Janagaraj: ‘கமல்-ஜனகராஜை பிரித்த டப்பிங் சம்பவம்’ இரு விபத்தால் ஜனகராஜ் தவற விட்ட வாழ்க்கை!
Kamalhassan: காலம் தான் எப்போதும் முடிவு செய்யும் என்பார்கள், அப்படி தான் ஒரு சிறு விபத்து ஜனகராஜின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் முடிவு செய்தது.
முக்கியமான நகைச்சுவை கலைஞர்களில் மி்க முக்கியமானவர் ஜனகராஜ். காமெடி நடிகராக அறியப்படும் ஜனகராஜ், உண்மையில் கதாநாயகனாக வர வேண்டியவர். ஆனால், அவர் வாழ்வில் நடந்த சில நொடி சம்பவங்கள், அவரை குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் மாற்றியது.
பாரதிராஜாவில் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் படத்தில் தோன்றிய ஜனகராஜ். அதன் பின் தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். ராபர்ட் ராஜசேகரின் பாலைவனச்சோலை படத்தில் அசத்தலான கதாபாத்திரம் ஏற்றார். கிட்டத்தட்ட கதாநாயகன் மாதிரி தான். அதன் பின் ஜனகராஜ் கதாநாயகனாக தான் நடிக்கும் சூழல் இருந்தது. அந்த ஒரு விபத்து நடக்கும் வரை.
காலம் தான் எப்போதும் முடிவு செய்யும் என்பார்கள், அப்படி தான் ஒரு சிறு விபத்து ஜனகராஜின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் முடிவு செய்தது. விபத்தில் உயிர் பிழைத்ததே போதும் என்கிற மாதிரியான நிலை. ஆனாலும் கண்ணில் ஏற்பட்ட காயம் தான், அவருக்கு பெரும் பின்னடைவை தந்தது.
கண் பகுதியில் செய்த அறுவை சிகிச்சையால் அவரது பார்வை தோற்றம் கொஞ்சம் வித்தியாசமாய் மாறியது. அவர் நடிக்கும் காட்சிகளில் நீங்கள் அதை எளிதில் அறிய முடியும். இந்த ஒரு சம்பவம், அவரின் கதாநாயகன் கதவை இழுத்து மூடியது. ஆனாலும் காமெடியனாக அவர் கோலோச்சினார்.
கவுண்டமணி-செந்திலுக்கு போட்டியாக ஜனகராஜை தான் அப்போது புக் செய்வார்கள். ரஜினி படங்களில் பெரும்பாலும் கனகராஜ் தான் இடம் பெறுவார். அந்த அளவிற்கு திறமையான கலைஞர். கமலுக்கும் நெருக்கமானவர் ஜனகராஜ். ஆனால் அந்த நெருக்கத்தையும் பங்கமாக்கியது ஒரு விபத்து.
இந்த முறை விபத்து சாலையில் நடக்கவில்லை; மாறாக வார்த்தையில் நடந்தது. அந்த விபத்து குணா படம் மூலம் ஜனகராஜிற்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. குணா படத்தின் இயக்குனர் சந்தானபாரதி-ஜனகராஜ் இருவரும் இளைமை காலம் முதல் நல்ல நண்பர்கள். வாடா போடா என்று அழைத்துக் கொள்ளும் அளவிற்கு பால்ய நண்பர்கள். ஏவிஎம்.,யில் குணா படத்தின் டப்பிங்கின் போது, ஜனகராஜ் பேசிக் கொண்டிருக்கிறார்.
இன்ஜினியர் ரூமில் சந்தானபாரதி அமர்ந்திருந்தார். டப்பிங் ஓகேவா என்று ஜனகராஜ் கேட்கிறார். சந்தான பாரதி அடுத்தடுத்து ரீடேக் சொல்ல, ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஆகி ஜனகராஜ் வெளியே வர, இருவருக்கும் கை கலப்பாகிறது. பெரிய பிரச்னை ஆகி பின்னர் கமல் வந்து விபரம் கேட்க, ஜனகராஜ் சண்டையிட்ட வெளியே போய்விட்டார்.
‘ஒரு பக்கம் ஜனகராஜ் நல்ல நடிகர், இன்னொரு பக்கம் சந்தான பாரதி நல்ல நண்பர், தயாரிப்பாளரும் நெருக்கம்’ என்கிற நிலையில் கமல், அமைதியாகிவிட்டார். ஜனகராஜ் டப்பிங் பேச மறுக்கிறார். சந்தானபாரதியும் ஒத்து வரவில்லை. அதன் பின் சிலர் சமாதானம் செய்து ஜனகராஜை டப்பிங் பேச அழைத்து வந்தனர். ஆனால், அதன் பின் கமல் உடன் ஜனகராஜ் இணைய முடியாமல் போனது. அதற்கு காரணம், நண்பர்கள் இருவரிடையே நடந்த ஒரு சின்ன வாக்குவாதம், கமல் உடன் அதன் பின் நடிக்கும் வாய்ப்பு வாசலை, ஜனகராஜிற்கு இழுத்து மூடியாது. இன்றும் நடித்துக் கொண்டிருக்கும் ஜனகராஜ் என்கிற கலைஞனுக்கு இந்த இரு சம்பவங்கள் தான், அவரது கலை பயணத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள்.
டாபிக்ஸ்