TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு.. மத்திய உள்துறை அதிரடி.. அதன் செயல்பாடுகள்
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் அறிந்துகொள்வோம்.

TVK Vijay: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டு இருக்கிறது. குறிப்பாக, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான் விஜய்க்கு இந்த y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் பாதுகாப்பின் தன்மை:
ஒருவருக்கு இருக்கும் அச்சுறுத்தலின் தன்மையைப் பொறுத்து எக்ஸ்(X), ஒய்(Y), ஒய்+(Y+), இஸட்(Z), இஸட் +(Z+), மற்றும் எஸ்.பி.ஜி(S.P.G) என ஆறுவகையான பாதுகாப்பு அரண்களை மத்திய உள்துறை அமைச்சகம் தருகிறது. Intelligence Bureau என்னும் புலனாய்வுத்துறை ஒருவருக்கு வரும் அச்சுறுத்தலை கணித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பும். அதன்பின், உள்துறை அமைச்சகம் ஒருவரின் அச்சுறுத்தலுக்கு ஏற்ப அவர்களுக்கு மேற்கூறிய பாதுகாப்பு அரணை ஏற்பாடு செய்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, பிரதமர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள், முக்கிய தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், நீதிபதிகள், அரசியல் தலைவர்களுக்கு மேற்கண்ட ஏதாவது ஒரு பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒய்(Y) பிரிவு பாதுகாப்பு என்பது என்ன?:
இந்த ‘ஒய்(Y)’பிரிவில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பெறும் வி.ஐ.பியின் வீட்டில் ஆயுதமேந்திய காவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவார். 9 மில்லி மீட்டர் பிஸ்டலுடன் ஒரு நபரும், ஸ்டென் கன் உடன் ஒருவரும் என இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் இடம்பெறுவர். மேலும் 11 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். இரவில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பெறும்.
முன்னதாக விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக தனது சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது பிரசார வேனில் இருந்து பேசும்போது விஜய் மீது குப்பைகள் வீசப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கும் முடிவினை மத்திய உள்துறை அமைச்சகம் நடிகர் விஜய்க்கு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு உருவான தமிழக வெற்றிக் கழகம்:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்.
இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான ‘தளபதி மக்கள் இயக்கம்’ அப்படியே, அவரது கட்சியாக மாறியது. அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்தனர், அக்கட்சி நிர்வாகிகள்.
மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை 2024ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கை:
தொடங்கிய மூன்றே நாட்களில் அந்தக் கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.
மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.
அதன் அடுத்தகட்டமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பாடலையும் வெளியிட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகம் சொல்வது என்ன?
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகம் குறித்து விஜய் பேசுவது என்ன?
அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக அறிவித்த விஜய்:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. அங்கு த.வெ.க கட்சியின் தலைவராக பேசிய விஜய் அரசியல், பொருளாதார, சமநிலையை உருவாக்கணும் என்றால், புரொபோசல் ரெபிரசன்டேஷன் (முன்மொழிவு பிரதிநிதித்துவம்) ஆக இருக்கிற சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தணும் என்றும், அப்போதுதான், எல்லாருக்கும் எல்லாம் சமநிலையாகக் கிடைக்கும் என்றும்; அது தான் சரியான சமூக நீதிக்கான அணுகுமுறையாகவும் இருக்கும் என்றும் கூறினார். மேலும், அம்பேத்கரை தன் கட்சியின் கொள்கை வழிகாட்டியாகவும் விஜய் அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அதன்பின் பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்புத்தெரிவித்து விவசாயிகளைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: த.வெ.க பற்றிய ஒரு முக்கிய செய்தி

தொடர்புடையை செய்திகள்