Nayantara Test Teaser: முதல் முறையாக இணைந்திருக்கும் மாதவன் - நயன்தாரா.. டெஸ்ட் டீஸரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்
Nayantara Test Teaser: ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் டெஸ்ட் படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் முறையாக மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். மீரா ஜாஸ்மின் 10 வருட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார்.

மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் டெஸ்ட் படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்திய படம்
டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய கதையம்சத்தில் டெஸ்ட் படம் உருவாகியுள்ளது. டீஸர் காட்சியில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் கதாபாத்திரங்கள் புதிராக அமைந்துள்ளது. ஓய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தமிழ்ப்படம், வா குவாட்டர் கட்டிங், காவியத்தலைவன் போன்ற படங்களை தயாரித்த சசி காந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், கனவு, ஆசை, தேர்வு மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றின் எமோஷனல் கலவையாக படம் உருவாகியிருப்பதாக தெரிகிறது.
படத்தின் ரிலீஸ் குறித்து எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், டெஸ்ட் படம் நேடியாக ஓடிடியில் வெளியாகும் எனவும் தகவல்கள் உலா வருகின்றன.
முதல் முறையாக இணைந்த மாதவன் - நயன்தாரா
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் மாதவன், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஆகியோர் முதல் முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர். அதேபோல் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுக்கிறார் நடிகை மீரா ஜாஸ்மின்.
இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகி
இந்த படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகியான சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தமிழில் வெளியான தநா 07 அல 4777 படத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பில் இடம்பிடித்த செர்க்கம் மதுவிலே என்ற பாடல் மூலம் பாடகியான அறிமுகமான இவர் நான் படத்தின் மகாயலா மகாயாலா, கடல் படத்தில் நெஞ்சுக்குள்ள, அனேகன் படத்தில் தொடுவானம், விக்ரம் வேதா படத்தில் யாஞ்சி யாஞ்சி போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதேபோல் ஹீரோயின்களான ஆண்ட்ரியா, ஷர்ததா ஸ்ரீநாத், நயன்தாரா போன்றோருக்கும் டப்பிங் பேசியுள்ளார்.
சமீபத்தில் டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தததை தனது ஒய்நாட் ஸ்டூடியோஸ் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் படத்தின் இயக்குநரும், தயாரிப்பிளாருமான சசிகாந்த். அதில் படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவித்திருந்தார். தமிழ் படமான டெஸ்ட் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
கடந்த 2023இல் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களுரு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. கடைசியாக நயன்தாரா நடிப்பில் கடந்த 2023இல் அன்னப்பூரனி படம் வெளியானது. இதன் பின்னர் கடந்த ஆண்டில் நயன்தாராவின திருமண டாக்குமெண்டரியான நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் வெளியானது.
இதைத்தொடர்ந்து சுமார் ஒரு வருட இடைவெளிக்கும் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படமாக டெஸ்ட் உள்ளது. இந்த படம் தவிர மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டாக்ஸிக், ராக்காயி போன்ற படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்