47 Natkal Movie: சாடிஸ்ட் கணவனாக நடிப்பில் மிரட்டிய சிரஞ்சீவி..! பெண்களின் திருமண விருப்பம் பற்றி புரட்சி பேசிய படம்
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த சிரஞ்சீவி தமிழில் அறிமுகமான இந்த படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில், சாடிஸ்ட் கணவனாக நடிப்பில் மிரட்டியிருப்பார். பெண்களின் திருமண விருப்பம் பற்றி புரட்சி பேசிய படமாக 47 நாட்கள் படம் அமைந்திருந்தது.

மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய முக்கிய படங்களில் ஒன்றாக 47 நாட்கள் படம் உள்ளது. பிரபல எழுத்தாளர் சிவசங்கரி இதே பெயரில் எழுதிய கதையை சிரஞ்சீவி - ஜெயபிரதா நடிப்பில் எமோஷனல் த்ரில்லர் படமாக உருவாக்கியிருப்பார். எழுத்தாளர் சிவசங்கரி படத்துக்கு கதையும் எழுதியிருப்பார்.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக உருவெடுத்து வந்த சிரஞ்சீவியின் முதல் தமிழ் படம். படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்திருப்பார். அவருக்கு டப்பிங் குரல் டெல்லி கணேஷ் கொடுத்திருப்பார்.
தமிழில் முதலில் வெளியான இந்த படம் தெலுங்கிலும் பின்னர் 47 ரோஜுலு என்ற பெயரில் வெளியானது.
இரண்டு பெண்களை ஏமாற்றும் சிரஞ்சீவி
பிரான்ஸில் வசிக்கும் சிரஞ்சீவி தமிழ்நாட்டை சேர்ந்த கிராமத்து பெண்ணான ஜெயப்பிரதாவை அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்.
தமிழ் தவிர வேறு எந்த மொழியும் அறிந்திடாதவராக இருக்கும் ஜெயப்பிரதாவை பிரான்ஸுக்கு அழைத்து செல்கிறார். அங்கு சிரஞ்சீவி ஏற்கனவே திருமணமானவர் என ஜெயப்பிரதா தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார்.
இதனால் கடுப்பாகும் சிரஞ்சீவி, ஜெயப்பிரதாவை கொடுமைப்படுத்துகிறார். சொத்துக்காக முதல் மனைவி, ஆசைக்காக இரண்டாவது மனைவி என இருக்கும் சிரஞ்சீவியிடமிருந்து தமிழ் மட்டும் தெரிந்த ஜெயப்பிரதா பிரான்ஸில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை விறுவிறுப்புடன் கூடிய திரைக்கதையுடன் சொல்லியிருப்பார்கள்.
படத்தில் இதர கதாபாத்திரங்களாக சரத்பாபு, ரமா பிரபா முக்கிய வேடங்களில் தோன்றியிருப்பார்கள். சிரஞ்சீவியுடன், ஜெயப்பிரதா வாழும் 47 நாள்களை குறிப்பிடும் விதமாக அதையே படத்தின் டைட்டிலாக வைத்திருப்பார்கள்.
படத்தின் முக்கால்வாசி காட்சிகள் சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, சிரஞ்சீவி முதல் மனைவியாக நடித்திருக்கும் அன்னே-பாட்ரிசியா ஆகியோரை சுற்றியே நடக்கும்.
சாடிஸ்டாக மிரட்டிய சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான மூன்று ஆண்டுகளிலேயே 25 படங்களுக்கு மேல் நடித்து முடித்து பிஸியான நடிகராக மாறி, முன்னணி நடிகராக உருவெடுத்தார் சிரஞ்சீவி.
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே சாடிஸ்ட் கணவராக, நெகடிவ் வேடத்தில் துணிந்து நடித்தார்.படம் பார்ப்பவர்களின் மனதில் வெறுப்பை சம்பாதிக்கும் விதமாக வில்லனத்தனமாக நடிப்பை அலட்டிக்கொள்ளமல் வெளிப்படுத்தினார்.
சிரஞ்சீவிக்கு போட்டியாக ஜெயப்பிரதாவும் தனது அற்புத நடிப்பால் பார்வையாளர்களை பரிதாபமும் கொள்ள வைத்தார். தனது அழகாலும் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தார்.
புரட்சி பேசிய க்ளைமாக்ஸ்
கண்ணதாசன் பாடல் வரிகளில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் படத்தின் பாடல்கள் படம் வெளியான காலகட்டத்தில் ஹிட்டாகின. பின்னனி இசை த்ரில்லர் படத்துக்கான உணர்வை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
பெண் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும், பெண்கள் ஆண்களில் இச்சைக்காக மட்டுமில்லை என புரட்சி கருத்தை பேசும் விதமாக க்ளைமாக்ஸ் அமைந்திருக்கும்.
அதற்கு ஏற்றார் போல் ஜெயப்பிரதா எடுக்கும் முடிவுதான் படத்தின் திருப்புமுனை காட்சியாகவும் அமைத்திருப்பார் இயக்குநர் பாலசந்தர். யாருடைய ஆதரவும் இல்லாமல் பெண்கள் தனித்து வாழ்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் சூழ்நிலைக்கு சினிமா வழியில் விதை போட்ட படங்களில் ஒன்றாக இருக்கும் 47 நாட்கள் படம் வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/

டாபிக்ஸ்