Ayurvedic Beedi: மகேஷ் பாபு சொன்ன ஆயுர்வேதிக் பீடி!அப்படி என்னத் தான் இருக்குது? இதோ விவரம்!
”குண்டூர் காரம்’ திரைப்படத்தில் மகேஷ் பாபு அடிக்கடி புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன”

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குண்டூர் காரம்’ திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
’குண்டூர் காரம்’ திரைப்படத்தில் மகேஷ் பாபு அடிக்கடி புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது குறித்து பேசிய மகேஷ் பாபு ”நான் புகைபிடிக்க மாட்டேன், புகைபிடிப்பதை ஊக்குவிக்க மாட்டேன். தொடக்கத்தில், எனக்கு வழக்கமான பீடியைக் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு அதனால் ஒற்றைத் தலைவலி வந்தது. நான் போய் இயக்குநர் த்ரிவிக்ரமிடம் சொன்னேன். என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
பின்னர் அவர் ஆராய்ச்சி செய்து எனக்கு இந்த ஆயுர்வேத பீடியை வாங்கிக் கொடுத்தார். அது எனக்கு நன்றாக இருந்தது. கிராம்பு இலைகளால், புதினா வாசனையுடன் இருந்த அந்த பீடியில் புகையிலை பொருட்கள் ஏதுமில்லை இல்லை” என பேசினார்.
நடிகர் மகேஷ் பாபுவின் இந்த பேச்சுக்கு பிறகு சமூகவலைத்தளங்களில் ஆயுர்வேதிக் பீடி குறித்த தேடலும், விவாதமும் அதிகமாகி உள்ளது.
இது போன்ற பீடிகள் இயற்கை மூலிகைகள், மசாலாப் பொருட்களின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 100% புகையிலை இல்லாத மற்றும் நிகோடின் இல்லாத இந்த பீடிகள் வெளியிடும் புகை துர்நாற்றம் இல்லாத வாசனையை தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்பதால் எந்த வகையிலான புகைப்பொருட்களையும் நடிகர்கள் ஊக்குவிக்க கூடாது என்ற கோரிக்கை சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது.

டாபிக்ஸ்