நீங்க கொலை செஞ்சிட்டீங்கன்னு சொல்லல.. ஆனா பொய் சொல்றீங்க.. அல்லு அர்ஜூன் மீது பாய்ந்த தயாரிப்பாளர்
அல்லு அர்ஜூன் ஒரு தவறு நடந்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக பொய்களை சொல்லி வருகிறார் என தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ் காட்டமாக பேசியுள்ளார்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்னதாக டிசம்பர் 4ம் தேதி படத்தின் பிரிமியர் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.
சந்தியா தியேட்டர் மரணம்
இந்நிலையில், பிரிமியர் ஷோக்களை பார்க்க வந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக அல்லு அர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு திடீரென வந்தார். இவரைக காண கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு சென்றதில் ரேவதி என்ற பெண்ணும் அவரது மகனும் நெரிசலில் சிக்கினர். இதில் ரேவதி உயிரிழந்த நிலையில், அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.
முதல்வர் குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தை அடுத்து நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்தார். இருப்பினும், அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவானது. மேலும், தெலங்கானா முதல்வர் தெலுங்கு சினிமாவையே குற்றம் சாட்டி பேசினார். அல்லு அர்ஜூன் கைதானவுடன் அவரை சந்திக்க சென்ற கூட்டம், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க செல்லாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். அத்துடன், இனி தெலங்கானாவில் பிரிமியர் ஷோக்களே கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அல்லு அர்ஜூன் மீது விமர்சனம்
இதையடுத்து, முதல்வரை பல நடிகர்களும், திரைப்பட சங்கத்தினரும் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். மேலும், முதல்வரின் ஆலோசனைக்கு கீழ் சினிமாவை கொண்டு வருவதாக கூறினர். ஒரு நடிகருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் மொத்த தெலுங்கு சினிமாவும் ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில் தான் தயாரிப்பாளர்கள் சுரேஷ் பாபு மற்றும் தம்மரெட்டி ஆகியோர் அல்லு அர்ஜூனை விமர்சித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும்
அல்லு அர்ஜுனின் சந்தியா தியேட்டர் சர்ச்சை மற்றும் சினிமா பிரபலங்கள் முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் பாபு ஒரு பேட்டியில் பதிலளித்தார். "நீங்கள் ஒரு பொது இடத்தில் இருக்கும்போது அதை எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. அதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற விஷயங்களை நாம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை மக்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதற்குக் காரணம் நமது வாழ்க்கை முறை. அதனால்தான் இதுபோன்ற இடங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வீட்டில் பறக்கலாம், நடனமாடலாம். எதையும் செய்யலாம்.ஆனால் நீங்கள் வெளியே வரும்போது, கொஞ்சம் முறையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்" என்று சுரேஷ் பாபு கூறினார்.
திரையுலகமே தலை வணங்க வேண்டிய நிலை
மற்றொரு தயாரிப்பாளரான தம்மரெட்டி பரத்வாஜ் ஆரம்பத்தில் இருந்தே அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டி வருகிறார். சமீபத்தில், இந்த பிரச்சினைக்கு மீண்டும் பதிலளித்த அவர், அல்லு அர்ஜூனால் மட்டுமே ஒட்டுமொத்த திரையுலகமும் தலைவணங்க வேண்டியிருந்தது என்று கூறினார். ஒரு மனிதனுக்காக இப்போது, ஒட்டுமொத்த திரையுலகமும் தலை குனிந்து முதல்வருடன் சென்று நிற்க வேண்டிய அவசியம் என்ன? . இந்த தவறை அந்த நபர் ஏற்றுக்கொண்டாரா? என்ன நடந்தது என்று தெரியவில்லை.
பொய் பேசுகிறார்
அவர் கொலை செய்தார் என்று நான் சொல்லவில்லை. அவர் ஒரு ரோட்ஷோ செய்கிறார் என்று தெரியாமலேயே அதற்கு அவர் பொறுப்பேற்றார். அவர் உள்நோக்கம் கொண்டாரா அல்லது தானாக செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. அது தவறு. இந்த தவறு நடந்த பிறகும், அதை மறைக்க மீண்டும் சில பொய்களை கூறி வருகிறார். இது அரசாங்கத்திற்கும் ஒட்டுமொத்தமாக தொழில்துறைக்கும் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. திரையுலக பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக சென்று சமரசம் பேசுகின்றனர். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் ஈகோவுக்கு தலைவணங்க வேண்டும்" என்று மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.
டாபிக்ஸ்