"பாதுகாப்புத்துறை அனுமதியோடு தான் அமரன் படம் வெளியானது. இது என் சொந்தக் கருத்து அல்ல"- டைரக்டர் விளக்கம்
ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் என் சொந்தக் கருத்தை திணிக்கக் கூடாது என்ற தெளிவுடன் இருக்கிறேன் என அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எதிர்மறை கருத்துகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அமரன். ராணுவத்தில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்மறை விமர்சனங்கள்
இந்தப் படத்தில், மேஜர் முகுந்த்தின் சாதிய அடையாளம் திட்டமிட்டே மறுக்கப்பட்டுள்ளது, சிஆர்பிஎஃப் வீரர்கள் குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளது, 44 ஆர் ஆர் குழுவின் முழக்கம் தவறானது, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக குறிப்பிட்டது என பல்வேறு எதிர்மறையான கருத்துகளையும் விமர்சனங்களையும் இந்தப் படம் தற்போது வரை சந்தித்து வருகிறது.
ஆனால், இதற்கு மத்தியில் படம் வெளியான 10 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலைக் குவித்து, வரலாற்று வெற்றியை தன்வசமாக்கி வருகிறது. மேலும், இந்தப் படம் வரும் நாட்களில் இன்னும் கூடுதல் வசூலைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு காட்சி
இந்த சமயத்தில், முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கத்தினருக்கு இந்தப் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பங்கேற்றார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த படம் பலருக்கும் நிறைய இடத்தில் கனெக்ட் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி சினிமாவில் உள்ள அனைவருக்கும் பெரிய நம்பிக்கை கொடுத்துள்ளது. மக்களுக்கும் சினிமாக் காரர்களுக்கும் நடுவில் பாலமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் தேவையில்லாத காட்சிகளையோ, வசனங்களையோ சேர்க்கவில்லை. இந்தப் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சினிமா க்ராஃப்டை நம்பி மட்டுமே எழுதப்பட்டது. இராணுவ வீரரின் கதையை எவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியும் என்கிற எண்ணத்தை மட்டுமே முன்னே வைத்துக்கொண்டு எடுத்த படம் அமரன் எனக் கூறினார்.
பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்ற படம்
இந்தப் படம் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ. ஆகியோரின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்பட்டுள்ளது. இராணுவம் தொடர்பான ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அதற்கான சான்றிதழ் படக்குழுவிடம் உள்ளது. அ
துமட்டுமின்றி, இந்தப் படத்தை பார்த்து ராணுவ வீரர்களும் பாராட்டியிருக்கின்றனர். யாராக இருந்தாலும் ஒரு படம் வெளியான உடன் அதைப்பற்றி பேசுபவர்கள், ஒரு தகவலை சொல்லவும் வருவர், அவர்கள் ஒரு தகவலைக் கூறும் முன் அது சரியான தகவல்கள் தானா என்று சரிபார்த்து பேச வேண்டும்.
சொந்தக் கருத்துகளை திணிக்க மாட்டேன்
'போல் பஜ்ரங் பாலி கி ஜெய்...' என்ற முழக்கம் 44 ஆர்.ஆர்.குழுவுடைய போர் சம்பந்தப்பட்ட ஒன்று. அதை படத்தில் மாற்றி எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் அது மாபெரும் தவறாகிவிடும். அமரன் திரைப்படம் என்னுடைய அரசியல் பார்வையையும், சொந்த கருத்துகளையும் சொல்லும் படம் கிடையாது.
எனக்கும் சில கருத்துக்கள் இருக்கிறது. அதை படத்தின் கதாபாத்திரத்தில் திணிக்கக்கூடாது என்பதில் ஒரு இயக்குநராக மிகவும் தெளிவுடன் இருக்கிறேன். சினிமாக்காரர்களுக்கு சமூக பொறுப்புகளும் இருக்கிறது. அதற்கு உட்பட்டு இந்த அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, 'போல் பஜ்ரங் பாலி கி ஜெய்...' என்ற முழக்கம் குறித்து முன்னாள் இராணுவ வீரர் சொல்வது தவறான தகவலாக இருக்கலாம் என நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
வாழ்ந்து காட்டிய நடிப்பு அரக்கர்கள்
நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா.
ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. இதனால், ஏற்கனவே படம் பார்த்தவர்களும் கூட, இவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு தியேட்டருக்கு திரும்பத் திரும்ப வருகின்றனர்.
டாபிக்ஸ்