Captain Miller: கேப்டன் மில்லர் இந்த நடிகரோட கதையா? - கோடம்பாக்கத்தில் வெடித்த சர்ச்சை
- கேப்டன் மில்லர் திரைப்படம் தன்னுடைய கதை என்று சொன்ன நடிகரால், கதைத் திருட்டு சர்ச்சை உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பொங்கலை ஒட்டி, கடந்த ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் தான், கேப்டன் மில்லர்.
இப்படத்தில் தனுஷ் தவிர, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்,தெலுங்கின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் வாரத்தில் 61 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றன.
கேப்டன் மில்லர் படத்தின் ஒன்லைன் கதை என்ன? சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்காக, போராடும் நபரின் கதையே கேப்டன் மில்லர். அதாவது, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த ராணுவ வீரர் கொள்ளைக்காரனாக மாறி, சாதி ரீதியாக துன்புறுத்தப்படும் ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராகப் போராடுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் கதை நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தியுடையது என்றும்; இக்காலகட்டத்தில் அவருக்குத் துணைநிற்கவேண்டும் என்ற குறிப்பினை டிஸ்கவரி பதிப்பத்தின் பதிப்பாளர் வேடியப்பன் முகநூலில் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய அந்தப் பதிவில், ''சமீபத்தில்தான் தமிழ் திரைத்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் கொஞ்சம் வாசிப்புப் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்று இப்போதுதான் பலரிடமும் மகிழ்ச்சியாகப் பேச முடிகிறது. பார்க்க முடிகிறது. புதிய நூல்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். வாசிப்பு என்பது தங்களது அறிவை, கலை கலாசாரத்தைப் புரிந்துகொண்டு புதியன படைப்பதற்காக இருக்க வேண்டும். அப்படித்தான் பலரும் இருக்கிறார்கள். ஆனால், சிலர் அப்படியே காப்பி அடைத்து பணம் சம்பாதிக்க என்று புரிந்துகொள்வது ஆபத்தானது. சமீபத்தில் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஆரோக்யமானது அல்ல. ஒரு படைப்பாளனின் படைப்பைத் திருடுவதுபோல ஒரு முட்டாள்தனமானது என்னவாக இருக்க முடியும்?.
கேப்டன் மில்லர் திரைப்படம், டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டுள்ள தனது பட்டத்துயானை நாவலின் அப்பட்டமான திருட்டு என்று எழுத்தாளர் வேலராமமூர்த்தி குற்றம் சாட்டி உள்ளார். படைப்பாளர்கள் குரல்கொடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் வேலராமமூர்த்தியை விட நம்மில் பலருக்கு மதயானைக்கூட்டத்தில் வில்லனாக நடித்தவர், சேதுபதி படத்தில் வாத்தியார் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர், கிடாரி படத்தில் கொம்பையா பாண்டியனாக நடித்தவர் எனச் சொல்லும் அளவுக்கு அவரை நடிகராகத்தான் பலருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் அதற்குமுன்பே பெரிய எழுத்தாளராகவும் இருந்துள்ளார். அவரது பட்டத்து யானை நாவலின் பல்வேறு பகுதிகள் கேப்டன் மில்லரில் காட்சியாக்கப்பட்டுள்ளதால் தான் இந்த சர்ச்சை எனப் பலரால் பேசப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்