற்று சறுக்கலை ஏற்படுத்திய படம் உன்னைக்கொடு என்னைத்தருவேன். அஜித் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு ஃபளாப் கொடுத்த திரைப்படம் என்றால், அது உன்னைக்கொடு என்னை தருவேன் திரைப்படம். 23 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது அந்தப்படம்.

சாக்லேட் பாயாக இருந்த அஜித் துவக்க காலங்களில் காதல் படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அப்போது அஜித் - சிம்ரன் ஜோடி தொடர்ந்து சில ஹிட் படங்களை கொடுத்து வந்தார்கள். அந்த வகையில் வந்த படம்தான் இந்த உன்னைக்கொடு என்னை தருவேன் திரைப்படம். ஆனால் இந்தப்படம் அவர்கள் எதிர்பார்த்த ஹிட் கொடுக்கவில்லை.
அஜித் ஒரு ராணுவ அதிகாரியால் வளர்க்கப்படுகிறார். அவரது பிறப்பு மற்றும் தாய், தந்தை யார் என்பது உள்ளிட்ட எதையும் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார். அவர் தேசபக்திமிக்க ஒரு ராணுவ வீரனாகவும், நாட்டிற்காக உயிரையும் கொடுக்க தயங்காதவராகவும் அந்த ராணுவ அதிகாரி அவரை வளர்த்திருப்பார்.
ஊட்டியில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் சிறந்த ராணுவ வீரனாக இருக்கும் அவருக்கு பயிற்சி முகாமுக்கு வரும் ராணுவ அதிகாரியின் மகள் சிம்ரனுடன் காதல் ஏற்படுகிறது. பயிற்சி முடித்து எல்லைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கும் கட்டுக்கோப்பான ராணுவ வீரன் காதலில் விழுந்து விடுகிறான்.