தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Today Is The Memorial Day Of Legendary Actress Jamuna

Jamuna: பழம்பெரும் நடிகை ஜமுனா நினைவு நாள் இன்று

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 27, 2024 04:45 AM IST

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் திரைப்பட நடிகையாக ஜொலித்தவர் ஜமுனா அவர்களின் நினைவு நாளில் அவர் குறித்த கொஞ்சம் பழைய நினைவுகளை திரும்பி பார்க்கலாம்.

நடிகை ஜமுனா
நடிகை ஜமுனா

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு 

1936 ஆகஸ்ட் மாதம் முப்பதாம் தேதி சென்னை மாகாணத்தில் இன்றைய கர்நாடகத்தில் உள்ள அம்பி என்ற ஊரில் சீனிவாசராவ் மற்றும் கௌசல்யா தேவி ஆகியோரின் அன்பு மகளாக பிறந்தார். ஜனாபாய் என பெயரிடப்பட்ட ஜமுனா ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் துக்கரிலாவில் வசித்தார். இவர் குடும்பத்தினருக்கும் நடிகை சாவித்திரி க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பள்ளியில் படிக்கும் போதே நாடகம், இசையில் மிகுந்த ஆர்வம் காட்டி கற்று கொண்டார்.

அவரது தந்தையின் நண்பர் கரிகாபதி ராவ் தனது மாபூமி என்ற நாடகத்தில் நடிக்க வைத்தார். அந்த திறமையை பாராட்டி 1953 ல் புட்டிலு என்ற திரைப்படத்தில் சுசிலா என்ற கதாபாத்திரம் மூலம் தனது 16 வயதில் நடிகையாக அறிமுகம் ஆனார். 1954 ல் ரோகிணி பிக்சர்ஸ் தயாரிப்பில் பணம் படுத்தும் பாடு என்ற தமிழ் திரைப்படம் மூலம் கால் பதித்தார். 1955ல் விஜயா நிறுவனம் தயாரித்த மிஸ்ஸியம்மா என்ற தமிழ் திரைப்படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் சாவித்திரி தங்கையாக இளமை துள்ளளோடு நடித்த ஜமுனாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

 இந்த படத்தில் வரும் "பிருந்தாவனமும் நந்தகுமாரியும்",என்ற பாடலில் இவரது நடனத்தை அனைவரும் ரசித்தனர்.இந்த படம் மிஸ்அம்மா வாக தெலுங்கிலும் மிஸ் மேரி ஆக இந்தியிலும் வெளியாகி வெற்றி பெற்றது. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் போது 1958 ல் சங்கர் இயக்கத்தில் என்.டி.ஆரும் நாகேஸ்வரராவ் இனைந்து நடித்த பூகைலால் என்ற படத்துக்கு நாயகி ஜமுனா மிகவும் தாமதமாக வந்து கடுப்பாக்கினார்.

இருவரும் இனி தங்களது படங்களில் ஜமுனா நடிக்க கூடாது என்று முடிவு செய்தனர். தெலுங்கு மார்க்கெட்டில் சற்று சரிவு ஏற்பட தமிழ் திரைஉலகில் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் இங்கு கவனத்தை திருப்பினார். சிவாஜியுடன் நிச்சயதாம்பூலம் படத்தில் நடித்தார். தொடர்ந்து தங்கமலை ரகசியம், தெனாலிராமன், மருதநாட்டு வீரன், பொம்மை கல்யாணம், ஜெமினி கணேசன் உடன் நல்ல தீர்ப்பு, கடன் வாங்கி கல்யாணம் , மனிதன் மாறவில்லை, ஜெய்சங்கர் உடன் அன்பு சகோதரர்கள், குழந்தையும் தெய்வமும் எம்.ஜி.ஆருடன் தாய் மகளுக்கு கட்டிய தாலி என்று அவருடைய திரை கேரியரின் கிராப் ஏறியது. தெலுங்கு நடிகர்களும் மீண்டும் இவரை ஒப்பந்தம் செய்தனர்.

தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், கமல்ஹாசன் என்று முக்கிய நடிகர்களோடு நடித்து பல வெற்றி படங்களை தந்தார்.

1965 ல் கல்லூரி பேராசிரியர் ஜிலூரி ரமணாராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு மகன் வம்சி கிருஷ்ணா மகள் சரவந்தி ஆகியோர் உள்ளனர். மிலன் இந்தி படத்துக்காக பிலிம்பேர் விருது, 1972 ல் பிலிம்பேர் சிறப்பு விருது, 1999 ல் ஜெயலலிதா அவர்களால் எம்.ஜி.ஆர். விருது, 2008ல் என்.டி.ஆர்.தேசிய விருது, 2019 ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். தமிழில் 25 க்கும் மேலான படங்களில் நடித்த இவருக்கு 1983 ல் கமல்ஹாசன் தாயாக நடித்த தூங்காதே தம்பி தூங்காதே கடைசி படமாக அமைந்தது. 200 க்கும் மேலான படங்களில் நடித்தவருக்கு அரசியல் ஆர்வம் ஈர்த்தது. 

1980 ல் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1989 ல் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினர் ஆக வெற்றி பெற்றார். 1990 ல் வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி. கட்சியில் சேர்ந்தார். சுமார் 35 ஆண்டு காலம் பல மொழி திரைப்படங்களில் ஜொலித்த ஜமுனா அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு 2023 ஜனவரி 27 ல் ஹைதராபாத் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.