Thalapathy vijay: காக்கா.. கழுகு.. யானை.. சூப்பர் ஸ்டார் நானா?.. ரஜினிக்கு மறைமுக பதிலடி கொடுத்த விஜய் - முழு பேச்சு!
லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசியவற்றை இங்கு பார்க்கலாம்.
மேடையில் பேசிய விஜய், “ உங்களுடைய அன்பு நெஞ்சங்களில் எனக்கும் சிறிய அளவு இடம் கொடுத்திருக்கக் கூடிய என்னுடைய நண்பா, நண்பிகளின் மனது தான் நான் குடியிருக்க கூடிய கோயில்.
என்ன இது சினிமா டயலாக் போல இருக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம். உண்மையிலேயே நான் மனதார அதை ஃபீல் செய்து சொல்கிறேன். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நீங்கள் என் மீது காட்டக்கூடிய அன்பிற்கு நான் திருப்பி என்ன செய்யப் போகிறேன் நண்பா.. என்னால் என்ன செய்ய முடியும் நண்பா.. என்னுடைய உடம்பு தோலை, உங்களுக்கு கால் செருப்பாக தைத்து போட்டால் கூட அது ஈடாகாது.
ஆனால் ஒன்றை மட்டும் என்னால் செய்ய முடியும். அது நான் சாகும் வரை உங்களுக்கு உண்மையாக இருப்பது. உங்களுடைய உழைப்பில் நீங்கள் எனக்காக செலவு செய்கிற ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக இருப்பது.
நீங்கள் எல்லாம் பிளடி ஸ்வீட்தான். நான் சோசியல் மீடியாவை பார்க்கிறேன். அதில் உங்களது கோபம் மிக அதிகமாக இருக்கிறது அது ஏன்?.. தயவு செய்து அது வேண்டாம். நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அது நம்முடைய வேலையும் இல்லை. நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லதல்ல. இந்த நேரத்தில் எனக்கு காந்தியடிகள் சொன்ன பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது. வன்முறையை விட மிகவும் பலமான ஆயுதம் அஹிம்சை.
ஒரு குட்டி கதை சொல்கிறேன். காட்டிற்கு இரண்டு பேர் வேட்டையாடச் சென்றார்கள். அங்கு மான், மயில், முயல் யானை, காக்கா, கழுகு என எல்லாம் இருந்தது. வேட்டைக்கு சென்ற இருவரில், ஒருவரின் கையில் வில் அம்பு இருக்கிறது இன்னொருவரின் கையில் ஈட்டி இருக்கிறது. வில் அம்பு கொண்டு சென்றவர், ஒரு முயலை அடித்து தூக்கி வருகிறார்.
ஈட்டியை கொண்டு சென்றவர் யானையை குறி பார்த்து அடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரது குறியானது மிஸ் ஆகிவிட்டது. இருவரும் ஊருக்குள் வருகிறார்கள். ஒருவரின் கையில் முயல் இருக்கிறது. இன்னொருவரின் கையில் வெறும் ஈட்டி மட்டும்தான் இருக்கிறது. இந்த இரண்டு பேரில் யார் சாதனையாளர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..? இதில் அந்த யானையை குறி பார்த்து படிக்க முயன்று தோல்வியுற்றவர் தான் சாதனையாளர்.
நம்மால் எதை மிகவும் எளிதாக ஜெயிக்க முடியுமோ அதை ஜெய்ப்பது வெற்றி இல்லை நண்பா. நம்மால் எதை ஜெயிக்கவே முடியாதோ அதை வெற்றி கொள்வதுதான் வெற்றி. உங்களுடைய குறிக்கோள், லட்சியம் உள்ளிட்டவற்றை மிகவும் பெரிதான இடத்தில் வையுங்கள். பெரிதாக யோசியுங்கள். அதை யாரும் தவறு என்று சொல்லவே முடியாது.
இதில் பாரதியார் சொன்ன கூற்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் பெரிதினும் பெரிது கேள் என்றார். அப்படி இருக்க வேண்டும் உங்களுடைய கனவுகள். அப்படி இருக்க வேண்டும் உங்களுடைய ஆசைகள். உங்கள் உழைப்பும் அப்படி இருக்க வேண்டும். அப்படி நீங்கள் பயணித்தால் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிச்சயமாக அடைவீர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் இருக்கிறது. அதை யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது. வீட்டில் ஒரு குட்டி பையன் அப்பாவுடைய சட்டையை எடுத்து ஆசையாக போட்டுக் கொண்டான். அப்பாவுடைய வாட்சை எடுத்து ஆசையாக போட்டுக் கொண்டான். அப்பாவுடைய சேரில் ஏறி உட்கார்ந்து கொண்டான் அவனுக்கு அந்த சட்டையானது தொளதொள வென்று தான் இருக்கும். அந்த வாட்ச் கையிலேயே நிற்காது. அந்த சேரில் உட்கார வேண்டுமா? வேண்டாமா, அவன் அதற்கு தகுதியானவனா இல்லையா என்பதெல்லாம் அவனுக்கு தெரியாது. அவனைப் பொறுத்தவரை அது அப்பா சட்டை அவ்வளவுதான். ஆகையால் நீங்கள் பெரிதாக கனவு காணுங்கள். உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. சிறிய குறிக்கோள் என்பது குற்றம் என்று சொல்கிறார் அப்துல் கலாம்.
லியோ படம் வெளியாவதற்கு முன்னதாக நான் ரெடி பாடல் வெளியானது. அதில் சில வரிகள் தவறாக இருப்பதாக சொல்லி சர்ச்சை எழுந்தது. அந்த பாடலில் விரல் இடுக்கில் தீப்பந்தம் என்ற வரி வந்தது. அதை ஏன் நீங்கள் சிகரெட் என்று எடுத்துக் கொள்கிறீர்கள். அதை பேனா என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தானே. பத்தாது பாட்டில் நான் குடிக்க, வரியை நீங்கள் சரக்கு என்று எடுத்துக் கொள்கிறீர்கள். கூழ் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே. இப்படி எல்லாம் மழுப்பலான பதிலைச் சொல்லி நான் இங்கிருந்து இறங்கி செல்ல முடியும். ஆனால் அதை நான் செய்வதில்லை. தயவு செய்து சினிமாவை சினிமாவாக பாருங்கள். சினிமா என்பது மக்கள் விரும்பக்கூடிய ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அதில் வரக்கூடிய காட்சிகள் மற்றும் இன்ன பிற விஷயங்கள் அனைத்தும் கற்பனை. அது முழுக்க முழுக்க செயற்கை தனமானது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஒரு சில படங்களில் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான். அதை வேறுபடுத்தி காண்பிப்பதற்கு, நீங்கள் என்ன செய்வீர்கள் அதற்கு தகுந்தார் போன்ற காட்சிகளை, அதற்கு தகுந்தார் போன்ற வசனங்களை வைப்பீர்கள். இதில் சில கேரக்டர்கள் வெளிப்படுத்தக்கூடிய எண்ணங்களோ, காட்சிகளோ உங்களை பாதிக்குமா?
உங்களுக்கு நான் அறிவுரை சொல்ல வேண்டுமா.. அதற்கு அவசியமே கிடையாது. எனக்கு தெரியும் அதையெல்லாம் நீங்கள் பாலோ செய்யவே மாட்டீர்கள் என்று.. பள்ளி, கல்லூரிகளுக்கு பக்கத்திலேயே ஒயின்ஷாப்கள் இருக்கின்றன. அந்த வழியாக செல்லும் மாணவர்கள் தண்ணி அடித்து விட்டா, தினமும் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு பக்காவான தெளிவு இருக்கிறது. இவ்வளவு அன்பு வைத்திருக்கும் என்னுடைய படமே சரி இல்லை என்றால், படம் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி கொண்டே இருக்கிறீர்கள்.
உங்கள் எல்லோருக்கும் ஏவிஎம் சரவணன் நன்றாகவே தெரியும். அவர் ஒரு முறை காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அம்மாவுக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கிறார்
அதற்கு அந்த அம்மா ரொம்ப நன்றி. நீ நல்லா இருப்ப எம்ஜிஆர் நல்லா இருப்ப எம்ஜிஆர் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இது கேட்ட சரவணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதில் யார் அள்ளிக் கொடுத்தாலும், அது எம்ஜிஆர் ஆகத்தான் இருக்கும் என்று நம்ம நினைத்துக் கொண்டிருக்கிறாள் அந்த பெண்.
இதில் எனக்கு ஒரு குட்டி ஆசை இருக்கிறது. அதாவது எதிர்காலத்தில் எங்கு நல்லது நடந்தாலும் அது நம் பசங்களால் நடந்ததாக இருக்க வேண்டும். அர்ஜூன் சார் இந்த படத்தில் நடிப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவர் நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் கவுண்டமணி மற்றும் அவருக்கு இடையான காமெடி நன்றாக இருக்கும் . டின்னர் ஒன்று பாக்கியிருக்கிறது அர்ஜூன் சார். நான் லோகேஷ் கவுண்டமணி மற்றும் நீங்கள் சேர்ந்து டின்னர் செல்ல வேண்டும்.
லோகேஷ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் மாநகரம் படத்தை திரும்பி பார்க்க வைத்தார். கைதி படத்தை திரும்பத் திரும்ப பார்க்க வைத்தார். மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். லியோவை எல்லாம் திரும்பிப் பார்த்து இருக்கிறது என்று நினைக்கிறேன். உன்னை நினைத்தால் எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது லோகேஷ்
நான் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுப்படுத்தி விடுகிறேன். புரட்சி கலைஞர் என்றால் ஒருவர் தான். கேப்டன் என்றால் அவர் ஒருவர் தான். உலக நாயகன் என்றால் அவர் ஒருவர் தான். சூப்பர் ஸ்டார் என்றால் அவர் ஒருவர் தான். தல என்றால் என்றால் ஒருவர் மட்டும் தான்.
தளபதி என்றால் மன்னருக்கு கீழ் வேலை பார்ப்பவன் என்று அர்த்தம். மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுபவன் என்று அர்த்தம்என்னை பொறுத்த வரை மக்கள் தான் என் மன்னர்கள். நீங்கள் ஆணையிடுங்கள். நாம் செய்து விட்டு சென்று கொண்டே இருக்கிறேன்.” என்று பேசினார்
டாபிக்ஸ்