தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Today Is The Birthday Of Shreya Ghoshal, The Dance Music Singer Who Mesmerized 2k Kids With Her Voice!

HBD Shreya Ghoshal: ‘ 2 K கிட்ஸ்களை தனது குரலால் மயங்க வைத்திருக்கும் துள்ளல் இசை பாடகி ஸ்ரேயா கோஷல்’ பிறந்த நாள் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 12, 2024 07:00 AM IST

Shreya: எந்த மொழியில் பாடினாலும் உற்சாகம், துள்ளல், மகிழ்ச்சி,இன்பம், ஆச்சரியம் சோகம், துக்கம், இரக்கம், என்று கேட்பவரின் மனதில் எல்லா உணர்வுகளையும் கடத்தி விடுவதுதான் அவரை பெரிய வெற்றி பெற வைக்கிறது. தமிழில் 2002 கார்த்திக் ராஜா இசையில் “செல்லமே செல்லம் என்றாயடா” என்ற பாடலை முதன் முதலில் பாடினார்

ஸ்ரேயா கோஷல் பிறந்த நாள் ( கோப்புப்படம்)
ஸ்ரேயா கோஷல் பிறந்த நாள் ( கோப்புப்படம்) (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

1984 மார்ச் 12 மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் அருகே பெர்ஹாம்பூரில் பிஸ்வஜித் மற்றும் சர்மிஸ்தா கோசல் ஆகிய தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். அவர் தந்தை இந்திய அணுசக்தி கழகத்தில் பொறியாளராக இருந்ததால் அவரின் ஆரம்ப படிப்பு முதல் கல்லூரி வரை அணுசக்தி கல்வி நிறுவனங்களிலேயே படித்தார். பள்ளி படிப்போடு தனது நான்கு வயதில் இருந்தே இசை பயின்று வந்தார். சியோனில் இருக்கும் கலைக்கல்லூரியிலும் படித்தார். இவருடைய பதினோரு வயதில் டில்லியில் நடந்த மியூசிக் போட்டியில் வென்றவர். இவரது தாயார் உடனிருந்து உற்சாகம் தந்த முதல் ஆசான் ஆவார். பெங்காலி மொழியில் பாரம்பரிய இசை கற்று கல்யான்ஜி, முக்தாபிடே ஆகியோரிடம் முறையாக இசை கற்றார்.

இவருடைய பதினாறு வயதில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் "சரிகமப" என்ற இசை நிகழ்ச்சி யில் பாடியது பெரிய திருப்பமாக அமைந்தது . அந்த நிகழ்ச்சியை பார்த்த பின் தான் சஞ்சய் ஷீலா பன்சாலி தேவதாஸ் என்ற படத்தில் முதல் திரைப்பட பின்னணி பாடலை பாட வைத்தார். இதில் சுவாரஸ்யமான விசயம் என்ன என்றால் சஞ்சய் க்கு ஸ்ரேயா குரலை அறிமுகம் செய்து வைத்தது அவருடைய தாயார் தான். இந்த நிகழ்ச்சியில் வரும் இந்த பெண்ணின் குரலில் ஈர்ப்பு உள்ளது என்று சஞ்சயிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தான் சஞ்சய் அறிமுகம் செய்தார். இந்த முதல் ஆல்பமே பெரிய அறிமுகத்தை தந்தது.

ஷாருக்கான் படத்தில் முதன் முதலில் தேவதாஸ் படத்தில் பாடிய பாடல்கள் அவருக்கு தேசிய விருது, பிலிம்பேர் விருது, ஆர்.டி.பர்மன் விருது என்று வரிசையாக பெற்று தந்தது. இந்தியாவின் அனைத்து மொழி இசை அமைப்பாளர்களின் பார்வையும் இவர் மேல் விழுந்தது. தமிழில் முதல் பாடலை 2002 கார்த்திக் ராஜா இசையில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த "ஆல்பம்" திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய "செல்லமே செல்லம் என்றாயடா" என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

தொடர்ந்து 2003 ல் தெலுங்கில் பாடினார். தமிழில் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், யுவன், இமான்,அனிருத் என்று அனைத்து முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, ஒரிசா, கன்னடம், நேபாளம், பெங்காலி துளு போஜ்புரி சிங்களம், பாகிஸ்தானிய மொழி ஆங்கிலம் என்று பல மொழிகளில் இவரது குரல் குதுகலிக்கிறது. 

எந்த மொழியில் பாடினாலும் பொருள் சிதையாமல் மொழியின் இலக்கணம் புரிந்து பாடுவது அத்தனை எளிதல்ல. ஆனால் இவர் இதற்காக பெரும் முயற்சி செய்து பாடுவதன் மூலம் இவர் வேற்று மொழி காரர் என்ற உணர்வு பாடலை கேட்கும் ரசிகனுக்கு தோன்றாது. இதுதான் அவருக்கு மட்டுமே இருக்கும் மெனக்கெடலும் அதற்கான தனித்துவமும். இந்துஸ்தானி, கஜல் ,ஃபோல்க், பாப், பஜன் என்று எல்லா ஸ்டைலிலும் பாடியிருக்கிறார்.

இவரது குரலில் எந்த மொழியில் பாடினாலும் அந்த ரசிகனுக்கு உற்சாகம், துள்ளல், மகிழ்ச்சி,இன்பம், ஆச்சரியம் சோகம், துக்கம், இரக்கம், பிரிவு, வலி என்று கேட்பவரின் மனதில் எல்லா உணர்வுகளையும் கடத்தி விடுவதுதான் அவரை பெரிய வெற்றி பெற வைக்கிறது. ஆமாம். 2015ல் தான் விரும்பிய ஷிலாதித்யா முக்கோபாத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாடல்கள் பாடுவது மட்டும் அல்லாமல் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறார். 

உலகம் முழுவதும் நேரடி மேடை இசை நிகழ்ச்சிகளில் பங்களிப்பு செய்கிறார். மேடையில் எப்போதும் நின்று கொண்டு பாடாமல் மிகுந்த உற்சாகத்துடன் ஆட்டமும் பாட்டமுமாம் மாறி ரசிகர்களையும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்துவிடும் சாதுர்யம் படைத்தவர். நான்கு முறை தேசிய விருதுகள் ஏழு முறை பிலிம்பேர் விருது பத்து முறை தென்னிந்திய பிலிம்பேர் விருது பல மாநில அரசு விருதுகள் பெற்றவர். 

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் உலகில் நூறு பிரபலங்களில் ஒருவராக ஐந்து முறை இடம் பெற்றுள்ளார். அமெரிக்க ஆளுநர் டேட் ஸ்ட்ரிக்லேன்ட் என்பவர் 2010 ஜூன் 26 ஐ ஸ்ரேயா கோஷல் தினமாக அறிவித்தார். 2013 ஏப்ரல் 26 லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி தரும் விசயம். இந்திய தேசம் தாண்டி இவரின் குரல் காற்றில் உலகம் முழுவதும் பயணிக்கிறது.

உலக அளவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அவர் நடத்தும் மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பிரமாண்டமானவை. ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் சமூக சிந்தனையும் அக்கறையும் நிறைந்திருப்பது தனி ஸ்பெஷல்.  

திரைப்படம் மட்டும் அல்லாமல் தனியாக இசை ஆல்பமாக அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார். தமிழ் மொழியில் இருநூறுக்கும் மேலான பாடல்கள் பாடி உள்ளார். 2022ல் பார்த்திபனின் "இரவின் நிழல்" என்ற படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் "மாயவா தூயவா" என்ற பாடல் அவருக்கு ஐந்தாம் தேசிய விருதை பெற்று தந்தது.

" உன்ன விட உசந்தது ஒன்னுமில்ல"

"முன்பே வா என் அன்பே வா"

"என் ஆள பாக்கப்போறேன்"

"உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே"

"உன்னை விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு"

"அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு கணம் பாக்கவா"

"கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்"

"வானே வானே வானே நான் உன் மேகம் தானே"

"அன்பே அன்பே பேரன்பே பேரன்பே"

"போன உசுரு வந்திருச்சு உன்னை வாரி அணை்க சொல்லிருச்சி"

|எளங்காத்து வீசுதே"

"மயிலாஞ்சி மயிலாஞ்சி"

"நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்"

"ஏடி கள்ளச்சி என்னைத் தெரியலயா"

போன்ற பாடல் வரிகளுக்காக கொடுத்து இருக்கும் இவரின் குரலும், இசைச் சேர்ப்பாக அவருடைய ஹம்மிங்கும் பாடலுக்கு உயிராக அமைந்து நமது மனதை உருக்கியும், உலுப்பியும், வருடியும் வேறு உலகில் சஞ்சரிக்க வைக்கும் ஸ்ரேயாவின் குரல் எப்போதும் நாம் வித விதமாக கேட்டு கொண்டே இருக்க நீடூழி வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

                                                                                                          சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்