D. S. Mani Iyer Memorial Day : பத்ம பூஷண் விருது பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் டி. எஸ். மணி ஐயர்!
சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை ர் பாலக்காடு டி. எஸ். மணி ஐயருக்கு உண்டு.

கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியொரு பாணியை அமைத்துக் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர். மணி ஐயரின் வாசிப்பைக் கேட்பதற்கென்றே அரங்கில் கூட்டம் அலைமோதிய காலம் உண்டு. சமகாலத்து முன்னணி வித்வான்கள் அத்தனை பேருக்கும் பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார் மணி ஐயர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பழையனூர் கிராமத்தில் இவர் டி.ஆர்.சேஷம் பாகவதர்-அனந்தம்மா தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பாலக்காடு டி.எஸ். மணி ஐயர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் இராமசுவாமி. ஆயினும் மணி என்ற தனது செல்லப்பெயரிலேயே அவர் பிரபலமானார்.
தனது 7 ஆவது வயதில், சாத்தபுரம் சுப்பையரிடம் மிருதங்கம் பயில ஆரம்பித்தார். தனது தந்தையின் நண்பர் விஸ்வநாத ஐயரிடமும் மிருதங்கம் பயின்றார். 10 வயது நிரம்பியபோது தன் தந்தைக்கும், மற்ற கதாகாலக்ஷேபக் கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். தனது 15 ஆவது வயதில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் மாணவர் ஆனார்.