தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Thoothukudi District Administrator Leaves Tvk Party And Joins Dmk

TVK Party: முதல் பொதுகூட்டம் முன்னரே விஜய் கட்சியிலிருந்து விலகிய மாவட்ட செயலாளர்! காரணம் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 10, 2024 11:56 AM IST

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுகூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே கட்சியிலிருந்து மாவட்ட செலாளர் விலகியுள்ளார்.

தளபதி விஜய்யுடன் பில்லா ஜெகன்
தளபதி விஜய்யுடன் பில்லா ஜெகன்

ட்ரெண்டிங் செய்திகள்

அத்துடன், விஜய்க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகளையும், விமர்சனங்களையும் முன் வைத்தனர்.

விஜய் மக்கள் இயக்கமாக செயல்படும் பொழுது தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன் என்பவர் தற்போது விலகி திமுகவில் இணைந்துள்ளார். தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவரை நியமித்துள்ளது. இவர் பில்லா ஜெகனின் சகோதரர் தான்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் பில்லா ஜெகன், விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர். அவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராக உள்ளார்.

தமிழக வெற்றி கழகம் அறிவிப்பு

பிப்பவரி 2ஆம் விஜய் மக்கள் கழகத்தை, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியாக அறிவித்தார் நடிகர் விஜய். இதன் பின்னர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் விஜய்யின் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட போவதில்லை எனவும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை எனவும் விஜய் தெரிவித்திருந்தார். அத்துடன், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்தார்.

முதல் நிர்வாகிகள் கூட்டம்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல் நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி சினிமா படப்பிடிப்பில் இருந்ததால், அந்த கூட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொள்ளாமல், காணொளி காட்சி மூலமாக கலந்து கொண்டார்.

அப்போது விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கிராமங்களில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

முதல் பொதுகூட்டத்துக்கு முன்னரே கட்சி நிர்வாகி விலகல்

தமிழக வெற்றி கழகத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கட்சியின் முதல் பொதுக்கூட்டத்தை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் விலகியிருப்பது கட்சியினரிடையே பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பில்லா ஜெகன் விலகல் பின்னணி

விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்த பில்லா ஜெகன், ஏற்கனவே திமுகவில் இருந்தார். சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த விவகாரத்தில் 2019இல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். நடிகர் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்த நாளில் பில்லா ஜெகன், திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

அப்போதே அந்த போட்டோக்கள் இணைய தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், பில்லா ஜெகன் விஜய் கட்சியில் இருந்து விலகி திமுகவில் மீண்டும் இணைந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.