Major Sundarrajan: கட்டுக்கோப்பான உடல்.. கம்பீரமான உருவத்திற்கு சொந்தகாரர்.. மேஜர் சுந்தர்ராஜன் நினைவு தினம்!
நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று கலைத்துறையில் அத்தனை ஜாம்பவான்களோடும் இணைந்து பணியாற்றிய பன்முக திறமை வாய்ந்த மேஜர். சுந்தர்ராஜன் அவர்கள் தனது 77 வது வயதில் 2003 பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியான இன்று கல்லீரல் புற்றுநோய் காரணமாக மறைந்தார்.

மேஜர். சுந்தர்ராஜன்… அந்த பெயரை உச்சரிக்கும் போதே அந்த மனிதரின் கம்பீரமான குரல் நம் கண்முன் வந்து போகும். அவர் மறைந்த நாள் இன்று. பிப்ரவரி மாதம் 28 இந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
தற்போதைய தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் 1935 மார்ச் 17 ல் நடுத்தர பிராமண குடும்பத்தில் சீனிவாசன் மற்றும் பத்மாசினி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் சீனிவாசன் சுந்தர்ராஜன்.
சிறுவயதில் இருந்தே பள்ளியில் நடைபெறும் நாடகங்களில் ஆர்வமாக பங்கேற்றவர் கல்லூரியில் படிக்கும் போதும் தொடர்ந்தார். இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற அவருக்கு நடிகர் பட்டமே பிடித்திருந்தது. ஆகவே கலை இலக்கிய பயணத்தை சென்னை சென்று அவருடைய மாமா வீரராகவன் அவர்கள் நடத்தி வந்த டிரிப்ளிகேஷன் பைன் ஆர்ட்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடக நடிகராக மாறினார். தொலைபேசி துறையிலும் வேலை பார்த்து வந்தார்.
