‘புஷ்பாவை விட மாஸ்.. அல்லு அர்ஜூனின் அடுத்த படம் இப்படி தான் இருக்கும்..’ ஹின்ட் தந்த புரொடியூசர்
புஷ்பா 2 பட விவகாரத்தில் அல்லு அர்ஜூன் சிக்கி உள்ள நிலையில், அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து பேசி ஹைப் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் நாக வம்சி.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தின் ப்ரிவியூ ஷோவைப் பார்க்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து, பின் ஜாமீனில் வெளிவந்து வழக்கு நடந்து வருகிறது.
இது ஒருபக்கம் இருக்க, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜூனின் செயல்களை விமர்சித்ததுடன் அந்த சம்பவத்திற்கு பின் சினிமாவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். இதனால், தெலுங்கு நடிகர்களும், திரைப்பட சங்கத்தினரும் முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புஷ்பாவிற்கு ஒத்துழைப்பு
இந்த நிலையில், புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜூன் நடிக்க உள்ள திரைப்படம் குறித்து பேசியுள்ளார் தயாரிப்பாளர் நாக வம்சி. இவர் எம் 9 சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அதன் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்பதற்காக வேறு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்கான வேலையை விரைவில் தொடங்குவார் என்றார்.
இது புஷ்பாவ விட பெருசு
மேலும், அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்குகிறார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனின் கதாப்பாத்திரம் புஷ்பா படத்தை காட்டிலும் பெரிதாக இருக்கும். இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜூன் தன் மொழிநடை, பேச்சு வழக்கு போன்ற சில விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு சில காலம் பிடிக்கும் என நினைக்கிறேன்.
இந்சத படத்தில் நடிப்பதன் மூலம் அல்லு அர்ஜூன் புஷ்பராஜ் கதாப்பாத்திரத்தில் இருந்து மாறி வேறு தோற்றத்திற்கு வருவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்,
நிறைய உழைக்க வேண்டும்
நாங்கள் படத்தின் ஸ்கிரிப்டை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். அல்லு அர்ஜூன் அவரது வேலைகளை முடித்த உடன் த்ரி விக்ரமை சந்திப்பார். இந்த படத்திற்காக அவரது உடல் மொழி மற்றும் தெலுங்கு பேச்சுவழக்கு நிறைய மாற்றுவதால் அவர் இந்த படத்திற்காக நிறைய உழைக்க வேண்டியுள்ளது. இந்தப் படம் முடிய இரண்டு வருடங்கள் ஆகலாம். இதற்காக நிறைய விஎஃப்எக்ஸ் வேலைகள் செய்ய வேண்டும். இதற்காக ஸ்பெஷல் செட் போட வேண்டும்" என்றார்.
4வது முறை கூட்டணி
அல்லு அர்ஜுன் மற்றும் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் இதுவாகும். முன்னதாக இருவரும் ஜூலாயி (2012), சன் ஆஃப் சத்யமூர்த்தி (2025) மற்றும் அல வைகுந்தபுரமுலு போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஜூலை 2023 இல், அர்ஜுன் மற்றும் த்ரிவிக்ரம் ஒரு படத்திற்காக ஒன்று சேர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம், ஹரிகா மற்றும் ஹசின் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளனர். படம் குறித்த அறிவிப்பு வெளியான சமயத்திலேயே "இந்த முறை உருவாகும் கூட்டணி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கும்" என்று அறிவிக்கப்பட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
வருடம் 2 படம்
முன்னதாக நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் டாக் ஷோவில் பேசிய போது, "புஷ்பா படத்திற்காக நான் பல வருடங்களை அர்ப்பணித்துள்ளேன். இனிமேல் வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்