Tharunam: பொங்கல் ரேஸில் களமிறங்கி பின் வாங்கிய படம்.. மறுபடியும் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு.. காரணம் என்ன?
Tharunam: பொங்கலுக்கு ரிலீஸான தருணம் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதிலும், போதிய திரையரங்குகள் இல்லாத நிலையில் படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் ரேஸில் களமிறங்கி பின் வாங்கிய படம்.. மறுபடியும் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு.. காரணம் என்ன?
அஜித்குமாரின் விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸாக வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 31ஆம் தேதி படம் பொங்கலன்று வரப்போவதில்லை என அறிவிக்கப்பட்டது. அந்த படத்தின் விலகல் காரணமாக தமிழில் இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸாக 6 படங்கள் வெளியாகின. இதுதவிர தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக தமிழில் மொழிமாற்றம் செய்த கேம் சேஞ்சர் படமும் வெளியானது.
ரிலீஸில் இருந்து பின்வாங்கிய தருணம்
இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி 10ஆம் தேதி கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன் ஆகிய படங்களும், ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படமும், பொங்கல் நாளான ஜனவரி 14ஆம் தேதி காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம் ஆகிய படங்களும் வெளியாகின.
இதில் தருணம் படம் ரிலீசான இரண்டு நாள்களுக்கு பிறகு, தற்போது ரலீசில் இருந்து விலகுவதாகவும் மற்றொரு நாளில் படத்தை வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் தருணம் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியுள்ளது.
அதிக ரசிகர்களை கவர முடியும்
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "எங்கள் 'தருணம்' திரைப்படம் ஜனவரி 14 அன்று பொங்கல் வெளியீடாக வந்ததை அறிந்திருப்பீர்கள்.
எங்கள் தரப்பில் சென்சார் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணத்தால் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தை வெளியிட இயலவில்லை. மேலும் தமிழ்நாடு தாண்டியும், வெளிநாடுகளிலும் தனிக்கை செய்து இப்படத்தை வெளியிடுவதற்கான அவகாசமும் கிடைக்கவில்லை.
இதுவரை தருணம் படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்த நிலையில், இப்படம் மற்றொரு தேதியில் வெளியானால் இன்னும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியும். அதன்மூலம் அதிக அளவிலான ரசிகர்களையும் கவர முடியும் என திரையரங்கு தரப்பிலிருந்தும் கருத்து தெரிவித்துள்ளனர். இதே கருத்தை பல தரப்பினரும் எங்களிடம் தெரிவித்தனர்.
தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
'தருணம்' படத்தின் விமர்சனங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஊடக நண்பர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே அனைவரின் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு ஆலோசனைக்கு பின் எங்கள் படத்தை மற்றொரு தேதியில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து வெளியீட்டு தேதியை கூடிய விரைவில் அறிவிப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருணம் படம்
முதலும் நீ முடிவும் நீ படத்தில் நடித்த கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், பால சரவணன் உள்பட பலர் நடித்திருக்கும் தருணம் படத்தை அரவிந்த சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ரெமாண்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இதையடுத்து படத்தை இன்னொரு நாளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதால் தற்போது திரையிடல் நிறுத்தப்பட்டுள்ளது.
மிகவும் குறைவான திரையரங்குகளில் வெளியாகியிருந்த தருணம் படம் இரண்டு நாள்களில் ரூ. 0.04 கோடி வசூலித்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்