‘ஒத்த ரூபா பாட்டுல டிரெய்லர விடு.. சம்பவத்த நாங்க காட்றோம்’ குட் பேட் அக்லி டிரெய்லரை முன்பே கணித்த நெல்லை ரசிகர்!
எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அஜித் ரசிகரின் கணிப்பு எப்படி பலித்தது? குட் பேட் அக்லி திரைப்படத்தின் இயக்குனரும் ஒரு அஜித் ரசிகர். பொறுப்பு வேறு என்றாலும், ரசிகன் என்கிற முறையில் ரசனை ஒன்று தானே

AK நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று இரவு வெளியாகி, அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் டிரெய்லர் டெம்ப்ளேட்டில், குட் பேட் அக்லியை இறக்கியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இது இதுவரை அஜித் ரசிகர்கள் சந்திக்காத அனுபவம். வழக்கமாக தீம் மியூசிக் போட்டு, டீசரோ, டிரெய்லரோ வெளியிடுவது தான், அஜித் படத்தின் டெம்ப்ளேட். ஆனால், அதை உடைத்து 90களின் பாடலை பின்னணியாக வைத்து டிரெய்லரை விட்டு, குதூகலிக்க வைத்துள்ளார் ஆதிக்.
முன்பே கணித்த அஜித் ரசிகர்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில், அவரே எழுதி, இளையராஜா இசையமைத்த பாடல் தான் ‘ஒத்த ரூபா தாரேன்..’ பாடல். அந்த பாடலை தான், குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லருக்கு பயன்படுத்தியிருக்கிறார் ஆதிக். படத்திலும் இந்த பாடல் இடம் பெறும் என்று தெரிகிறது. இதெல்லாம் நேற்று இரவு 9:01 மணிக்கு பிறகு டிரெய்லர் வந்த பின் தெரிந்த விபரம். ஆனால், அதற்கு முன்பே அதாவது மார்ச் 04 ம் தேதி காலையிலேயே ‘ஒத்த ரூபா தாரேன்..’ பாடல் தான் டிரெய்லரில் வரப் போகிறது என்று கணித்த, திருநெல்வேலி அஜித் ரசிகரின் கணிப்பு, 100% நிறைவேறிவிட்டது.
இதை கணித்த அந்த ரசிகரின் எக்ஸ் தள பக்கத்தில், அஜித் ரசிகர்கள் படையெடுத்து அவரை புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ‘பஞ்சுமிட்டாய் சேல கட்டி..’ என்கிற பாடலுடன் வரும் மார்க் ஆண்டனி டிரெய்லரை போட்டு, ‘இதே மாதிரி ‘ஒத்தரூபா பாட்டு’ வச்சி மட்டும் ட்ரெய்லர் விடு, சம்பவம்னா என்னனு நாங்க காட்றோம்’ என்று ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கோரிக்கை வைத்து எக்ஸில் பதிவிட்டுள்ளார் கனி பாண்டியன் என்கிற அந்த வாலிபர்.
சொல்லி அடிச்ச மாமே!
அவர் சொன்னது போலவே, குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லரில், ‘ஒத்த ரூபா தாரேன்..’ பாடல் தான் இடம் பெற்றது. சொல்லி வைத்து கணித்த அந்த நெல்லை அஜித் ரசிகர், படத்தின் டிரெய்லர் போலவே கலக்கிவிட்டார் என, அவருக்கு பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, ‘யாருய்யா நீ?.. எப்புடியா? என்னய்யா இது..’ என பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள். ‘என்ஜாய் மாமே..’ என அவரும், அவர்களுக்கு மகிழ்ச்சியோடு பதிலளித்து வருகிறார். அவருடைய பதிவை 400க்கும் மேற்பட்டோர் பகிர்ந்தும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்தும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டும் வருகின்றனர்.
எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அஜித் ரசிகரின் கணிப்பு எப்படி பலித்தது? குட் பேட் அக்லி திரைப்படத்தின் இயக்குனரும் ஒரு அஜித் ரசிகர். பொறுப்பு வேறு என்றாலும், ரசிகன் என்கிற முறையில் ரசனை ஒன்று தானே!
