தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Today Is The Birthday Of 'Director Karthi Subbaraj, Who Tasted Success Without Gurunath

HBD Karthik Subbaraj: ‘குருநாதரே இல்லாமல் வெற்றியை சுவைத்த இயக்குநர் கார்த்தி சுப்புராஜ்’ பிறந்த நாள் இன்று

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 19, 2024 06:30 AM IST

Karthik Subbaraj: எவரிடமும் துணை இயக்குனர் என்று வேலை பார்க்காமல் சுயசிந்தனையோடும் சுயசார்போடும் அவர் இயக்கிய லாஸ்ட் ட்ரெய்ன், ராவணம், பெட்டி கேஸ், நீர் போன்ற குறும்படங்கள் அவரின் தனித்திறனை வெளியுலகம் அறிய உதவியது அவரை இறுதிப்போட்டி வரை அதில் பயணம் செய்ய வைத்தது. முடிவாக டைட்டில் வின்னர் ஆனார்.

கார்த்தி சுப்புராஜ் பிறந்தநாள்!
கார்த்தி சுப்புராஜ் பிறந்தநாள்!

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

மதுரையில் 1983 மார்ச் 19 அன்று பிறந்தவர். இன்று வயது 42ல் காலடி பதிக்கிறார். ஆரம்ப கால கல்வியை மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் படித்து விட்டு திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டம் முடித்துவிட்டு பொறியாளராக பணி புரிந்து வந்தார். பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் பேச்சு போட்டி, கவிதை போட்டி, நாடகம் என்று  கலை மீதான ஆர்வத்தை தனக்குள் வளர்த்து கொண்டவர். 

வேலை பார்த்து கைநிறைய சம்பளம் வந்த போதிலும் சிறுவயதில் இருந்தே அவருக்குள் இருந்த கலை மீதான ஆர்வம் குறையவில்லை. நிறைய பயிற்சி பட்டறைகளில் சேர்ந்து திறனை மேம்படுத்தி வந்த நேரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சிக்காக குறும்படங்களை இயக்கினார். 

எவரிடமும் துணை இயக்குனர் என்று வேலை பார்க்காமல் சுயசிந்தனையோடும் சுயசார்போடும் அவர் இயக்கிய லாஸ்ட் ட்ரெய்ன், ராவணம், பெட்டி கேஸ், நீர் போன்ற குறும்படங்கள் அவருடைய தனித்திறனை வெளியுலகம் அறிய உதவியதோடு இறுதிப்போட்டி வரை அந்த நிகழ்வில் பயணம் செய்ய வைத்தது. முடிவாக டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்ட வெற்றி உற்சாகத்துடன் திரைப்படம் இயக்க தயாரிப்பாளரை தேடினார். அது அவ்வளவு எளிதாக நடந்து விட வில்லை.

நீண்ட போராட்டத்துக்கு பின்னர் தயாரிப்பாளர் திருமங்கலத்தை சேர்ந்த சி.வி.குமார் அவர்களிடம் கதையை சொல்லி இயக்கிய முதல்படம் தான் பீட்சா. பலருக்குமான வெற்றி பெற்று தந்த படம். அது ஒரு திரில்லர் படம், கிரைம் படம், பேய் படம், திகில் படம், என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு பீலை கொடுத்தது. மிகக் குறைந்த லோபட்ஜெட்டில் தயாரித்த பீட்சா எல்லோருக்கும் மாபெரும் விருந்து படைத்தது என்றே சொல்லலாம். 

ஆமாம் பீட்சா சின்னப்படம். ஆனால் கிடைச்ச வெற்றி பெரியது பொதுவாக முதல் படத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டாவது படம் சவாலாகவும் டென்ஷனையும் உருவாக்கி விடும். ஆனால் அவரின் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த ஜிகர்தண்டா கேங்ஸ்டர் படமாக உருவாகி மாபெரும் வெற்றியை ருசிக்க வைத்தது.

எப்போதும் யாரும் நினைக்கும் பாதையில் செல்லாத திரைக்கதை அவரின் பலம். அதே போல் தெளிந்த நீரோடையாய் திரைக்கதை வசனம் அமைத்து விடுகிறார். முதல் இரண்டு படங்களில் கிடைத்த வெற்றி அவருடைய இயக்கத்துக்கும் திறமைக்குமான வெற்றி. இந்த வெற்றி அவரை முன்னணி இயக்குநர்கள் வரிசையில் கொண்டு போய் சேர்த்தது. தன்னை போன்ற இளைஞர்களுக்கு பாதையாக இருக்க விரும்பி ஸ்டோன் பெஞ்ச் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

பீட்சா மிகவும் பெரிய வெற்றியைத் தொடர்ந்து கன்னடம் இந்தி பெங்காலி மொழிகளில் ரீமேக்கில் வெளியானது. இரண்டாவது படம் ஜிகர்தண்டா மிக பெரிய வெற்றி பெற்று நடிகர் பாபிசிம்ஹாவுக்கு தேசிய விருது பெற காரணமாக அமைந்தது. பெஞ்ச் டாக்கீஸ் தொடர்ந்து இறைவி என்ற படத்தின் மூலம் ஆணாதிக்கம் குறித்தும் பெண்களுக்கான உரிமை குறித்தும் பெரிய அளவில் பேசினார்.

பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான மெர்க்குரி பெரிதாக ஒளிரவில்லை. எல்லா இயக்குனர்களின் ஆசை ரஜினி அவர்களுக்காக படம் இயக்குவது ஒரு கனவாக இருக்கும். இவருக்கு விரைவில் அந்த வாய்ப்பு கிடைத்தது. ரஜினியை வைத்து இயக்கிய பேட்டை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி படமும் நவரசா என்ற பெயரில் வந்த தொடரில் ஒரு குறும்படமும் ஜகமே தந்திரம், மகான் போன்ற படங்களை குறுகிய காலத்தில் இயக்கி உள்ளார். சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா இரண்டாவது பாகமும் பெரிய வெற்றி பெற்றது. சில படங்களில் எழுத்தாளராகவும் இருந்து உள்ளார். மற்ற இளைஞர்களுக்காக இவருடைய தயாரிப்பில் புதிய படங்களையும் இனைய தொடர்களையும் எடுத்து வருகிறார். அவரோடு இனைந்து பிறரையும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறார். இது அவரது கலை ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது.

ஒரு இளைஞனாக பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தவருக்கு வேறு ஒரு பிராஜக்ட்காக மாற்றிய போது ஏற்க தயங்கிய போது வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுவும் நன்மைக்கே என்று நேர்மறையாக எடுத்து கொண்டு பிலிம் மேக்கிங் என்பது மட்டுமே தனது பாதை என்று தீர்மானித்தார். அதற்கான மெனக்கெடலும் அறிவும் அவரை நாளைய இயக்குனர் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

கூடுதலாக மதன் மற்றும் பிரதாப்போத்தன் அவர்கள் கொடுத்த உற்சாகத்திலும் சஞ்சய் நம்பியார் அவர்களிடம் தொழில் கற்ற தைரியத்தை வைத்து திரைப்படம் இயக்க முயற்சி செய்தார். நாளைய இயக்குநர் டைட்டில் அவருக்கான விசிட்டிங் கார்டாக இருந்த போதிலும் சினிமா வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து கொண்டு இரண்டு வருட போராட்டத்துக்கு பின்னர் தான் 2012 ல் பீட்சா என்ற வெற்றி படம் மூலம் இன்றைய இயக்குனர் பட்டியலில் அவர் பெயரை செதுக்கியது.

எத்தனை வெற்றி பெற்ற படங்களை இயக்கிவிட்ட போதிலும் இன்றும் தனது படத்துக்கு முதல் படம் போலவே நினைத்து கொண்டு நம்பிக்கையோடு தனது முழு உழைப்பையும் தொழிலில் ஈடுபாட்டுடன் முழு மூச்சாய் பேராடுவதன் மூலம் அவருக்கு தொடர் வெற்றி சாத்தியமாகிறது. அவருக்கு குருநாதராக எந்த இயக்குனரும் இல்லை என்றாலும் பல இளைஞர்களுக்கு குருநாதராக இருக்கிறார்..

இன்னும் காலம் நிறைய அவருக்காக காத்திருக்கிறது. அவருடைய தொழில் நேர்மை இன்னும் பெரிய பெரிய வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைக்கும் என்று கூறி இந்த பிறந்த நாளில் நாம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்