‘வெற்றிமாறன் கெட்ட வார்த்தை பேசுறாரா? - மத்த ஷூட்டிங்க போய் பாருங்க.. அவ்வளவு திட்டு’ - ஓப்பனாக பேசிய பாலா!
வெற்றிமாறன் கெட்ட வார்த்தை பேசுவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடும் நிலையில், அது குறித்து நடிகர் பாலா பேசியிருக்கிறார்.
வெற்றிமாறன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக கெட்ட வார்த்தை பேசுவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், அதுகுறித்து வடச்சென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பாலா ஹாசன் குமுதம் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
கெட்ட வார்த்தைகள் அதிகமாக பேசுகிறாரா?
இது குறித்து அவர் பேசும் போது, ‘அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்பது டாப்பில் இருக்கும் நடிகர்களில் இருந்து கீழ் மட்டத்தில் இருக்கும் நடிகர்கள் வரை எல்லோருக்கும் தெரியும். பிற ஷூட்டிங்கில் ஷூட்டிங் நேரம் காலை 9 மணியில் இருந்து மாலை 6 வரை இருக்கும். ஆனால், அந்த ஷூட்டிங் 2 மணி நேரம் அதிகரித்தாலே அங்கு வேலை செய்பவர்கள் எல்லோரையும் பிடித்து திட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் வேலைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.
ஆனால் விடுதலை 2 படத்தில் ஷூட்டிங் அடுத்த நாள் காலை 6 மணி வரைக்கு சென்றால் கூட யாரும் கேட்கமாட்டார்கள். வெற்றிமாறன் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே கண்மூடித்தனமாக கேட்டு வேலை செய்வார்கள். அதை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். நடிகர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அது வேறு. ஆனால், கீழ்த்தட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு வேலை பார்த்தாலும், ஒரே காசுதான். ஆனாலும், வெற்றிமாறன் சொன்னால் செய்ய வேண்டும் என்று செய்வார்கள். இதிலேயே நீங்கள் வெற்றிமாறன் எப்படியானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்’ என்று பேசினார்.
விடுதலை திரைப்படம்
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி,விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ், சேத்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த டிசம்பர் 20 அன்று வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 1. இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
கதையின் கரு என்ன?
முதல் பாகத்தில் போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையே நடந்த மோதல், வாத்தியாரின் கைது, அதிகாரிகளின் அதிகார வர்க்கம் மக்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டம் உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்த வெற்றிமாறன், இந்த பாகத்தில் மக்கள் படை உருவான கதை, வாத்தியார் கம்யூனிசம் பாதையை தேர்ந்தெடுத்தற்கான காரணம், போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையேயான போரில் ஜெயித்தது யார்? குமரேசனின் குற்ற உணர்வு அவனை என்ன செய்தது உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்திருக்கிறார்.
கடந்த பாகம் முழுக்க முழுக்க குமரேசன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சூரியை சுற்றி இருந்த நிலையில், இந்த பாகம் முழுக்க, முழுக்க வாத்தியார் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜய் சேதுபதியை சுற்றி அமைந்திருக்கிறது.
படம் முழுக்க வாத்தியாராக விரவி கிடக்கிறார் விஜய் சேதுபதி. வெற்றிமாறன் வழியே வாத்தியாராக அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் சமுதாயத்திற்கான பாடம். வாத்தியாரின் வாழ்கையில், வெவ்வேறு பருவங்களில் அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடித்திருப்பது சிறப்பு. குறிப்பாக வயதான தோற்றத்தில் அவர் வெளிப்படுத்தும் மேனரிசங்கள் அல்டிமேட்.
அவரது மனைவியாக மஞ்சு வாரியர். தைரியமும், தெளிவும் நிறைந்த பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்கான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. டி கம்பெனியின் ஓசியாக வரும் சேத்தன் காமெடி, வில்லனிசம் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ராஜீவ் மேனன் நடிப்பு புருவம் விரியவைக்கிறது. வாத்தியாரின், வாத்தியாராக வரும் கிஷோரின் நிதானம் கம்யூனிசம் கொள்கைகளை கனகச்சிதமாக உணரவைக்கிறது. சூரி பெரிதாக தெரியவில்லை. கென் கருணாஸின் ஆக்ஷன் அதகளம்.
வெற்றிமாறனின் அரசியல்
வாத்தியார் கதாபாத்திரத்தை உருவாக்கிய வெற்றிமாறன், வாத்தியார் தேர்ந்தெடுத்த கம்யூனிச பாதையில், பண்ணையார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய வன்முறை, அவர்களுக்கு எதிராக மக்கள் வன்முறையை கையில் எடுத்ததால் நடந்த விபரீதங்கள், உயர் சாதி பெண்களை தாழ்த்தப்பட்ட ஆண்கள் காதலிப்பதற்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில், கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும்? அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அலட்சியமாக நடத்தும் கொலைகள் சரியானதா? அதிகார வர்க்கத்துக்கு ஜாதிய ஏற்றத்தாழ்வு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது? ஒற்றுமையின் பலம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை திரைக்கதையாக வடித்து கொடுத்து இருக்கிறார்.
காட்சிகள் சுவாரசியமாக, விறுவிறுப்பாக சென்றாலும், கம்யூனிசம் பாதையில் இடம்பெற்ற அதிகபட்ச வசனங்கள் கொட்டாவியை வரவழைக்கின்றன. இளையராஜா இன்னும் தரமான பின்னணி இசையை கொடுத்திருக்க வேண்டும். வழக்கம் போல வெற்றி மாறன் படத்தில் இடம்பெறும் டப்பிங் பிரச்சினை இந்த படத்திலும் இருக்கிறது.
டாபிக்ஸ்