HBD Brahmanandam: தெலுங்கு ஹீரோக்களின் ஆஸ்தான காமெடியன்.. கின்னஸ் விருது வென்றவர்.. அக்கட தேசத்து கவுண்டமணி, வடிவேலு
HBD Brahmanandam: தற்போது இருக்கும் நடிகர்களில் மிகவும் குறுகிய காலத்தில் 1,000 படத்தில் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார் பிரம்மானந்தம். 38 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு சினிமாவில் முன்னணி காமெடியனாகவே வலம் வருகிறார்.

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை அற்புதமான காமெடியால் ரசிகர்களை மகிழ்வித்த நடிகர்கள் என கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், யோகிபாபு என பெரும் லிஸ்ட் உள்ளது. ஆனால் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை அப்படியில்லாமல் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சோலோவாக காமெடியில் ரசிகர்கள் சிரிக்க வைத்த நடிகராக இருப்பவர் பிரம்மானந்தம்.
1986இல் தொடங்கிய இவரது சினிமா பயணம் தற்போது வரை தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் உள்பட பிற மொழிகளிலும் தொடர்ந்து வருகிறது. காமெடியனாக மட்டுமில்லாமல் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். டைமிங், ரைமிங், பாடி லாங்குவேஜ், முக பாவனை என காமெடியில் அனைத்து விஷயங்களையும் செய்து ரசிகர்களை மகிழ்விப்பராக இருந்து வருகிறார்.
ஆசிரியர் டூ சினிமா நடிகர்
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரம்மானந்தம், தனது வீட்டில் எட்டாவது பிள்ளையாக இருந்துள்ளார். எம்ஏ படித்து முடித்த இவர் ஆரபத்தில் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். அப்போது நடிப்பு மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், மிமிக்ரி கலைஞராகவும் இருந்துள்ளார்.
இவரது திறமையால் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பக்கபகலு என்ற காமெடி ஷோவில் பெர்பார்ம் செய்யும் வாய்ப்பு கிடைத்து. அங்கு பல்வேறு குரல்கள் மிமிக்ரி செய்து மக்களை மகிழ்வித்த இவரது திறமையை கண்டு வியந்த பிரபல இயக்குநர் ஜந்தியாலா, தனது ஆஹா நா பெல்லண்டா! என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அளித்தார். இந்த படம் பிரம்மானந்தம் வாழ்க்கையில் திருப்புமுனையில் ஏற்படுத்தியது. இவரது திறமையான நடிப்பால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த நிலையில், அதுவரை விரிவுரையாளராகவும், மேடை நாடகங்களிலும் நடித்து வந்த பிரம்மாநந்தம் பின்னர் முழு நேர சினிமா நடிகராக மாறினார்.
ஹீரோக்கள், ரசிகர்கள் மனம் கவர்ந்த காமெடியன்
அந்த காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களாக இருந்த நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற பிரம்மானந்தம்ஹீரோக்கள் மற்றும் ரசிகர்கள் மனம் கவர்ந்த காமெடியனாக உருவெடுத்தார். பல படங்களில் சண்டை, பாடல் காட்சிகளை விட பிரம்மானந்தம் காமெடி காட்சிகள் முத்திரை பதிக்கும் விதமாக அமைந்தன. 1993இல் வெளியான மணி என்ற படத்துக்காக சிறந்த காமெடியனுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றார். முன்னணி ஹீரோக்கள் மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களிலும் தோன்றி மிகவும் பிஸியான நடிகராக உருவெடுத்தார்.
தமிழில் ஒரு காலகடத்தில் படம் தொடங்குவதற்கு முன்னரே தயாரிப்பாளர்கள் கால்ஷீட் பெறும் நடிகர்களாக கவுண்டமணி, வடிவேலு இருந்தார்கள். அதை போல் மற்ற நடிகர்களின் கால்ஷீட் வாங்குவதற்கு முன் பிரம்மானந்தத்தை புக் செய்யும் அளவில் தயாரிப்பாளர் பிரம்மானந்தம் நோக்கி படையெடுத்தார்கள்.
பிரம்மானந்தம் தமிழ் படங்கள்
2004இல் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான நியூ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு 20 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். கில்லி, மொழி, சரோஜா, வானம், ஜில்லா, பயணம், டகால்டி, போன்ற பல்வேறு ஹிட் படங்களில் இவரது காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக அமைந்திருந்தது. நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் சில பாடல்களை பாடியுள்ளார் பிரம்மானந்தம்.
தமிழ் படங்களில் பெரும்பாலும் இவரது கதாபாத்திரத்துக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார்.
கின்னஸ் சாதனை
கடந்த 38 வருடங்களில் 1000 படங்களை முடித்த உலகின் ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதையடுத்து அவரது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகராக இருந்து வரும் இவர் ஆறு முறை நந்தி விருது, இரண்டு முறை பிலிம்பேர் விருது வென்றுளளார். இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இந்திய காமெடி நடிகர்களில் பிரம்மானந்தம் பணக்கார நடிகராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.500 கோடிகளை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது
நடிப்பு தவிர சிற்பியாகவும், ஓவியராகவும் இருந்து வரும் இவர் 38 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடியனாக காமெடி வேடங்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்