Udit Narayan: கொளுந்து விட்டு எரிந்த தீ.. “மனதை பாதித்த சம்பவம்.." 11வது மாடியில் இருந்து எஸ்கேப் ஆன உதித் நாரயணன்
Singer Udit Narayan Escapes Fire Accident: பாடகர் உதித் நாரயணன் தீ விபத்து ஏற்பட்ட பிளாட்டில் ஏ விங்க் கட்டிடத்தில் வசித்துள்ளார். பி விங்க் கட்டிடத்தில் விபத்து ஏற்பட்ட போதிலும், இதை நேரில் பார்த்த தனக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக படபடப்பு குறையாமல் சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக இருப்பவர் உதித் நாரயணன். தமிழில் மாதவன் நடித்த ரன் படத்தில் இடம்பிடித்திருக்கும் சூப்பர் ஹிட் பாடலான காதல் பிசேசே பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கவரந்த பாடகராக மாறினார். இது தவிர தமிழில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் ஒபராய் காம்பிளஸ் அப்பார்மெண்டில் உதித் நாரயணன் வசித்து வருகிறார். இதையடுத்து 13 மாடி கட்டிடங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பார்மெண்டில் உள்ள பி விங்க் கட்டிடடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே ஏ விங் கட்டிடத்தில் உள்ள 11வது மாடியில் பாடகர் வசித்து வந்துள்ளார்.
தீ விபத்திலிருந்து உதித் நாரயணன் எஸ்கேப்
திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சுமார் நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.49 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பற்றி எரியும் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்ததில் தீயணைப்பு துறையினர் முழு முயற்சியில் ஈடுபட்டதாக, விபத்தில் இருந்து தப்பித்தது குறித்து பாடகர் உதித் நாரயணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நான் ஏ விங்கில் 11வது மாடியில் தங்கியிருந்தேன், பி விங்கில் தீப்பிடித்தது. தீ விபத்து ஏற்பட்டவுடன் நாங்கள் அனைவரும் இறங்கி, கட்டிட வளாகத்தில் பாதுகாப்பான இடத்துக்கு சென்றோம்.
தீ கொளுந்து விட்டு எரிந்த நிலையில், குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரம் அங்கேயே இருந்தோம். தீ வேகமாக பரவிய நிலையில் மிகவும் ஆபத்தான நிலை ஏற்பட்டது. எதுவும் நடந்திருக்கலாம். பாதிப்புகள் எதுவும் இல்லாமல் நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம். எல்லாம் வல்ல இறைவனுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி" என்றார்.
தொடர்ந்து, "இந்த தீ விபத்து சம்பவம் என்னை மனதளவில் பாதித்துள்ளது. இது போக சிறிது காலம் எடுக்கும் என நினைக்கிறேன். இது போன்ற ஒரு சம்பவத்தை கேட்கும் போதே அச்சமாக இருக்கும். ஆனால் நீங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கும்போது அது எவ்வளவு வேதனையானது என்பதை புரிந்துகொள்ளலாம்." என்றார்.
மின் கசிவால் ஏற்பட்ட விபத்து
தீ விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 2 பேர் அருகில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரான 75 வயதான ராகுல் மிஸ்ரா, ஏற்கனேவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு நபரான ரவுனக் மிஸ்ரா (38), ஆரம்ப சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பிளாட்டில் உள்ள மின் வயரிங், மின் நிறுவல்களில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, வீட்டு உபயோகப் பொருள்களில் மூலம் தீ நன்கு பரவியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்து ஏற்பட்ட டூப்ளெக்ஸ் குடியிருப்பில் ஐந்து பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் பணியாற்றிய பணியாளர்கள் உள்பட 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர். கட்டிடத்தின் தீயணைப்பு அமைப்பு செயல்படவில்லை என்றும், டூப்ளக்ஸ் பிளாட்டின் உள் படிக்கட்டுகளின் நிலை காரணமாக தீயை அணைக்கும் செயல்பாடு அவர்களுக்கு கொஞ்சம் கடினமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதித் நாரயணன் தமிழ் பாடல்கள்
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த காதலன் படத்தில் இடம்பிடித்த காதலிக்கும் பெண்ணின் பாடல் மூலமாக தமிழில் பாடகராக அறிமுகமானார் உதித் நாராயணன். தொடர்ந்து முத்து படத்தில் குளுவாலிலே, மிஸ்டர் ரோமியா படத்தில் ரோமியோ ஆட்டம் போட்ட போன்ற ஹிட் பாடல்களை பாடினார். ஏ.ஆர். ரஹ்மான் மட்டுமல்லாமல் வித்யாசாகர், தேவா, யுவுன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, சபேஷ் முரளி, எஸ்.ஏ. ராஜ்குமார், தினா, ஸ்ரீகாந்த் தேவா, டி.இமான், விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ் குமார் என தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பாடல்களை உதித் நாரயணன் பாடியுள்ளார்.