"காத்திரமாக களமாடிய திருமகனார்".. பெரியாரைத் தொடர்ந்து பசும்பொன்னாரை வாழ்த்திய விஜய்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "காத்திரமாக களமாடிய திருமகனார்".. பெரியாரைத் தொடர்ந்து பசும்பொன்னாரை வாழ்த்திய விஜய்

"காத்திரமாக களமாடிய திருமகனார்".. பெரியாரைத் தொடர்ந்து பசும்பொன்னாரை வாழ்த்திய விஜய்

Malavica Natarajan HT Tamil
Updated Oct 30, 2024 07:01 PM IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை ஒட்டி, அவரை வாழ்த்தி மரியாதை செய்துள்ளார்.

"காத்திரமாக களமாடிய திருமகனார்".. பெரியாரைத் தொடர்ந்து பசும்பொன்னாரை வாழ்த்திய விஜய்
"காத்திரமாக களமாடிய திருமகனார்".. பெரியாரைத் தொடர்ந்து பசும்பொன்னாரை வாழ்த்திய விஜய்

பசும்பொன்னாருக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில், "அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் அடி எடுத்து வைத்த விஜய்

இதுவரை நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த விஜய், தற்போது தீவிர அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டு அரசியல் குறித்து மிகவும் உண்ணிப்பாக கவனித்து வருகிறார்.

அந்த வகையில், கட்சி தொடங்கிய உடன் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தற்போது தென் மாவட்ட மக்களால் கொண்டாடப்படும் சுதந்திர போராட்ட வீரரான பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பசும்பொன் குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இதையடுத்து, இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இவரைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வரும் நிலையில் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவை குறிப்பிட்டு கடிதம்

முன்னதாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி கடந்த 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. மேலும் மழை போன்ற பெரும் இடர்களும் குறுக்கிட்டது. இருப்பினும், மாநாடு எந்தத் தடையும் இன்றி நடந்து முடிந்தது.

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அவர் மாநாடு தொடர்பாக எழுதும் 4வது கடிதம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம் எனக் குறிப்பிட்டு அரசியலில் அண்ணாவை மேற்கோள் காட்டி இருப்பார்.

தலைவர்களை பின்பற்றும் தவெக

மேலும், அவர், தமிழ்நாட்டு அரசியலில் பெரியார், காமராசர், வேலுநாச்சியார், தமிழ்த்தாய் என பலரது கொள்கைகளையும் பின்பற்றுவதாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் அவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும் அரசியலுக்காக கையில் எடுத்திருக்கலாம். ஏனெனில் தென் மாவட்டங்களில் முத்து ராமலிங்கத் தேவரின் செல்வாக்கு என்பது ஓட்டு அரசியலில் பலமாக எதிரொலிக்கும். அதனால், விஜய் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பாதுகாத்துள்ளார் என பலரும் தெரிவித்துள்ளனர்.