தக் லைப் விமர்சனம்: நாயகனா? செக்கச் சிவந்த வானமா? மணிரத்னம் செய்ததும்.. கமல் செய்யாததும் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தக் லைப் விமர்சனம்: நாயகனா? செக்கச் சிவந்த வானமா? மணிரத்னம் செய்ததும்.. கமல் செய்யாததும் என்ன?

தக் லைப் விமர்சனம்: நாயகனா? செக்கச் சிவந்த வானமா? மணிரத்னம் செய்ததும்.. கமல் செய்யாததும் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 05, 2025 11:41 AM IST

பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மணிரத்னம் இயக்கி, கமல், சிம்பு, த்ரிஷா நடித்த தக் லைப் திரைப்படம், இன்று உலகெங்கிலும் வெளியாகியுள்ளது.

தக் லைப் விமர்சனம்: நாயகனா? செக்கச் சிவந்த வானமா? மணிரத்னம் செய்ததும்.. கமல் செய்யாததும் என்ன?
தக் லைப் விமர்சனம்: நாயகனா? செக்கச் சிவந்த வானமா? மணிரத்னம் செய்ததும்.. கமல் செய்யாததும் என்ன?

கதையின் கரு:

டெல்லியில் மிகப்பெரிய கேங்ஸ்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார் காயல் பட்டினக்காரார் சக்தி வேல் நாயக்கர் (கமல்ஹாசன்). இவருடைய அண்ணன் மாணிக்கம் (நாசர்). இவர்களுடன் சம்பவம் ஒன்றில் தங்கையை தொலைத்த அமரன் (சிலம்பரசன்) இணைந்து கொள்ள நேரிடுகிறது. ஒரு கட்டத்தில் சக்தியின் வளர்ப்பு மகனாகவே மாறிப்போன அமரன்தான் அவருக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்கிறான்.

காலம் செல்ல செல்ல, தம்பிக்கு கிடைக்கும் செல்வாக்கை பார்த்து பொறாமை படும் மாணிக்கம், அந்த இருக்கையை பிடிக்க, அமரனை வைத்து சக்தியை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார். அந்த கொலை முயற்சியில் சக்திக்கு என்ன ஆனது? அதிகார இருக்கையில் கடைசியாக அமர்ந்தது யார்? சக்திவேலின் குடும்பம் என்ன ஆனது? அமரன் என்ன ஆனான்? தொலைத்த தங்கை கிடைத்தாளா?உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் கதை

மணிரத்னம் டச்

காதல், ரொமான்ஸ், வசனம் என படம் முழுக்க மணி ரத்னத்திற்கே உரித்தான ஸ்பெஷல் டச். நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் நடிப்பை நிதானமாக பார்ப்பதற்காக ஸ்பேசை உருவாக்கி கொடுத்து இருந்தது சிறப்பு. பல இடங்களில் அவர் பேசும் மொழிநடை நடிகர் சிவாஜியை நியாபகப்படுத்துகிறது. ஆக்‌ஷனில் தனியாளாக நின்று மிரட்டி இருக்கிறார் ஆண்டவர்.

கமலுக்கு கண்ணகியாக ஒரு பக்கம் ஜீவா அன்பை ( அபிராமி) பொழிந்தால், இன்னொரு பக்கம் மாதவியாக வந்து ( த்ரிஷா) அன்பை பொழிகிறாள் இந்திராணி. கமலுக்கும் , த்ரிஷாவுக்கும் இடையேயான ரொமன்ஸ் காட்சிகள் ரசிக்க வைத்தன.

சிம்புவின் ஆக்ரோஷம் படத்தின் பெரும் பலம். ஸ்டைல், ஆக்ஷன், நடிப்பு, எமோஷன் என அதகளம் செய்து இருக்கிறார். படத்தில் அவர் வெடிக்கும் ஒவ்வொரு இடங்களிலும், தியேட்டரில் பெரும் சத்தம். சில இடங்களில் வந்தாலும் அசோக் செல்வன் ஹேண்ட்சம் லுக் புருவம் உயர்த்த வைக்கிறது.

பலவீனம்.

கேரக்டர் லுக், ஃப்ரேமிங், கேரக்டர் ஸ்கெட்ச், பெர்பாமன்ஸ் என பல தளங்களில் மெனக்கெட்டு வேலை பார்த்திருக்கும் மணிரத்னம், அரதப் பழைய கேங்ஸ்டர் கதையை கையில் எடுத்தது படத்தின் பெரும் பலவீனம்.

சிலம்பரசனின் தங்கை சென்டிமெண்ட் ஆரம்பத்தில் வொர்க் அவுட் ஆனாலும் இறுதியில் பெரிதாக கனெக்ட் ஆகாமல் போனதற்கு காரணமும் அதுதான். சிம்பு மாணிக்கம் சொன்னதை நம்பி சக்திக்கு எதிராக அவ்வளவு பெரிய வேலைகளை பார்ப்பது மணிரத்னம் கதைக்கு செய்த துரோகம். அமரன் என்ன அவ்வளவு மக்கா?

அதுதான் கதையின் மையப்புள்ளி என்றால், நாசர் சுடுவதையாவது நீங்கள் காண்பிக்காமல் இருந்திருக்கலாம். காரணம், படத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச எக்சைட் மெண்ட்டும் அதில் காலியாகி விட்டது. அன்பறிவின் ஆக்‌ஷன் திரையை சிதறவிட்டு இருக்கிறது.

கதையின் போக்கில் பல இடங்களில் செக்க சிவந்த வானம் படத்தின் வாடை வேறு.. ரஹ்மான் மெனக்கெட்டு போட்ட, நாம் ரசித்துக்கொண்டாடிய பெரும்பான்மையான பாடல்கள் படத்தில் இல்லாதது ஏமாற்றம். பின்னணி இசையில் மணிரத்னம் மீதான அன்பின் வெளிப்பாடாக இசையை அள்ளிக்கொடுத்திருக்கிறார் ரஹ்மான்.

ஜெய்சால்மர், டெல்லி, கோவா, நேபாளம் என சுற்றி சுழன்று நேர்த்தியான வேலைபாடை அளித்திருக்கிறது ரவியின் ஒளிப்பதிவு. முதல் பாதையில் கதை இன்னதென்று சொல்வதற்கும், கதாபாத்திரங்களை விவரிப்பதற்குமே அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், அவை சுவாரசியமாகவே கடந்தன. ஆனால், இரண்டாம் பாதியில் வெறும் ரிவெஞ்சை ஐடியாவை மட்டுமே வைத்துக்கொண்டு திரைக்கதை நகர்ந்தது பெரும் சலிப்பு; ஆக, இறுதியாக ஒரு சாதாரண பழிவாங்கும் கதையை தன்னுடைய பாணியில் கொஞ்சம் கலர்கள் தூவி கோலம் போட்டு மாற்றி கொடுத்திருக்கிறார் மணி ரத்னம். தக் லைஃப் ஏமாற்றம்.