Thalapathy Vijay: பத்த வச்சுத்டீங்களே தளபதி.. பொங்கல் நாளில் விஜய்யின் வாழ்த்து.. அரசியல் மைலேஜ்! குவியும் கண்டனங்கள்
Thalapathy Vijay: பொங்கல் வாழ்த்து செய்தியுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் எனவும் தளபதி விஜய் குறிப்பிட்டிருக்கும் நிலையில், பலரும் அவரது வாழ்த்துக்களுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் அரசியல் மைலேஜுக்காக விஜய் இதை செய்தாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தங்களது படங்கள், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில சர்ப்ரைஸ்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த ஜெயம் ரவி என்ற தனது பெயர் இனி ரவி மோகன் என்று அழைக்குமாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோல் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக தனது இளைய மகன் குகனின் புகைப்படத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி மூலம் அரசியல்வாதியாகவும் வலம் வரும் தளபதி விஜய், பொங்கல் வாழ்த்து தெரிவித்திருப்பதாடு, கூடவே தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என கூறியும் இருக்கிறார்.
பொங்கல் நாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதல் பொங்கல் வாழ்த்து பதிவை பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வாழ்த்து செய்தியில், " பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என குறிப்பிட்டுள்ளார்.
குவியும் விமர்சனங்கள்
பொங்கல் வாழ்த்துகளுடன், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் விஜய தெரிவித்திருக்கும் விஜய்க்கு ஆதரவாகவும், கண்டனம் தெரிவித்தும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். பலர் ஏப்ரல் 14ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு என குறிப்பிட்டு விஜய்யின் வாழ்த்துகளுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறார்கள். விஜய்யின் வாழ்த்துக்கு எதிர்மறையான கருத்துகளே ஏராளமாக பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல் தை திருநாள் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என அதற்கான காரணம், பின்னணி போன்றவற்றையும் பலரும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் கூடவே தங்களது பதிவுடன் இணைத்துள்ளனர்
தை திருநாள், தமிழ் புத்தாண்டு நாள் பின்னணி
நீண்ட காலமாக ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2007-11 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது தமிழ் புத்தாண்டு தை 1ஆம் என அறிவிக்கப்பட்டது. தமிழ் அறிஞர்களின் பலர் அறிவியல் கணிப்புகளின்படி கூறப்பட்ட தை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதற்கு அப்போது பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இதன் பின்னர் 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் நேரத்தில் மட்டும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான சர்ச்சை வருவதும் காணாமல் போவதுமாக இருந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் தளபதி விஜய் அதன் பின்னர் முக்கிய பண்டிகை நாள்களில் வாழ்த்து செய்தியை பகிர்ந்து வந்துள்ளார். அந்த வரிசையில் அரசியல் கட்சி தொடங்கி முதல் முறையாக விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்து செய்து சர்ச்சைய கிளப்பும் விதமாக அமைந்துள்ளது.
பத்த வச்சுடீங்களே தளபதி
தை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என சொல்லியிருந்தாலும் திமுகவை சேர்ந்த பலரும் கூட இன்று தமிழ் புத்தாண்டு என வாழ்த்து தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தமிழர் திருநாள் என்றே குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் நடிகரும், துணை முதலமைச்சருமான உதயநிதி கூட தனது பொங்கல் வாழ்த்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் என்றே தெரிவித்துள்ளார். இந்த சூழலில் மு.க. ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்தில் #இன்பம்_பொங்கும்_தமிழ்நாடு என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
இதற்கிடையே பிரபலங்களில் விஜய் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து என குறிப்பிட்டிருப்பது, 16 வயதினேலே படத்தில் ரஜினியை பார்த்து கவுண்டமணி பேசும் "பத்த வச்சுட்டியே பரட்டை" என்ற வசனம் நினைவுக்கு வருவதாகவே உள்ளது.
விஜய்யின் இந்த வாழ்த்து அவரது அரசியல் வாழ்க்கைக்கு மைலேஜ் தருகிறதா என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடையை செய்திகள்