2024ஆம் கடைசி வாரம்.. சரத்குமாரின் 150வது படம், நாய் பற்றிய கதையான அலங்கு.. ரிலீஸ் ஆக இருக்கும் 10 படங்கள் லிஸ்ட்
2024ஆம் கடைசி வாரத்தில் 10 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இதில் சரத்குமார் நடித்திருக்கும் 150வது படமும் ஒன்றாக உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களின் மொத்த லிஸ்டை பார்க்கலாம்
2024 ஆம் ஆண்டின் கடைசி வாரம் தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்த வாரம் இந்த நேரத்தில் 2025 புத்தாண்டு பிறந்திருக்கும். இதையடுத்து இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையான நாள் தமிழில் ஒரே நாளில் 10 படங்கள் வரை ரிலீஸ் ஆக உள்ளன. அத்துடன் ரிலீசாக இருக்கும் அனைத்து படங்களும் சிறு பட்ஜெட் படங்களாக உள்ளன.
தமிழில் இந்த மாதத்தில் வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான விடுதலை 2 தவிர வேறு எந்த பெரிய படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. டிசம்பர் மாதத்தில் டாப் ஹீரோக்கள் படங்கள் ஏதாவது ரிலீசாவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டில் தமிழில் வெளியாகவில்லை. மாறாக தெலுங்கு ஹீரோவான அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 பான் இந்தியா படமாக இம்மாத தொடக்கத்தில் வந்தது.
2025ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டில் கடைசி வாரத்தில் தமிழில் ரிலீசாக இருக்கும் படங்களின் லிஸ்டை பார்க்கலாம்
அலங்கு
டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மகள் எஸ்.ஏ.சங்கமித்ரா தயாரித்துள்ள படம் அலங்கு. உறுமீன், பயணிகள் கவனிக்கவும் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.
படத்தின் ட்ரெயலரை ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகியோர் பார்த்து வெகுவாக பாராட்டியிருக்கும் நிலையில், ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. மனிதர்களுக்கு, நாய்களுக்கும் இடையிலான உறவு பற்றி பேசும் படமாக உருவாகியிருக்கும் அலங்கு டிசம்பர் 27இல் திரைக்கு வருகிறது.
தி ஸ்மைல் மேன்
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார் நடித்திருக்கும் 150வது படம் தி ஸ்மைல் மேன். ஷாம் பிரவீன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகர் ஸ்ரீ குமார், சிஜாரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரி சரத்குமாருக்கு ஒரு வருடத்தில் அனைத்து ஞாபகங்களும் அழிந்துவிடும் என மருத்துவர் எச்சரிக்கிறார். தன்னுடைய உடல்நல பாதிப்புகளுக்கு இடையில் அவர் கையில் வழக்கு ஒன்று வந்து சேருகிறது. அந்த வழக்கில் அவர் குற்றவாளியை கைது செய்தாரா இல்லையா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூறும் இந்தப் படம் டிசம்பர் 27 திரைக்கு வருகிறது
திரு. மாணிக்கம்
சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நாசர், தம்பி ராமையா, ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘திரு மாணிக்கம்’. ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி போன்ற படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். பேமிலி ட்ராமா த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் திரு. மாணிக்கம் படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது
ராஜாகிளி
நடிகர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘ராஜாகிளி’. அவரது மகன் உமாபதி ராமையா திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார். சமுத்திரக்கனி, ஸ்வேதா, சுபா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது
மழையில் நனைகிறேன்
அன்சன் பால், பிகில் பட புகழ் ரெபா மோனிகா ஜான், ராஜா உட்பட பலர் நடித்துள்ள படம் மழையில் நனைகிறேன். காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை டி. சுரேஷ் குமார் இயக்கியுள்ளார். படத்துக்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்திருக்கிறார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.
கூரன்
நாயை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் கூரன். நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே படத்தின் கதை என கூறப்படுகிறது. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். படம் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.
நெஞ்சு பொறுக்குதில்லையே
நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் நெஞ்சு பொறுக்குதில்லையே. ஆணவ கொலை பற்றிய கதையம்சத்தில் உருவாகியிருக்கும் படம் டிசம்பர் 27 ரிலீசாக உள்ளது.
இந்த படங்களை தவிர வாகை, இது உனக்கு தேவையா, பீமா சிற்றுண்டி போன்ற படங்களும் டிசம்பர் 27 அன்று திரைக்கு வருகின்றன.
டாபிக்ஸ்