Nageswara Rao Memorial Day: தெலுங்கு சினிமாவின் காதல் மன்னன்! டோலிவுட் திரையுலகுக்கு தனித்துவ அடையாளம் தந்தவர்
தெலுங்கு சினிமாவின் காதல் மன்னனாகவும், தெலுங்கு சினிமாவுக்கு தனித்துவ அடையாளத்தை பெற வைத்த முன்னோடியாகவும் இருந்தவர் மறைந்த நடிகர், தயாரிப்பாளர் அக்கினேனி நாகேஷ்வர ராவ்.

தென்னிந்திய திரையுலக ஜாம்பவான்களில் முக்கியமானவராக இருப்பவர் ஏஎன்ஆர் என்று அழைக்கப்படும் அக்கினேனி நாகேஷ்வர ராவ். தெலுங்கு சினிமாவை இவரது பெயர் இல்லாமல் குறிப்பிட முடியாத அளவில் ஏரளமான சிறந்த படங்களில் நடித்திருப்பதுடன், தயாரிக்கவும் செய்துள்ளார்.
1940களில் இருந்து இறப்பதற்கு முன்பு வரை சுமார் 75 ஆண்டு காலம் வரை நடிகனாக இருந்துள்ளார். தனது சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு என மொத்தம் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வரலாற்று படங்களின் நாயகன் என்று அழைக்கப்படும் நாகேஷ்வர ராவ், தமிழ் துறவி விப்ரா நாரயணன்,தெலுங்கு கவிஞர் தெனாலி ராமன், சமஸ்கிருத புலவர் காளிதாஸ், பழம்பெரும் சிற்பி ஜகனாச்சாரி என பல்வேறு பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடித்துள்ளார்.
இதேபோல் தெலுங்கு சினிமாவின் காதல் மன்னனாக திகழ்ந்து வந்த இவர், சிறந்த கிளாசிக்கால் தெலுங்கு காதல் படங்களின் நாயகனாக இருந்து வந்துள்ளார். அத்துடன் தெலுங்கு சினிமாவின் பல்வேறு வெள்ளி விழா படங்களின் நாயகனாகவும் ஜொலித்துள்ளார். தமிழில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான நவராத்திரி படத்தின் தெலுங்கு பதிப்பில் நாகேஷ்வர ராவ் நடித்திருப்பார். தெலுங்கிலும் அதே பெயரில் வெளியாகி படம் சூப்பர் ஹிட்டானது.
தென்னிந்திய சினிமாக்கள் 1960-70 காலகட்டங்களில் மெட்ராஸை மையப்படுத்திய இயங்கி வந்தன. இதில் தெலுங்கு சினிமா திரையுலகை ஹைதராபாத்துக்கு அழைத்த சென்ற பெருமை இவரை சேரும். அன்னபூர்னா ஸ்டுடியோஸ் என்ற சினிமா ஸ்டுடியோவை ஹைதராபாத்தில் அமைத்து தெலுங்கு சினிமாவுக்கான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
தெலுங்கில் மட்டுமில்லாமல் ஏராளமான தமிழ் சினிமாக்களிலும் ஹீரோ, துணை நடிகர், குணச்சித்திரம் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெயரெடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த காதல் காவியங்களாக இருந்து வரும் தேவதாஸ், லைலா மஜ்னு படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பது நாகேஷ்வர ராவ் தான். இது தவிர மாதர் குல மாணிக்கம், எங்கள் வீட்டு மகாலட்சுமி, கல்யாண பரிசு, தூய உள்ளம், கானல் நீர், மனிதன் மாறவில்லை உள்பட நாகேஷ்வர ராவ் நடிப்பில் பல்வேறு படங்கள் தமிழில் ஹிட்டானதுடன், கவனத்தை பெற்ற படமாக இருந்தது. தமிழில் ஜெமினி கணேசனுடன் இணைந்து இவர் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிகர்களுக்காக ஆந்திர அரசால் வழங்கப்படும் நந்தி விருதுகளை 7 முறை சிறந்த நடிப்புக்காக வாங்கியிருக்கும் நாகேஷ்வர ராவ், 5 பிலிம் பேர் விருதுகள், தாதா சாஹப் பால்கே விருது, இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் நாகேஷ்வர ராவுக்கு அறிஞர் அண்ணா விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் நாகார்ஜுனா இவரது மகனாவார். இளம் ஹீரோவாக இருந்து வரும் நாக சைதன்யா, அகில் ஆகியோர் நாகேஷ்வர ராவ் பேரன்கள் ஆவார்கள்.
தனது மகன் நாகார்ஜுனா, பேரன் நாகசைதன்யாவுடன் இணைந்து மனம் என்ற படத்தில் நடித்திருப்பார் நாகேஷ்வர ராவ். இவர் நடித்த கடைசி திரைப்படமாக இருந்து வரும் மனம், நாகேஷ்வர ராவ் இறப்புக்கு பின்னர் வெளியானது.
தெலுங்கு சினிமாவின் ஜாம்பவானாகவும், மகா கலைஞனாகவும் போற்றப்படும் அக்கினேனி நாகேஷ்ராவ் நினைவு நாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்