HBD K.V.Mahadevan : தேசிய விருதைப் பெற்ற முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்.. மகா இசைமேதை பிறந்தநாள் இன்று!-today is the birthday of kv mahadevan the first music composer to win a national award - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd K.v.mahadevan : தேசிய விருதைப் பெற்ற முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்.. மகா இசைமேதை பிறந்தநாள் இன்று!

HBD K.V.Mahadevan : தேசிய விருதைப் பெற்ற முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்.. மகா இசைமேதை பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Mar 14, 2024 06:31 AM IST

HBD Music Director K.V.Mahadevan : திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, அடிமைப் பெண் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் கே.வி.மகாதேவன். இவர் தன் வாழ்நாளில் 218 தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்

இவரின் தந்தை வெங்கடாசல பாகவதர். தாய் லட்சுமி அம்மாள். 1918-ம் ஆண்டு பிறந்த மகாதேவனுக்கு, முறைப்படி சங்கீதம் கற்றுக்கொடுக்க அனுப்பிவைத்தார் தந்தை வெங்கடாசல பாகவதர். அருகில் உள்ள பூதப்பாண்டி எனும் கிராமத்தில் அருணாசலக் கவிராயர் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். இவரின் கற்றறியும் வேகம் கண்டு வியந்த அருணாசலக் கவிராயர் பார்ப்பவர்களிடம் சொல்லிப் பூரித்தாராம். அந்த அளவிற்கு கே.வி.மகாதேவன் இசை ஞானம் இருந்துள்ளது.

கிருஷ்ணன்கோயில் வெங்கடாசலம் மகாதேவன் என்பதன் சுருக்கம் தான் கே.வி.மகாதேவன். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணன்கோயில் பகுதியில் வெங்கடாச்சல பாகவதர் பிச்சையம்மாள் தம்பதிக்கு 1918ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி பிறந்தார் கே.வி.மகாதேவன்.

சிறுவயதிலேயே பள்ளி படிப்பில் நாட்டம் கொண்டதால் படிப்பை தொடர வில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் பெண் வேடம் ஏற்று நடித்தார். இதையடுத்து இசைமேல் இருந்த பற்றால் பூதப்பாண்டி அருணாச்சல கவிராயரிடம் இசை பயின்றார்.அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக்குழுவில் இணைந்து பம்பாய், ஐதராபாத், தில்லி, நாக்பூர் என வெளியூர் கச்சேரிகளுக்கும் சென்றார்.

திரை இசை திலகம் என்றழைக்கப்பட்ட இசை மேதை கே.வி.மகாதேவன், 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் கொடி கட்டி பறந்தார். இவர் முதல் முதலாக 1942ல் மனோண்மணி என்ற படத்திற்கு இசையமைத்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் பணிபுரிந்துள்ளார். மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் இவருக்கு ஸ்வரா பிரம்மா (இசையின் தந்தை) என்றழைத்து பெருமைப்படுத்தியது. இவருக்கு மிகவும் பிடித்தமான இசைக் கருவி நாதஸ்வரம். ஏற்கனவே தான் உருவாக்கி வைத்துள்ள டியூன்களுக்கு ஏற்றபடி பாடலை எழுதுமாறு இவர் ஒருபோதும் கூறமாட்டார். மெட்டுக்கு பாடல் எழுதும் சூழல் இருந்த அந்த நாட்களில் எப்போதுமே எழுதப்பட்ட பாடல் வரிகளுக்கு மட்டுமே இவர் மெட்டமைப்பார்.

திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, அடிமைப் பெண் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் கே.வி.மகாதேவன். இவர் தன் வாழ்நாளில் 218 தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்தார்.

கே.வி.மகாதேவனின்,உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல, என்று உருகவைப்பார். இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம், நதி எங்கே போகிறது கடலைத்தேடி, பறவைகள் பலவிதம், கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள் என்று ஒவ்வொருவிதமாக, பாடல்களைக் கொடுத்த கே.வி.மகாதேவன் பாட்டுக்குத்தான் மெட்டு என்பதில் உறுதியாக இருந்தார்.

வாலி பாடலுக்கு நோ சொன்ன எம்எஸ்வி பின்னர் அந்த பாடலை ஹிட் பாடலாக்கிய கே.வி.மகாதேவன் குறித்து வாலி ஒரு மேடையில் கூறிருப்பார். அதில், கே.வி.மகாதேவன் இசையில், வாலி எழுதிய வரிகளில், P.சுசீலா மற்றும் TM சௌந்தரராஜன் இருவரும் இணைந்து பாடிய அற்புதமான பாடல் அரச கட்டளை படத்தில் இடம்பெற்ற புத்தம் புதிய புத்தகமே பாடல்.

இப்பாடாலை எம்எஸ்வி அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். பி ஆர் பந்துலு படம் அது. அதில் எம்ஜிஆர் நாயகன். எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இப்படத்தில் இசையமைக்கிறார். எம்ஜிஆருக்கு ஒரு டூயட் பாடல் கேட்டார்கள். நானும் புத்தம் புதிய புத்தகமே உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான் என அழகிய தமிழில் எம்ஜிஆருக்கு ஏற்றார் போல் பாடல் எழுதி கொடுத்தேன்.

ஆனால் எம்எஸ்வி அவர்கள் இப்பாடல் வரிகள் எல்லாம் நீளமாக இருக்கிறது வேற எழுதி கொடுங்கள் என சொல்லிவிட்டார். நானும் சரி என சொல்லிவிட்டேன். அன்றைக்கு மாலை அரசகட்டளை படத்திற்கு கேவி மகாதேவன் உடன் கம்போசிங் இருந்தது. இந்த படத்திலும் எம்ஜிஆர் தான் நாயகன். இப்படத்திற்கு ஒரு டூயட் பாடல் கேட்டார்கள். நான் இந்த பாடலை கொடுத்தேன். இதற்கு கேவி மகாதேவன் அற்புதமாக டூயட் போட்டு இப்பாடலை ஹிட் ஆக்கிவிட்டார்” என கூறி இருப்பார். இதுபோல பல மேஜிக் செய்து அசத்தி இருப்பார் கே.வி.மகாதேவன்.

இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான முதல் தேசிய விருதை கந்தன் கருணை படத்திற்காக பெற்றார் கே.வி.மகாதேவன். ஆந்திரப் பிரதேச அரசின் நந்தி விருதையும், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதையும், ஃபிலிம்பேர் உள்ளிட்ட பல விருதைகளை வென்றுள்ளார். சென்னையில் 2001ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தன் 83 வயதில் காலமானார். மகா இசைமேதை மகாதேவனின் 106-ஆவது பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.