Allauddinum Albhutha Vilakkum: ஆலம்பனா.. ஜாம்பவான்கள் கலக்கிய திரைப்படம்.. அலாவுதீனும் அற்புத விளக்கும்
Allauddinum Albhutha Vilakkum: இப்போதும் குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமாக இந்த அலாவுதீனும் அற்புத விளக்கும் விளங்கி வருகின்றது. அப்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை வைத்து அதிகபட்சமாக எப்படி சிறப்பான திரைப்படத்தை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை கொடுத்திருப்பார்கள்.
Allauddinum Albhutha Vilakkum: தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு உச்ச நட்சத்திரமாக கோலோச்சியவர்கள் ரஜினி - கமல். ஆனால், இருவருக்குமான நட்பு 1975-ல் வெளிவந்த 'அபூர்வராகங்கள்' படத்தில் தொடங்கியது. கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஆரம்ப கட்டத்தில் வந்த படங்களில் பெரும்பாலும் சேர்ந்தே நடித்திருப்பர்.
'மூன்று முடிச்சு', 'பதினாறு வயதினிலே', 'அவள் அப்படித்தான்', 'ஆடு புலி ஆட்டம்', 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது', 'தப்புத் தாளங்கள்' என கிட்டதட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருப்பர். அத்தனை திரைப்படங்களும் ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கா இடம் பிடித்தன. இந்த வரிசையில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய திரைப்படங்களில் ஒன்று தான் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’.
மலையாள இயக்குனர் ஐ.வி.சசி இயக்கிய இப்படத்தில் பிரதான கதாபாத்திரம் அலாவுதீனாக கமலும், பாக்தத்தின் தளபதி கமருதீனாக ரஜினியும் நடித்திருப்பார்கள். இருவருமே இஸ்லாமியராகவே நடித்திருந்தனர். இளவரசி ரோஷிணியாக ஜெயபாரதியும், ஜமீலாவாக ஸ்ரீப்ரியாவும் நடித்திருந்தனர். ஜெமினி கணேசன், வி.எஸ்.ராகவன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர், அசோகன் உள்பட பலர் நடித்திருந்தனர்.
பாரசீக கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் வெளிவந்தது. இன்றும் நாம் இந்த கதையை புத்தகங்களில் வாசித்திருக்கலாம். அலாவுதீன் பூதம் கேட்டதை எல்லாம் தரும் என சிறுவர்களுக்காக இந்த பூத கதை சொல்லப்பட்டது. பூதத்தோடு கொஞ்சம் காதலும் கலந்து இப்படத்தில் சொல்லப்பட்டது. இந்த படத்தில் விளக்கை தேய்த்த உடன் வந்து கேட்ட வரம் கொடுக்கும் பூதம் அலாவுதீனாக பழம்பெரும் நடிகர் அசோகன் நடித்திருப்பார். அடிக்கடி 'ஆலம்பனா... ஆலம்பனா...' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
அதிர்ஷ்டவசமாக கிடைக்கும் விளக்கும் அலாவுதீனுக்குத் தொல்லை தரும் வில்லன்களும் என சாகசங்கள் நிறைந்த படம். கதைக்களம், ஈராக்கின் பாக்தாத், கதாபாத்திரங்கள் அனைத்தும் இஸ்லாமியர்கள், உடை, உணவு என அனைத்தும் முஸ்லீம்களுடையது. எனினும் படம் தமிழ், மலையாலம் இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அற்புத விளக்கை தேய்த்ததும் பூதம் பிரமாண்டமாக கிளம்புவதையும், விளக்கு இருக்கும் குகைக்குள் அலாவுதீன் செல்கையில் அங்கு அவன் எதிர்கொள்ளும் அமானுஷ்ய எதிரிகளையும் சிறப்பாகவே கையாண்டிருந்தார் இயக்குனர் ஐ.வி. சசி.
இப்போதும் குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமாக இந்த அலாவுதீனும் அற்புத விளக்கும் விளங்கி வருகின்றது. அப்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை வைத்து அதிகபட்சமாக எப்படி சிறப்பான திரைப்படத்தை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை கொடுத்திருப்பார்கள். இன்று வரை பூதமாக நடித்த அசோகனின் நடிப்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அடையாளமாக திகழ்ந்து வருகிறது.
சிஜி எனப்படும் கம்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத அந்த காலத்தில் மாயாஜால காட்சிகள் மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கும். இவ்வளவு மெனக்கட்டு காட்சிகளை சிறப்பாக நம் கண்முன் கொண்டு வந்திருந்தாலும் இரண்டு வாரங்கள் நல்ல வசூலைப் பெற்றது. அதன் பிறகு கீழிறங்கத் தொடங்கியது. இந்த படம் ரிலீஸாகி இன்றோடு 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆம், ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ 1979 ஆம் ஆண்டு இதே ஜூன் 8-ல் தான் வெளியானது. காலங்கள் உருண்டோடினாலும் இந்தப்படத்தை பார்த்து ரசித்தவர்களுக்கு அதன் காட்சிகள் இன்றும் மனதுக்குள் அலைபாயும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்