Tamil Movies Rewind: ஹாட்ரிக் ஹிட் கொடுத்த விஜய்.. மாஸ் ஹீரோவாக ஜொலித்த விக்ரம்! ஏப்ரல் 12 தமிழ் ரிலீஸ் படங்கள் லிஸ்ட்
2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறை ஸ்பெஷலாக டாப் ஹீரோக்களின் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டும் ஆகியுள்ளன. விஜய், விக்ரம் ஆகியோரின் சினிமா கேரியரில் முக்கிய ஹிட்டாக அமைந்த படங்கள் ஏப்ரல் 12இல் வெளியாகி இருக்கின்றன

ஏப்ரல் 12, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆக்சன் அவதாரம் எடுத்த வஞ்சிக்கோட்டை வாலிபன், பிரபுவுக்கு சில்வர் ஜூப்ளி படமாக அமைந்த சின்னத்தம்பி, விஜய்யின் ஹிட் படங்களான பத்ரி, தமிழன், விக்ரம் மாஸ் ஹீரோவாக உருவொடுத்த ஜெமினி போன்ற பல ஹிட் படங்கள் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகியுள்ளன. ஏப்ரல் 12ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் வெளியாகியிருக்கும் இந்த படங்கள் பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்
வஞ்சிகோட்டை வாலிபன்
வரலாற்று சாகச திரைப்படமான வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை எஸ்.எஸ். வாசன் இயக்கியுள்ளார். காதல் மன்னனான அறியப்பட்ட ஜெமினி கணேசன் ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருந்தார். வைஜெயந்தி மாலா, பத்மினி, பி.எஸ். வீரப்பா, கே.ஏ. தங்கவேலு உள்பட பலர் நடித்த இந்த படம் அந்த காலகட்டத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் லட்சங்களில் பண வசூலை ஈட்டியது. இந்த படம் பின்னாளில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஜெமினி கணேசன் சினிமா கேரியரில் முக்கிய படமாக வஞ்சிக்கோட்டை வாலிபன் இருந்து வருகிறது
சின்ன தம்பி
பி. வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ, ராதாரவி, மனோரமா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து 1991இல் வெளியான படம் சின்னதம்பி. காதல் கலந்த பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருந்த படம் பிரபுவுக்கு சில்வர் ஜுப்ளி படமாக அமைந்தது. இளைராஜா இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மனதை விட்டு நீங்காதவையாக மாறியுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாள்களுக்கு மேல் ஓடிய படமாகவும், 9 திரையரங்குகளில் 350 நாள்களுக்கு மேல் ஓடிய படமாகவும் உள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னட, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் அந்த மொழிகளிலும் ஹிட்டானது
பத்ரி
பி.ஏ. அருண் பிரசாத் இயக்கத்தில் விஜய், பூமிகா, மோனல், விவேக், தாமு, கிட்டி, ரியாஸ்கான் உள்பட பலர் நடித்து காதல் கலந்த பேமிலி படமாக 2001இல் வந்த படம் பத்ரி. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர் ஹிட்டான தம்மடு படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த பத்ரி, தமிழிலும் ஹிட்டாகி வரவேற்பை பெற்றது. பிரியமானவளே, ப்ரண்ட்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட்டாக விஜய்க்கு பத்ரி படம் அமைந்தது. படத்தில் விஜய்யின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்ததுடன், இந்த படத்தின் மூலம் அவரது ரசிகர்கள் வட்டமும் விரிந்தது.
தமிழன்
மஜித் இயக்கத்தில் விஜய், பிரியங்கா சோப்ரா, நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி நடித்து ஆக்சன் ட்ராமா பாணியில் உருவாகி 2002இல் வெளியான படம் தமிழன். உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா இந்த படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்துக்கு பின்னரே அவர் பாலிவுட்டில் கால் பதித்தார்.
படத்தில் சட்டம் படித்த இளைஞராக வரும் விஜய் முதல் பாதியில் குறும்புத்தனமாக இளைஞராகவும், இரண்டாம் பாதியில் மக்களுக்காக குரல் கொடுப்பவராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் மூலம் தான் டி. இமான் இசையமைப்பாளராக சினிமாக்களில் அறிமுகமானார். படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து உள்ளத்தை கிள்ளாதே என்ற அற்புதமான மெலடி பாடலையும் பாடியுள்ளார்கள்.
ஜெமினி
சரண் இயக்கத்தில் விக்ரம், கிரண், கலாபவன் மணி உள்பட பலரும் நடித்து க்ரைம் ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகியிருந்த ஜெமினி 2002இல் வெளியானது. விக்ரம் மாஸ் ஹீரோவாக தோன்றிய இந்த படம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகி சூப்பர் ஹிட்டானது நல்ல வசூலையும் குவித்தது. படத்தில் வில்லனாக நடித்த கலாபவன் மணி பல்வேறு கேரக்டர்களில் மமிக்ரி செய்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. பரத்வாஜ் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின.
ஓ போடு என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்ததுடன், அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக மாறியது. விக்ரம் சினிமா கேரியரில் நல்ல வசூலை குவித்த படங்களில் ஒன்றாக ஜெமினி இருந்து வருகிறது.
