அந்த பயம் இருக்கட்டும்.. அல்லு அர்ஜூன் கைதுக்குப் பின்.. தெலங்கானா முதலமைச்சரை சந்திக்கும் டோலிவுட் நட்சத்திரங்கள்!
அல்லு அர்ஜூன் கைதுக்குப் பின்.. தெலங்கானா முதலமைச்சரை சந்திக்கும் டோலிவுட் நட்சத்திரங்கள்.. பின்னணி என்ன?
அல்லு அர்ஜூன் கைது நிகழ்வுக்குப் பின், தெலங்கானா முதலமைசர் ரேவந்த் ரெட்டியுடன் டோலிவுட் நட்சத்திரங்கள் சந்தித்து பேசவுள்ளனர்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை டோலிவுட் பிரபலங்கள் டிசம்பர் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு பஞ்சாரா ஹில்ஸில் உள்ள போலீஸ் கட்டளை கட்டுப்பாட்டு மையத்தில் சந்திக்க உள்ளனர்.
குறிப்பாக, டோலிவுட்டிலிருந்து, தெலங்கானா ஃபிலிம் முன்னேற்ற அமைப்பின் தலைவர் தில் ராஜு, சிரஞ்சீவி, வெங்கடேஷ், அல்லு அரவிந்த் மற்றும் பிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் முதலமைச்சரை சந்திப்பார்.
இந்த சந்திப்பில், தெலங்கானா துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்கா, மாநில அமைச்சர்கள் கோமடிரெட்டி வெங்கட் ரெட்டி, உத்தம்குமார் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்ஹா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தெலுங்கு திரையுலகின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க திட்டம்:
இந்த கூட்டத்தில் தெலுங்கு திரையுலகின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப்பின், ரசிகர்கள் ஷோ மற்றும் டிக்கெட் விலை உயர்வுக்கு இனி அனுமதி வழங்கப்படாது என்று ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வரும் சங்கராந்திக்கு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருப்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கூட்டத்தில் திரையுலகம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, வரி விதிப்புக் கொள்கை, திரைப்பட வர்த்தக சபை உணர்வு, திரைப்படத் துறைக்கான ஊக்கத்தொகை, வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பிற பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு டோலிவுட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டம் திரைப்படத் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், பிரச்னைகளுக்கான தீர்வுகளை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜுன் சர்ச்சைக்குப் பிறகு, அமைச்சர்கள் மற்றும் ஆளும் காங்கிரஸ் தலைவர்கள் அவரை விமர்சித்தனர். இருப்பினும், திரையுலகினர் மீது தங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பேசுவதாகவும் தெலங்கானா அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர்.
ஹைதராபாத் நெரிசல் சம்பவம்:
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4-ம் தேதி புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோவின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது ரேவதி என்ற இளம்பெண் உயிரிழந்தார்.
அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ரேவதியின் குடும்பத்திற்கு புஷ்பா படக்குழு ரூ.2 கோடி இழப்பீடு அறிவித்துள்ளது. ஹீரோ அல்லு அர்ஜுன் ரூ.1 கோடியும், இயக்குநர் சுகுமார் ரூ.50 லட்சமும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரூ.50 லட்சமும் அறிவித்துள்ளனர்.
கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஸ்ரீதேஜை அல்லு அரவிந்த் சந்தித்தார். இதற்கான காசோலையை திரைப்பட வளர்ச்சிக் கழகத் தலைவர் தில் ராஜுவிடம் ஒப்படைத்துள்ளதாக அல்லு அரவிந்த் தெரிவித்தார்.
ஸ்ரீதேஜின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எஃப்.டி.சி தலைவர் தில் ராஜு தெரிவித்தார். சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சிறுவனின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளனர். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் நேரம் கேட்டு, திரையுலக பிரபலங்கள் முதலமைச்சரைச் சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பில் ஹீரோக்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைச் சென்று சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பு டிசம்பர் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.