Tamil News  /  Entertainment  /  Thangar Bachan Emotional Post About His Mother Documentry

Thangar bachan: ‘14 வயதில் தாலி.. 10 பிள்ளைகள்.. 91 வயதிலும் மாத்திரைக்கு நோ’ - அம்மா குறித்து பேசிய தங்கர்பச்சான்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 24, 2024 12:25 PM IST

அப்பா எப்படி நடப்பார், எப்படி பேசுவார், கோபப்படுவார், அன்பு செலுத்துவார் என்பதை வீடியோவாக பதிவு செய்யாமல் விட்டுப் போனதை நினைத்து இப்பொழுது வருந்துகிறேன்.

தங்கர்பச்சான்!
தங்கர்பச்சான்!

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த பதிவில், “ என் அம்மா. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் இந்த பரபரப்பான இயந்திரத்தனமான பொருள் தேடும் உலகத்தில், ஆளாளுக்கு எதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகளோடு உறவாடவும், உரையாடவும் யாருக்கும் நேரமில்லை.

 

நம்மையெல்லாம் பெற்று, வளர்த்து, உருவாக்கி விட்டு நம் தாயும், தகப்பனும் நாம் நல்ல முறையில் வாழ்ந்தால் போதும் என ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பட்டினி கிடந்து, அவமானப்பட்டுதான், ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை வளர்த்து படிக்க வைக்கிறார்கள்.

இறுதி காலத்தில் கூட அந்த பிள்ளைகள் அவர்களின் பக்கத்தில் இருப்பதில்லை. வெளி நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எத்தனையோ நூற்றுக்கணக்கான பிள்ளைகள் இறுதிச் சடங்கை செய்வதற்காக, நாள்கணக்கில் பிணவறையில் பிணமாக கிடக்கும் நிலை உருவாகி வருகின்றன.

சொத்துக்களை அனுபவிக்கப்போகும் அடுத்ததலைமுறைகளுக்கு அதனை உருவாக்கியவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. எல்லோர் கைகளிலும் கைப்பேசி, எப்பொழுதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ் ஆப், பேஸ் புக், எக்ஸ், இன்ஸ்டாக்ராம், யூட்யூப் என விரல்கள் ஓய்வில்லாமல் பக்கங்களை புரட்டிக்கொண்டே இருக்கிறது.

எதைக்கண்டாலும் கைப்பேசியிலுள்ள கேமராவால் படம் பிடிக்க தொடங்கிவிடுகிறார்கள். யாரை பார்த்தாலும் படம் பிடிக்கும் கேமராக்கள் இப்பொழுது செல்பி எனும் பெயரில் அவர்களையே படம் பிடித்து மகிழ்கின்றனர்.

எத்தனையோ லட்சக்கணக்கான அடி ஃபிலிம் சுருள்களில் யார் யாரையோ படம்பிடித்துக் கொண்டிருந்த நான் என் அப்பாவை பிடித்து வைத்த படம் ஒன்றே ஒன்றுதான். அது கூட கடைசி காலத்தில் காச நோய் வந்து மருத்துவமனையில் இருந்த போது எடுத்ததுதான்.

அந்த ஒரு கருப்பு வெள்ளைப்படமும் பதிவு செய்யாமல் போயிருந்தால், பத்துப் பிள்ளைகளை பெற்ற அவரின் எதிர்காலத் தலைமுறைகளுக்கு அவர் எப்படி இருப்பார் என்பதேத் தெரியாமல் போயிருக்கும்.

அப்பா எப்படி நடப்பார், எப்படி பேசுவார், கோபப்படுவார், அன்பு செலுத்துவார் என்பதை வீடியோவாக பதிவு செய்யாமல் விட்டுப் போனதை நினைத்து இப்பொழுது வருந்துகிறேன்.

அதனாலேயே நேரம் கிடைக்கின்ற போதெல்லாம், அம்மாவின் நடவடிக்கைகளையும், பேச்சுக்களையும் பதிவு செய்து வைத்திருந்தேன்.

பதினான்கு வயதில் தாலி கட்டிக்கொண்டு பத்து பிள்ளைகளை பெற்று வளர்த்து கரைசேர்த்து, இறுதிவரை எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல், மருத்துவரிடமே செல்லாமல் 91 வயது வரை தனி அடையாளத்துடன் வாழ்ந்து மறைந்த என் அம்மா “லட்சுமி அம்மாளின்” ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

நான் எதைப்பேசினாலும், எதை எழுதினாலும், எதற்காக கோபப்பட்டாலும் எல்லாமே அம்மாவிடமிருந்து பெற்றவைகள்தான்.

அவளிடமிருந்து கற்றவைகளைக் கொண்டுதான் நான் இயக்கிய அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அனைத்து படைப்புகளையும் படைக்க முடிந்தது.

அம்மாவை பற்றிய நினைப்பு என்னுள் எழும் போதெல்லாம் “ பத்து நிமிடங்கள் ஓடக்கூடிய என் அம்மா பற்றிய “ என் அம்மா “ என்னும் இந்த ஆவணப் படம்தான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது.

இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் ஒவ்வொருவரும் தவறாமல் வெளிப்படுத்தும் சொல் “ ஐயோ நான் என் அம்மாவை இதுபோல் எடுத்து வைக்கவில்லையே ! என் அப்பா, தாத்தா, பாட்டிகளை பதிவு செய்து வைக்கவில்லையே ! கையில் அதற்கான வசதிகள் இருந்தும் படம் பிடித்து வைக்காமல் போய்விட்டேனே என புலம்புகிறார்கள்.

நம் வீட்டிலேயே, நம்முடனேயே இருக்கும் நம்முன்னோர்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. நமக்காக காத்துக்கிடக்கும் நம்மை உருவாக்கியவர்களை பேசவிட்டு அவர்கள் சொல்ல விரும்புவதையெல்லாம், நம் பிள்ளைகளை விட்டே படம் பிடித்து வைக்க சொல்லுங்கள். அவர்கள் உருவாக்கி வைத்த சொத்துக்களை நம் பிள்ளைகளுக்குத் தந்து விட்டுப் போகும் நாம் அவர்களின் வரலாற்றை எதிர்கால தலைமுறைகளுக்கு கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டாமா ?

“என் அம்மா”- ஆவணப்படம் எனது அம்மா குறித்த ஆவணப்படம் மட்டுமல்ல. ஒவ்வொருவருக்குமான அவர்களின் மனசாட்சியோடு பேசும் படம்..

அன்போடு தங்கர் பச்சன்!” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.