Udhayanidhi Stalin: ஏஞ்சல் பட விவகாரம்.. உதயநிதிக்கு கெடு விதித்த கோர்ட்.. என்ன செய்ய போகிறார்?
Udhayanidhi Stalin: ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் உதயநிதி வேறு படத்தில் நடித்த விவகாரம் தொடர்பாக, உதயநிதி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Udhayanidhi Stalin: தற்போது தமிழக துணை முதலமைச்சாரக உள்ள உதயநிதி, கடந்த 2018ம் ஆண்டு ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் எனும் படத்தில் பணியாற்றி வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியாத சூழலில் இவர் மாமன்னன் படத்தில் நடித்ததாகவும், அந்தப் படத்தை கடைசி படமாக அறிவித்ததுடன் தற்போது வரை ஏஞ்சல் படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க வராமல் இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
மேல்முறையீட்டு மனு
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ராம சரவணன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு இன்று, நீதிபதிகள் அனிதா சுமந்த், மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
80% ஷூட்டிங்
முன்னதாக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "உதயநிதி கதாநாயகனாக நடிக்க இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், அதன் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
8 நாள் கால்ஷீட் தராத உதயநிதி
மேலும், 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்துள்ளார். அந்த படமே தனது கடைசி படம் என கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
காலதாமத மனு
இதையடுத்து, இந்த வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனக்கெதிராக ராமசரவணன் காலதாமதமாக மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும், "ஏஞ்சல் படம் தொடர்பாக தயாரிப்பாளரை, உதயநிதி ஸ்டாலின் பலமுறை தொடர்பு கொண்டார். படத்தில் தனக்கான காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டதால் மாமன்னன் படத்தில் நடித்ததாகவும்" தெரிவித்தார்.
மனு தள்ளுபடி
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டீக்காராமன், அமைச்சர் உதயநிதியின் மனுவை ஏற்றுக்கொண்டு, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உதயநிதியின் ஏஞ்சல் படம்
திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி வந்த ஏஞ்சல் படத்தில் உதயநிதி ஸ்டாலின், பாயல் ராஜ்புட், கயல் ஆனந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை கே.எஸ். அதியமான் இயக்கியுள்ளார். இவர் தமிழில் தொட்ட சிணுங்கி, பிரியசகி, தூண்டில் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
ஏஞ்சல் படத்தில் சுமார் 40 நாள்களுக்கு மேலாக உதயநிதி நடித்து கொடுத்த நிலையில், 2019 தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்து, மாமன்னன் தான் தனது கடைசி படம் என தெரிவித்தார்.
ஏஞ்சல் படத்தை முடிக்காததன் பின்னணி
திகில் கலந்த கதையாக உருவாகி வந்த ஏஞ்சல் படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் ஆன்மிகம், மூடநம்பிக்கை சார்ந்த சம்பவங்களும் காட்சிகளும் இடம்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் அரசியல் ரீதியாக விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால் உதயநிதி படத்தின் எஞ்சிய காட்சிகளில் நடிக்க தவிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்