தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Atlee: இந்தியில் வருண் தவானை வைத்து படம் தயாரித்து வந்த அட்லீ - டைட்டில் குறித்து பகிர்ந்த முக்கிய தகவல்

Atlee: இந்தியில் வருண் தவானை வைத்து படம் தயாரித்து வந்த அட்லீ - டைட்டில் குறித்து பகிர்ந்த முக்கிய தகவல்

Marimuthu M HT Tamil
Feb 04, 2024 08:51 PM IST

இந்தியில் அட்லீ தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியாகவுள்ளது.

இந்தியில் அட்லீ தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியீடு
இந்தியில் அட்லீ தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியீடு

ட்ரெண்டிங் செய்திகள்

பாலிவுட் நடிகர் வருண் தவான் தற்போது இயக்குநர் அட்லீயின் தயாரிப்பில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக VD18 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம், இப்படத்தின் படப்பிடிப்பின்போது இரும்புக்கம்பியில் மோதி விபத்தில் சிக்கினார், பாலிவுட் நடிகர் வருண் தவான். அப்போது கம்பியில் மோதி கால்கள் வீங்கிய புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார், பாலிவுட் நடிகர் வருண் தவான்.

முன்னதாக பிங்க்வில்லா ஊடகத்திடம் வருண் தவான் ஒரு நேர்காணலைப் பகிர்ந்து இருந்தார். அதில் அவர் அளித்த பேட்டியில், " VD18 ஒரு மாஸ்-ஆக்ஷன் என்டர்டெய்னர் என்று என்னால் சொல்ல முடியும். நான் நடிக்கும் இந்தப் படத்தில் நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இப்படத்தின்மூலம் நிறையபொழுதுபோக்கினை சினிமா ரசிகர்களுக்குத் தரப்போகிறேன்’’ என்றார்.

கடந்த டிசம்பர் மாதம் வருண் தவான், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், தனது நட்பு நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவுடன் கலந்துகொண்டார். இயக்குநர் கரண் ஜோஹரின் இயக்கத்தில் வெளியான ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் இடம்பெற்ற பாடலிலும் சிறப்புத்தோற்றத்திலும் வருண் தவான் நடித்திருந்தார். இறுதியாக, நித்தேஷ் திவாரி இயக்கத்தில் உருவான ‘பவால்’திரைப்படத்தில் ஜான்வி கபூருக்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூலை 21அன்று பிரைம் வீடியோவில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் ’சிட்டாடல்’ என்னும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அதில் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த சீரிஸின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்றன.

இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் VD 18 படத்தின் டைட்டில் நாளை (பிப்ரவரி 5) நண்பகல் 2 மணிக்கு ரிலீஸாகிறது என படத்தின் தயாரிப்பாளர் அட்லீ தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார். இப்படத்தை ஜியோ சினிமாஸுடன் சேர்ந்து முரத்தேஷ் கெடனி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் கூட்டாக தயாரிக்கின்றனர். இப்படத்தினை தமிழில் ஜீவாவை வைத்து ‘கீ’ என்னும் படத்தினை இயக்கிய இயக்குநர் காளீஸ் இயக்குகின்றார்.

இப்படத்துக்கான எழுத்துப்பணிகளை இந்தியில் சுமித் அரோரா செய்கிறார். இசையை தெலுங்கு உலகில் நம்பர் ஒன் இசையமைப்பாளரான தமன் செய்கிறார்.

முன்னதாக, இயக்குநர் அட்லீ, நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாயினைத் தாண்டி வசூல் செய்து சாதனைப் படைத்தது. இந்நிலையில் இயக்குநர் அட்லீ, இப்படம் மூலம் இந்தியில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்துக்குப் பின், மீண்டும் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போகிறார், அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்