இத்தோட நிறுத்திக்கோங்க.. தெலுங்கு சினிமாவை எச்சரித்த மகளிர் ஆணையம்.. என்ன நடந்தது?
தெலுங்கு சினிமாக்களில் பெண்களின் மரியாதையை குறைக்கும் விதமாக பாடல்கள் அதிகளவில் வருவதாகவும், நடன அசைவுகள் மோசமாக உள்ளதாகவும் எழுந்த புகார்களை அடுத்து தெலங்கானா மாநில மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'டாகு மகாராஜ்' படத்தின் 'தபிடி திபிடி' பாடலில் உள்ள நடன அசைவுகள் குறித்து அதிருப்தி வெளிப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது 'ராபின்ஹூட்' படத்தின் 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற லிரிக்கல் வீடியோவில் கெதிகா ஷர்மா ஆடிய நடன அசைவுகள் குறித்து சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவுக்கு எச்சரிக்கை
இந்தப் பாடலில் மிகவும் அருவருப்பான நடன அசைவுகள் உள்ளன எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து நேற்று (மார்ச் 20) தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம் கருத்து தெரிவித்ததுடன், தெலுங்கு சினிமாவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தொடரும் புகார்கள்
இதுகுறித்து கருத்து தெரிவித்த மகளிர் ஆணையம், "சமீபத்தில் சில சினிமா பாடல்களில் உள்ள நடன அசைவுகள் அருவருப்பாக உள்ளன என தங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. சக்திவாய்ந்த ஊடகமாக இருக்கும் சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், அருவருப்பாக காட்டுவது சரியல்ல" எனக் கூறியுள்ளது.
கொரியோகிராஃபர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும், இல்லையெனில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
நடன அசைவுகளை நீக்க வேண்டும்
பெண்களை அருவருப்பாக காட்டும் வகையில் உள்ள நடன அசைவுகளை பாடலில் இருந்து நீக்க வேண்டும் என மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சமூகத்திற்கு நன்மை பயக்கும் செய்திகளை, பெண்களின் மரியாதையை காக்கும் பொறுப்பு சினிமாத்துறைக்கு உள்ளது, சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
'ராபின்ஹூட்' படத்தின் 'அதிதா சர்ப்ரைஸ்' பாடல் குறித்து மகளிர் ஆணையத்திற்கு சில புகார்கள் வந்துள்ளன. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அருவருப்பான நடன அசைவுகள் உள்ளன என புகார்கள் வந்துள்ளன. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்த சூழலில் மகளிர் ஆணையம் பதிலளித்துள்ளது.
படக்குழு நடன அசைவுகளை நீக்குமா?
'அதிதா சர்ப்ரைஸ்' பாடலில் விமர்சனம் செய்யப்பட்ட நடன அசைவுகளை படக்குழு நீக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த பாடலுக்கு ஷேகர் மாஸ்டர் நடன அமைப்பு செய்துள்ளார். முன்னதாக 'தபிடி திபிடி' பாடலுக்கும் அவர் தான் நடன அமைப்பு செய்துள்ளார். இதனால் ஷேகர் மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 'அதிதா சர்ப்ரைஸ்' பாடலில் ஸ்கர்ட்டை இழுத்து கெதிகா ஷர்மா ஆடிய நடன அசைவுக்கு அதிக விமர்சனங்கள் வந்துள்ளன. இதை படக்குழு நீக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ராபின்ஹூட் படம்
'ராபின்ஹூட்' படத்தில் 'நிதின்' ஹீரோவாக நடித்துள்ளார்.. ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்துள்ளார். கெதிகா ஷர்மா சிறப்பு பாடலில் ஆடி உள்ளார். இந்த படத்தை வெங்கி குடுமுல இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் விளம்பரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிதின் - வெங்கி கூட்டணியில் முன்னதாக வெளியான 'பீஷ்மா' பெரிய வெற்றி பெற்றது. இவர்களின் கூட்டணி மீண்டும் வந்திருப்பதால் 'ராபின்ஹூட்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

டாபிக்ஸ்