Therukkural Arivu: சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தெருக்குரல் அறிவு.. அம்பேத்கர் மண்டபத்தில் நடத்தியது ஏன்?
அம்பேத்கர் மண்டபத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது ஏன் என்பதற்கு தெருக்குரல் அறிவு பேசி இருக்கிறார்

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'காலா' படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் அறிவு. இதற்கிடையே, அவர் வெளியிட்ட ‘தெருக்குரல்' ஆல்பம் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த ஆல்பத்தை வெளியிட்டதிலிருந்து, அவர் தெருக்குரல் அறிவு என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் ராப் பாடல்களையும் பாடியும் எழுதியும் வரும் இவர், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று கல்பனா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இளையராஜா நடத்தி வைத்த இந்தக்கல்யாணம் சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு பா.ரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்டோர் வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
சுயமரியாதை திருமணம்
அதில் அவர் பேசும் போது, ‘ நான் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்; சிறு வயதில் இருந்தே ஜாதி மத ஏற்றத்தாழ்வுகளை தாண்டி எப்படி சுதந்திர காற்றை சுவாசிப்பது என்ற கேள்வி எனக்கு இருந்து கொண்டே இருந்தது. நான் பெரியாரின் கொள்கைகளை கொண்டு சேர்ப்பேன்.
அம்பேத்கரின் மூலமாக உரிமைகளை பெற்று, அதன் வழியாக சுயமரியாதை உள்ள மனிதராக நாம் மாறி இருக்கிறோம். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகதான் நான் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு வந்தேன். எனக்கு இசைஞானி இளையராஜா திருமணம் செய்து வைத்தார்.’ என்றார்.
இசையினுடைய இறைவன்
மேலும் பேசிய அவர், ‘இளையராஜா இசையினுடைய இறைவன்; அவருடைய கரங்களால் நான் திருமணம் செய்து கொண்டது மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம்; சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை தாண்டி இசையால்தான் இணைய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது; அந்த தேடல் இருந்தது. அது இன்று ஒரு திருமணமாக நடந்தேறி இருக்கிறது.அம்பேத்கர் இல்லையென்றால் நாம் இன்று தெருவிலேயே நடமாடி இருக்க முடியாது.
வேறு யாருக்கு நாம் நன்றி சொல்வது
நாம் படிப்பதிலிருந்து, எழுதுவதிலிருந்து என எல்லாவற்றையும் அம்பேத்கர் நமக்காக அவருடைய எழுத்தின் மூலமாக உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் உடலால் மறைந்தாலும் கூட, அவரது எழுத்து தான் நம்மை தைரியமாக பேச வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது, அவருக்கு நாம் நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நாம் நன்றி சொல்வது. நாங்கள் மனிதர்களாக கல்யாணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சொல்வதற்காக தான் இங்கு வந்து நான் கல்யாணம் செய்தேன்.’ என்று பேசினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்